No menu items!

அமர் பிரசாத் ரெட்டிக்கு அடுத்து அண்ணாமலை? – மிஸ் ரகசியா

அமர் பிரசாத் ரெட்டிக்கு அடுத்து அண்ணாமலை? – மிஸ் ரகசியா

தீபாவளிக்கு வாங்கிய பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா. கூடவே பை நிறைய தீபாவளி பலகாரங்களையும் கொண்டு வந்திருந்தாள்.

“இந்த வருஷம் தீபாவளியை சூப்பரா கொண்டாடின ஆள் நீதான்னு நினைக்கிறேன்.”

“என்வைவிட இன்னொருத்தர் சூப்பரா தீபாவளி கொண்டாடி இருக்கார். அவர்தான் அமர் பிரசாத் ரெட்டி.”

“ஜாமீன் கிடைச்சாலும் அவர் தீபாவளி அன்னைக்கு அவர் வெளிய வர்றது சந்தேகம்னு சொல்லிட்டு இருந்தாங்களே?”

“அப்படியும் சொல்லிட்டு இருந்தாங்க. அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்திருந்தாலும், அந்த உத்தரவு சனிக்கிழமைதான் சிறைக்கு கிடைக்கும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. திங்கள்கிழமை அரசு விடுமுறை. அதனால செவ்வாய்க்கிழமைதான் அவர் ஜாமீனில் வருவார். அவருக்கு சிறையிலதான் தீபாவளின்னு திமுக தரப்புல சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா அண்ணாமலை ஒரு வாரத்துக்கு முன்னாடியே அமர்பிரசாத் ரெட்டி தீபாவளிக்கு வருவார்னு அவரோட குடும்பத்துக்கு உறுதி கொடுத்திருந்தாராம். வாக்கு கொடுக்கறதோட மட்டும் இல்லாம, அதுக்காக அவர் கடுமையா உழைச்சிருக்கார். சனி, ஞாயிறு சிக்கல் வரும்னு தெரிஞ்சதும், பேச வேண்டியவங்ககிட்ட பேசியிருக்கார். அவரோட ஏற்பாடுல தீர்ப்பு வந்த அன்னைக்கு நைட்டே நீதிபதிகிட்ட ஆணையை வாங்கியிருக்காங்க. அதை சிறைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. இப்படி ஒரே நாளில் சிறைக்குள் நீதிமன்ற உத்தரவை அனுப்பி வைக்கிற அளவு பெரிய ஆளாகி இருக்கார் அமர்பிரசாத் ரெட்டி. சிறையில் இருந்து வந்தவர் தீபாவளியை உற்சாகமா கொண்டாடி இருக்கார். ஆனா என்ன ஒண்ணு… போலீஸ் ஸ்டேஷனுக்கு 2 தடவை போய் கையெழுத்து போட வேண்டி இருந்திருக்கு.”

“ஜெயில்ல செந்தில்பாலாஜியை சந்திக்க அவர் முயற்சி செஞ்சாராமே?”

“பரவாயில்லயே நீங்க ஜெயில்லகூட ஆள் வச்சிருக்கீங்களே… அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருக்கும்போது சில சிறை அதிகாரிகள்கிட்ட, ‘நான் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்ய முடியுமா’ன்னு கேட்டிருக்கார். ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லைன்னு அவங்க சொல்லி இருக்காங்க. ஏற்கெனவே அண்ணாமலை அடிக்கடி, ‘செந்தில்பாலாஜி சிறையை விட்டு வெளியே வரும் போது திமுக அமைச்சராக மட்டுமல்ல… திமுக உறுப்பினராகக்கூட இருக்க மாட்டார்’னு தொடர்ந்து சொல்லிட்டு வர்றார். இப்ப அமர் பிரசாத் ரெட்டி அவரைச் சந்திக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கார். திமுக இதையெல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்து யோசிக்குது.”

“பதிலுக்கு திமுக தலைமையோட நடவடிக்கை என்ன?”

“அமர்பிரசாத் ரெட்டியை சிறைக்கு அனுப்புன மாதிரி அண்ணாமலையை கொஞ்ச நாள் உள்ள வைக்கலாமான்னு அவங்க யோசிக்கறாங்களாம். அண்ணாமலை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசும்போது, இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாதுனு கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனனு சொல்லியிருந்தார். ஆனா பட்டாசு வெடிக்கக் கூடாதுனு வழக்கு போட்டது அவங்க இல்ல”

“ஆமா, அந்த பட்டாசுகளுக்கு எதிரான வழக்கைப் போட்டது பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி மல்லிகானு செய்தி இருக்கே”

“ஆமாம், கரெக்ட் அவங்களும் வழக்கு போட்டுருக்காங்க. இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி நெட்வொர்க் (Indian Social Responsibility Network)ன்ற அமைப்புல ஜே.பி.நட்டாவோட மனைவி இருக்காங்க. அவங்க மட்டுமில்லாம பல பாஜக பிரமுகர்கள் இதில இருக்காங்க, இந்த அமைப்பு மட்டுமில்ல பட்டாசுகளை தடை செய்ய சொல்லி பல வழக்குகள் இருக்கு. உச்ச நீதிமன்றம் தடை கொடுத்தது ஆர்ஜுன் கோபலும் மற்றவர்களும் போட்ட வழக்குனு உச்ச நீதிமன்ற உத்தரவுல இருக்கு ”

“சரி, அதுக்கென்ன இப்போ?”

“அண்ணாமலை பேசுனது தப்பு, தேவையில்லாம கிறிஸ்துவ அமைப்பு மேல குற்றஞ்சாட்டி மத மோதலை உண்டு பண்ணுறார்னு பியூஸ் மனுஷ் வழக்கு போட்டிருக்கிறார். அது பத்தின விசாரணை ஆரம்பிச்சுடுச்சு”

”சரி, அதனால?”

“அண்ணாமலை மத மோதலுக்கு காரணமாயிருக்கிறார்னு அரெஸ்ட் பண்ணலாமனு யோசிக்கிறாங்க”

“அண்ணாமலைக்கே ஆப்பா?”

“முழுசா கேளுங்க. அவர் மேல இன்னொரு வழக்கையும் போடப் போறாங்க. ‘மத்திய அரசின் சிறு குறு தொழில் லோன் மேளா’ன்னு ஒரு நிகழ்ச்சியை பாஜக நடத்திச்சு. இதில் மத்திய அரசின் சின்னம் பெயர் எல்லாம் பயன்படுத்தப்பட்டது. நடிகை நமிதாகூட தன் கணவரோட இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டார். உண்மையில் இது மத்திய அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி கிடையாதாம். இதுபற்றி ஒரு புகார் வர, அந்த நிகழ்ச்சி நிர்வாகியிடம் சேலம் காவல்துறை விசாரணை நடத்திச்சு. இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சி பாதியில நிறுத்தப்பட்டிருக்கு. இந்த நிகழ்ச்சிய ஏற்பாடு செய்த ராமமூர்த்திங்கிற பிரமுகர், ‘இதற்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்திருக்கிறோம். அண்ணாமலை உள்பட பல நிர்வாகிகளுக்கு நாங்கள் பணம் தந்திருக்கிறோம்’னு போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கார். இது எந்த அளவுக்கு உண்மை இதில் அண்ணாமலையோட பங்களிப்பு என்னன்னு காவல் துறை விசாரிச்சுட்டு வருது.”

”நமீதா கணவர் மேலேயே புகார்கள் வந்து இருக்கே”

“ஆமா, அதைதான் சொல்ல வந்தேன். அவரும் காசு கொடுத்துதான் பாஜகவுல பதவி வாங்கியிருக்கிறார்னு சொல்றாங்க. வேற யாருக்கோ கொடுக்க வேண்டிய பதவியை இவருக்கு கொடுத்துட்டாங்களாம். இப்ப அண்ணாமலை மீது பணம் வாங்குன இந்தக் குற்றாச்சாட்டும் சேர்ந்திருக்கு”

”பாஜக நிர்வாகிகள் மேல தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்துக்கிட்டே இருக்கே”

“ஆமா. அதான் மேலிடத்தின் கவலை, அண்ணாமலையை கூப்ட்டு கேட்டிருக்காங்க. தொடர்ந்து புகார்கள் வருதேனு. நாடாளுமன்றத் தேர்தல் முடியட்டும், அப்புறம் களையெடுத்துறலாம்னு பதில் சொன்னாராம்”

”ஆளுநருக்கு எதிரா தமிழக அரசு தொடர்ந்த வழக்கு எந்த அளவுல இருக்கு?”

“இந்த வழக்கில் சட்ட ரீதியா மட்டுமில்லாம அரசியல் ரீதியாவும் ஆளுநர் பதில் மனு தாக்கல் செய்யப் போறாராம். துணைவேந்தர் நியமனத்தில் சுதந்திரமா செயல்பட விடாமல் திமுக அரசு தடுக்குது. துணைவேந்தர்கள் நியமனத்திற்கு பணம் வாங்குது. உயர் கல்வித் துறை அமைச்சர் பல்கலைக்கழக நிதியை தவறா பயன்படுத்தறார்னு ஏகப்பட்ட புகார்களை இந்த பதில் மனுவில சேர்க்கிறாங்களாம். இதுக்காக சில துணைவேந்தர்களை தொடர்புகொண்டு ஆளுநர் விவரங்களை சேகரிச்சிருக்கார். மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்கள் கடந்த சில நாட்களா ஆளுநர் மாளிகையில் தங்கி இந்த பதில் மனு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்காங்க. ஆளுநரோட பதில் மனு இன்னும் பரபரப்பா இருக்கும்னு ஆளுநர் மாளிகையில பேசிக்கறாங்க.”

”ஆளுநர் மாளிகை வாசல்ல பெட்ரோல் பாட்டிலை கொளுத்திப் போட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமை எடுத்திருக்கே?”

“ஆமாம், இது ரொம்ப சாதரண வழக்கு. கவர்னர் டெல்லி கொடுத்த பிரஷர்னால இந்த வழக்கை எடுத்திருக்காங்கனு காவல்துறை வட்டாரத்துல பேச்சு. இந்த மாதிரி சின்ன சாதாரண வழக்கை தேசிய அளவுல உள்ள அமைப்பு கையில எடுக்குதுனா எந்த அளவு மத்திய அரசு அமைப்புகளை அரசியலுக்காக பயன்படுத்துறாங்கனு தெரியுதுனு சொல்றாங்க”

”காவல்துறை வீடியோ போட்டுக் காட்டி விளக்கம் கொடுத்துட்டாங்க. அந்த ரவுடியை குண்டாஸ்ல போட்டுட்டாங்க. அதுக்கு மேல இவங்க என்ன செய்யப் போறாங்க? சரி, அதை விடு அதிமுக செய்தி இருக்கிறதா?”

“நாடாளுமன்ற தேர்தல்ல சீமானை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள்ள கொண்டு வந்துடணும்னு எடப்பாடி ஆசைப்படறார்.

அதுக்காக அவர் சார்பா ஒரு டீம் சீமான்கிட்ட பேசிட்டு வருது. ‘தனித்துப் போட்டி என்பது நல்ல விஷயம்தான் ஆனா அதே நேரத்துல உங்களைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் பேசினால்தான் இந்தியா முழுவதும் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். திமுகவை கடுமையாக எதிர்த்த ராஜாஜி, காங்கிரசை வீழ்த்தணும்கிறதுக்காக திமுகவை அண்ணாவையும் ஆதரிச்சார். காங்கிரஸ் ஆட்சி தோற்கிறதுக்கு அதுவும் ஒரு காரணம்’ என்றெல்லாம் எடப்பாடி தரப்பு சீமான்கிட்ட சொல்லி அவருக்கு மூளைச்சலவை செஞ்சுட்டு இருக்கு. இது போதாதுன்னு ஓபிஎஸ்ஸும் எடப்பாடி தரப்புக்கு தூது விட்டுட்டு இருக்காராம்.”

“இது என்ன புது ட்விஸ்டு?”

“அரசியல்லதான் இதெல்லாம் சகஜமாச்சே. தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினது செல்லும்கிற தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செஞ்சிருக்கார். அந்த வழக்கில் ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி சரிதான்னு சொல்லப்பட்டு இருக்கு. அப்படி பார்த்தா சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில இருந்து நீக்கினது சரிதாங்கிற ரீதியில அந்த மனு இருக்கு. இதைக் கேள்விப்பட்டதும் சசிகலா டென்ஷன் ஆகிட்டாங்களாம். ‘எடப்பாடி சொல்றதைத்தான் இந்த மனுவில ஓபிஎஸ்ஸும் சொல்றார். என்னை ஒழிச்சுக் கட்றதுல ரெண்டு பேரும் ஒண்ணாதான் இருக்காங்க’ன்னு புலம்பி இருக்காங்க. இது சம்மந்தமா ஓபிஎஸ்சை சசிகலாவும், தினகரனும் கண்டிச்சதா சொல்றாங்க. இதனால ஓபிஎஸ் நொந்து போயிட்டாராம். திரும்பவும் மன்னார்குடி குடும்பத்துல சிக்கி டோஸ் வாங்கறதைவிட அதிமுகலேயெ பழையபடி சேர்ந்திடலாம்னு அவர் முடிவு எடுத்திருக்காராம். இதுக்காக எடப்பாடிக்கு அவர் தூது விட்டிருக்கறதா சொல்றாங்க. எடப்பாடி சொல்ற எல்லா நிபந்தனைகளையும் நான் ஒத்துக்கறேங்கிற ரீதியிலதான் அவர் தூது
விட்டிருக்காராம்.”

”ஐயோ பாவம்…”

“சீக்கிரமே புரட்சித் தமிழர் எடப்பாடியார்னு ஓபிஎஸ் பேசுற காலம் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல’ என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...