No menu items!

அண்ணாமலை அட்டாக் எடப்பாடி அமைதி – மிஸ் ரகசியா

அண்ணாமலை அட்டாக் எடப்பாடி அமைதி – மிஸ் ரகசியா

 “தூங்கக்கூட நேரமில்லாம பம்பரமா சுத்திட்டு இருக்கார் உதயநிதி ஸ்டாலின்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “ஏன், என்னாச்சு?”

 “எல்லாம் சேலத்துல நடக்கப்போற இளைஞர் அணி மாநாட்டுக்காகத்தான். டிசம்பரில் சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு நடக்கப்போகுது. எடப்பாடியோட ஏரியால நடக்கப்போற இந்த மாநாட்டை வெற்றிகரமா நடத்திக் காட்டணும்னு உதயநிதி தீவிரமா இருக்கார். இதுக்காக அவர் மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திட்டு வர்றார். கடந்த 15 நாட்கள்ல மட்டும் 11 மாவட்டங்கள்ல ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கார்.  கடலூர்ல  நடந்த ஆலோசனை கூட்டத்துல மாவட்ட  அமைச்சர் கணேசன் 1,11.11,111 ரூபாயை  சேலம் மாநாட்டு செலவுக்கு நன்கொடையா கொடுத்திருக்கார். இன்னொரு மாவட்ட அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் முதல் தவணையா 2 கோடி ரூபாய் கொடுக்கறதா அறிவிச்சிருக்கார். இப்படி ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டங்கள்லயும் வசூலும் நடந்துட்டு இருக்கு. பணம் கொடுக்கறதோட நின்னுடக் கூடாது,  மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்கறதுலயும் கவனம் செலுத்தணும். ஏராளமான இளைஞர்களை திரட்டணும்னு அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் உதயநிதி கட்டளை போட்டிருக்காராம்.”

“கட்சியில நம்பர் 2 இடத்துக்கு வேகமா முன்னேறிட்டு வர்றார்னு சொல்லு.”

 “கட்சியில மட்டுமில்ல. ஆட்சியிலயும் தான்தான் நம்பர் 2-ன்னு பல இடங்கள்ல மறைமுகமா உணர்த்திட்டு வர்றார். இளைஞரணி கூட்டத்துக்காக மாவட்டங்களுக்கு போகும்போது, கூடவே அரசு அதிகாரிகளையும் கூட்டிட்டு போறாராம். ஒவ்வொரு மாவட்டத்துலயும், ‘இங்க அரசோட நலத்திட்டங்களை எத்தனை பேருக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கீங்க’ன்னு அதிகாரிங்ககிட்ட விசாரிக்கறாராம். கூடவே, ‘பட்டா மாறுதல் எல்லாம் தாமதமில்லாம நடக்குதா?, மகளிர் உரிமைத் தொகைக்கு எத்தனை விண்ணப்பங்கள் வந்திருக்கு?, அதையெல்லாம் பரிசீலனை செய்யறீங்களா? காலை உணவு திட்டத்தால  எத்தனை மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்?’ன்னு அதிகாரிகளை கேள்விகளால துளைச்சு எடுக்கறாராம். முதலமைச்சரோட  ஆய்வுக் கூட்டத்தை விட உதயநிதி ஸ்டாலினோட ஆய்வுக் கூட்டத்துக்கு அதிகாரிங்க கூடுதல் கவனம் செலுத்தறாங்களாம். இதுதவிர எந்த மாவட்டத்துக்கு போனாலும், அங்க இருக்கற பள்ளியில மாணவர்களோட உட்கார்ந்து காலை உணவுத் திட்டத்துல சாப்பிடறதையும் உதயநிதி வழக்கமா வச்சிருக்கார். அதனால அதிகாரிங்க அவர் வர்ற நாட்கள்ல மாவட்டத்துல நடக்கற காலை உணவுத் திட்ட சமையல்ல கூடுதல் கவனம் செலுத்தறாங்க.”

 “நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராகிட்டு இருக்குனு தெரியுது.  அப்பா ஸ்டாலின் பாஜகவுக்கு எதிரா வரிஞ்சு கட்டிட்டு நிக்கிறார், முன்னைவிட காட்டமா இருக்கிறாரே?”

 “ஆமாம். இப்ப வெளி வந்த மத்திய தணிக்கை குழு அறிக்கைல மத்திய அரசு துறைகள்ல நடக்கிற பல முறைகேடுகள் வெளில வந்துருக்கு. இது திமுகவுக்கு ரொம்ப சாதகமா இருக்கு. சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி ஊழல் பற்றி  மோடி பேசலாமான்னு திருப்பி அடிக்க தொடங்கியிருக்கு திமுக. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட  எல்லா அமைச்சர்களும் சிஏஜி சுட்டிக் காட்டின  குளறுபடிகளை ஊழல்னு பெரிசாக்கி பேசத் தொடங்கி இருக்காங்க. முதல்வரும் காட்டமா கேள்விகள் எழுப்புறார்.  முரசொலியும் இதுபத்தி தொடர்ந்து தலையங்கம் வெளியிட்டு வருது. திமுக ஐடி விங்கும் தன் பங்குக்கு சிஏஜி அறிக்கையை சோஷியல் மீடியாவுல பரப்பிக்கிட்டு வருது. திமுக மேல ஊழல் புகார்களை சொன்ன பாஜக தலைவர்கள், இப்ப தங்கள் மீதான ஊழல் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க.”

 “சிக்கலான சூழல்தான்.”

 “திமுகவின் இந்த அதிரடியை எதிர்க்க அண்ணாமலை தலைமையில மாநில நிர்வாகிகள்,  மாவட்டத் தலைவர்கள்  கூட்டம் நடந்திருக்கு. எப்படியெல்லாம் திமுகவுக்கு பதிலடி கொடுக்கணும்னு இதுல அண்ணாமலை க்ளாஸ் எடுத்திருக்காரு. இந்த கூட்டத்துல திமுகவோட சேர்ந்து அதிமுகவையும் அவர் அட்டாக் பண்ணி பேசியிருக்கிறார்.  மதுரை அதிமுக மாநாட்டுல கூட்டம் சேர்ந்தாலும், அதுல 90 சதவீதத்துக்கு மேல காசு கொடுத்து சேர்த்த கூட்டம்.  இந்த மாநாட்டால அதிமுக வாக்கு வங்கி கூடல. அப்படியேத்தான் இருக்குன்னு பேசி இருக்கார் அண்ணாமலை.”

 “இதுக்கு எடப்பாடியோட ரியாக்‌ஷன் என்ன?”

 “இது எடப்பாடி பழனிசாமி காதுக்கும் போயிருக்கு. அமைதியா இருப்போம் தேர்தல் நேரத்துல பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்கிறார்.”

“பிரஸ் மீட்ல பாஜகவை ஆதரிச்சு பேசியிருக்கிறாரே?”

“ஆமாம், பாஜகவுடன் திமுக கூட்டணி வச்ச கதையை சொல்லி நீங்க வைக்கலாம், நாங்க வைக்கக் கூடாதானு கேட்டிருக்கிறார். இந்தப் பேச்சைக் கேட்டு பாஜககாரங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். எடப்பாடி பாஜகவுக்காக வரிஞ்சுக் கட்டுவார்னு அவங்க நினைக்கல”

“என்ன காரணம் இப்படி பேசுனதுக்கு”

“கொட நாடு வழக்குதான் காரணமாயிருக்கும்னு சொல்றாங்க. கொட நாடு வழக்கை சிபிஐக்கு மாத்தணும்னு வேற கோரிக்கை வச்சிருக்கிறார்ல. எப்படியாவது கொட நாட்டு வழக்கை மத்திய அரசு கைக்கு கொண்டு போயிரணும்னு பார்க்கிறார்”

“ரொம்ப பயந்துட்டாரா?”

”இல்லை, மதுரை மாநாட்டுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் அதிகமாகி இருக்கு. அவரோட முக்கிய டார்கெட் திமுகதான். அவங்கதான் நம்ம எதிரிகள். இப்போதைக்கு பாஜகவுடன் சச்சரவு இல்லாம போகலாம்னு நினைக்கிறார்”

 “அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஓபிஎஸ் என்ன முடிவெடுத்திருக்கார்?”

 “அவரா என்னைக்கு முடிவெடுத்து இருக்கார். மத்தவங்களோட ஆலோசனையை கேட்டு அதன்படி நடக்கறதுதானே அவரோட ஸ்டைல். அந்த வகையில் இப்ப பன்ருட்டியாரோட அட்வைஸைத்தான் அதிகமா கேட்கறார். இன்னும் வழக்கு, நீதிமன்றம்னு சுத்தாம உடனடியா தினகரனை மாதிரி ஒரு சொந்தக் கட்சி ஆரம்பிங்கன்னு பன்ருட்டியார் ஓபிஎஸ்க்கு அட்வைஸ் கொடுத்திருக்கார்.”

 “அப்போ ஓபிஎஸ்  தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?”

 “ஆரம்பிக்கறதாத்தான் இருந்தார். இதுபத்தி அமித் ஷாகிட்ட ஆலோசனையும் பண்ணியிருக்கார். ஆனா அமித் ஷா, இப்போதைக்கு தனிக்கட்சியெல்லாம் தொடங்க்க் கூடாதுன்னு கராறா சொல்லிட்டாராம். அதனால என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கார்.”

”அவருக்குதான் துணைக்கு பண்ருட்டியார் இருக்கிறாரே…ரெண்டு பேரும் பேசிக்கிட்டே பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்”

“ஒரு முன்னாள் முதல்வர், தர்ம யுத்தம் செய்தவர்ன்ற மரியாதையே இல்லாம கிண்டல் பண்றிங்களா?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...