No menu items!

நாடாளுமன்றத்தின் திடீர் கூட்டம் – என்ன காரணம்?

நாடாளுமன்றத்தின் திடீர் கூட்டம் – என்ன காரணம்?

செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை – ஐந்து நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று செய்திகள் வருகின்றன.

நாடாளுமன்றத்துக்கு சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படுவது மிக அரிது. 1977ல் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்காக சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. 1991ல் ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்காக சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டது. 2008ல் ஐக்கிய முற்போக்கு அரசுக்கு கொடுத்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டன. அந்த சமயத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டது. இப்படி சில அரிதான நிகழ்வுகள் இருக்கின்றன.

மோடி பிரதமர் பொறுப்புக்கு வந்தப் பிறகு ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதற்ககாக 2017ல் ஒரே ஒரு நாள் ஒருங்கிணைந்த நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டது.

இப்போது கூட்டப்படுவதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல், சந்திராயன் வெற்றி, ஜி20 கூட்டம்..இப்படி பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் யாருக்கும் உண்மையான காரணம் தெரியவில்லை.

ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான பணிகள் துவக்கப்படும், அதற்காகதான் இந்தக் கூட்டம் என்று சிலர் அழுத்திச் சொல்லுகிறார்கள்.

ஆனால் 2024 நாடளுமன்றத் தேர்தலை நாடு முழுவதற்குமான மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து நடத்த முடியுமா? அத்தனை விரைவில் பணிகளை செய்ய முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த வருட நவம்பர் – டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்திஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அந்த ஐந்து மாநிலத் தேர்தல்களுடன் நாடாளுமன்றத் தேர்தலையும் முன் கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி தகவல்கள் சொல்கின்றன.

ஐந்து நாட்கள் நடத்தப்படும் சிறப்புக் கூட்டத் தொடரில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு செய்த சாதனைகள் பட்டியலிடப்படும். மத்திய அமைச்சர்கள் தங்கள் துறையின் சாதனைகளை நாடாளுமன்றத்தின் எடுத்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி நாளில் தனது அரசின் சாதனைகளை குறித்து பிரதமர் உரை நிகழ்த்துவார் என்றும் செய்திகள் சொல்லுகின்றன. பொதுவாய் இது போன்ற உரைகள் நாடாளுமன்ற இறுதிக் கூட்டத் தொடரில்தான் நடத்தப்படும்.

திடீரென்று இந்த சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது பாஜகவின் பதற்றத்தைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க் கட்சிகள் மும்பையில் தங்கள் ஒற்றுமையைக் காட்டிக் கொண்டிருக்க ஆளும் பாஜகவும் தங்கள் பணியைத் துவங்கிவிட்டது என்பது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டியிருப்பதிலிருந்து தெரிகிறது.

நடப்பு நாடாளுமன்றம் மே 24 2019ல் அமைக்கப்பட்டது. அதன் பதவி காலம் 2023 மே 18ஆம் தேதியுடம் முடிகிறது. இயல்பாய் தேர்தல்கள் 2023 ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய சூழல்களைப் பார்க்கும்போது அதுவரை காத்திருக்க பாஜக தயாராக இல்லை என்பது போல்தான் தெரிகிறது.

இந்த வருட இறுதியிலேயே நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...