No menu items!

தினமலரின் ‘கக்கூஸ்’ தலைப்பு – என்ன காரணம்?

தினமலரின் ‘கக்கூஸ்’ தலைப்பு – என்ன காரணம்?

தமிழ்நாடு அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து, ‘மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ என ‘தினமலர்’ நாளிதழின் சேலம், ஈரோடு பதிப்புகளில் வெளியான தலைப்புச் செய்தி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளரும் ‘அறம்’ இணைய இதழ் ஆசிரியருமான சாவித்திரி கண்ணன் அளித்த பேட்டி இங்கே…

சத்தியமூர்த்தி அவர்களை ஆசிரியராகக் கொண்ட தினமலரின் சேலம், ஈரோடு பதிப்புகளில் மட்டும் சர்ச்சையான குறிப்பிட்ட தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு மூத்த பத்திரிகையாளராக நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

தினமலருக்கு வெவ்வேறு பதிப்புகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அனைத்து பதிப்பு ஆசிரியர்களும் கிட்டதட்ட ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள்தான். இந்த தலைப்பு சர்ச்சையான பிறகு மதுரை, சென்னை பதிப்புகளின் ஆசிரியர் ராமசுப்பு, ‘எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், இவர் தலைமையில் வெளியான  ‘தினமலர்’ பதிப்புகளின் தலைப்புகளைப் பார்த்தால், இதற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை உணரலாம்.

கார் விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்தால், அந்த செய்தியை, ‘கார்கள் டமால் நாலு பேர் பலி’ என்ற தலைப்பில் வெளியிடுவார்கள். தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த போது, ஒரு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி பற்றிய செய்தியில், ‘பழனி வழங்கினார்’ என்று போட்டார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பற்றி ‘மரம்வெட்டி’ என்றுதான் நீண்ட காலமாக எழுதி வந்தார்கள். அவர்கள் சொல்லி சொல்லி பார்த்து கேட்காத நிலையில், அலுவலகத்தில் புகுந்து நொறுக்கி பின்னர்தான். நிறுத்தினார்கள். இதுதான் அவர்கள் வரலாறு. காந்தி கொல்லப்பட்ட போது ‘தினமலர்’ நாளிதழ் இருந்திருந்தால், ‘கோட்சே டுமில், காந்தி பனால்’ என்றுதான் தலைப்பு வைத்திருப்பார்கள்.

யாரையும் எடுத்தெறிந்து பேசுவார்கள். மற்றவர்கள் புண்படுவார்களே என கடுகளவும் யோசிக்க மாட்டார்கள். இதுதான் அவர்களின் இயல்பு. கன்னியமான வார்த்தை பிரயோகம் எப்போதும் அவர்களிடம் இருக்காது. ஏடாகூடமான ஒரு தலைப்பு வைத்து கவனத்தை ஈர்ப்பதுதான் அவர்கள் நோக்கம்.

இந்த செய்தியில் உணவு பற்றி சொல்லிவிட்டு, அடுத்து ‘கக்கூஸ்’ என்ற வார்த்தையை போடுகிறார்கள். இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் நோக்கமும் இதுதான். எதிர்மறையாக இருந்தாலும் அதன்மூலம் கிடைக்கும் விளம்பர ஆதாயம்தான் அவர்கள் இலக்கு.

‘தினமலர்’ நிறுவனர்களிடையேயான பாகப்பிரிவினைக்கு பின்னர் சேலம், ஈரோடு பதிப்புகளை சத்தியமூர்த்தி கடந்த 23 ஆண்டுகளாக நடந்தி வருகிறார். தினமலரின் மற்ற ஊர் பதிப்புகளின் ஆசிரியராக ராமசுப்பு இருக்கிறார். இந்நிலையில், ராமசுப்புவும் சத்தியமூர்த்தியின் இந்த செயல் தொடர்பாக, ‘அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய இப்படி ஒரு செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது’ என்று கூறியுள்ளாரே?

அவர்கள் குடும்பத்துக்குள் நிறைய பாகப்பிரிவினை சண்டைகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் இடையே வழக்குகள் இருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் ராமசுப்புவின் கண்டனமே தவிர, பள்ளிக் குழந்தைகள் மீதான அக்கறை காரணமல்ல.

தினமலரின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், கண்டனத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை சமூக வலைதளங்களில் வைக்கப்படுகிறது. சட்டபூர்வ நடவடிக்கை அவசியம் என நீங்கள் கருதுகிறீர்களா?

கண்டிப்பாக. நானோ நீங்களோ அல்லது சராசரி மனிதர்களோ இதனை கண்டிக்கலாம். ஆனால், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரும் அப்படி ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நம்மைப் போல் கண்டித்துவிட்டு கடந்து செல்வது, அதில் வார்த்தை ஜாலங்களை காட்டுவது, ஏற்புடையதல்ல. போலித்தனமான ஒரு நடவடிக்கை.

‘தினமலர்’ சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். அவர்களிடம் மிகப்பெரிய வாசகர்கள் வட்டம் இருக்கிறது. அகில இந்தியளவில் அவர்களுக்கு ஒரு லாஃபி   இருக்கிறது. அதற்கெல்லாம் முதலமைச்சர் பயப்படுகிறார். இது முதல்வர் பதவிக்கு அழகல்ல.

ஆனால், இந்த விவகாரத்தில் தினமலருக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது கருத்து சுதந்திரத்தை ஊடக சுதந்திரத்தை பாதிப்பதாக ஆகாதா?

நிச்சயமாக ஆகாது. ஒருவேளை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஊடகக்காரர்கள் யாருமோ பத்திரிகையாளர்கள் சங்கங்களோ அந்த நடவடிக்கைக்கு எதிராகவோ தினமலருக்கு ஆதரவாகவோ வரமாட்டார்கள். ஏனெனில், தினமலரின் இந்த தலைப்பு மனிதகுலத்துக்கு எதிரானது; யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குழந்தைகளின் உணவுடன் ‘கக்கூஸ்’ என்பதை இணைப்பது எவ்வளவு வக்கிரமான மனதின் வெளிப்பாடு என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் ‘தினமலர்’ புகழ்ந்துதான் எழுதுகிறது. மக்களை பாதிக்கக்கூடிய திட்டம் என வெளிப்படையாக தெரியக் கூடியவற்றையும் ஆதரித்து, வக்காலத்து வாங்கி, எதிர்ப்பவர்களை கொச்சைப்படுத்தி எழுதுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாநில திமுக அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களையும், அது இதுபோல் நல்ல திட்டமாக இருந்தாலும் கேவலப்படுத்துக்கிறார்கள். அவர்களின் திராவிட வெறுப்புதான் இதற்கு காரணம்.

ஒரு சாராரை எதிரியாக்கி, அவர்கள் அயோக்கியர்கள், சமூகத்துக்கு எதிரானவர்கள், ஊழல்வாதிகள், தீமையானவர்கள் என தொடர்ச்சியாக நாளும் பொழுதும் ஒவ்வொரு செய்தியிலும் கட்டமைத்துக்கொண்டே வருகிறார்கள். இந்த வெறுப்பு அவர்கள் வாசகர்களுக்கும் கடத்தப்படுகிறது. இதனால், ‘தினமலர்’ வாசகர்களும் மாநில அரசாங்கம் எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அதற்கு எதிரான நிலைப்பாடு எடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட போதிருந்து அதை எதிர்த்து எழுதியும் பேசியும் வருபவர்களை சமூக ஊடகங்களிலும் பார்க்கலாம்.

‘தினமலர்’ தொடர் செயல்பாடுகளை பார்த்தால், பாஜக இங்கே கட்டமைக்க விரும்பும் ஒரு வெறுப்பு அரசியலுக்கு துணைப் போகக்கூடிய ஒரு அம்சம் அதில் இருப்பதை பார்க்கலாம். ஊடகங்களும் ஊடகர்களும், சமூகத்தில் இதுபோல் குறிப்பிட்ட சிலருக்கு எதிராக ஒரு கட்சி போல் செயல்பட்டு. வெறுப்பையும் வன்முறையையும் வளர்க்கும் வகையில் இல்லாமல் அன்பையும் பிணைப்பையும் ஏற்படுத்தும் வகையில்தான் இருக்கவேண்டும்.

1 COMMENT

  1. திட்டத்தில் குறை நிறைகளை பற்றி ஆய்வு செய்து படித்து சில வாரங்கள் நீரில் கண்டு எழுதி இருந்தால் சரியாக இருக்கும் .His Mastersபோல தடாலடிதான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...