No menu items!

தீபாவளி கறி சாப்பாடு –  தமிழர்கள் சாப்பிடுவது சைவமா அசைவமா?

தீபாவளி கறி சாப்பாடு –  தமிழர்கள் சாப்பிடுவது சைவமா அசைவமா?

தீபாவளி அன்று அசைவம் சாப்பிடலாமா கூடாதா? – இதுதான் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ‘ஹாட் டாபிக்’. தமிழகத்தில் மட்டும் தீபாவளி காலை உணவாக கறிக் குழம்புடன் இட்லி சாப்பிடும் பழக்கம் உள்ளது ஏன்? இதற்கு வரலாற்று தொடர்பு இருக்கிறதா? அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

எக்ஸ் தளத்தில் டாக்டர் சுமந்த் ராமன் எழுதியிருந்த ஒரு பதிவில் இருந்துதான் இது தொடங்கியது, “தீபாவளிக்கு தமிழகத்தில் மது மோகம் எப்போதும் உண்டு… ஆனால், இறைச்சி மோகம்… சமீப கால நிகழ்வா? இன்று டிவி சேனல்கள் காண்பிக்கும் இறைச்சி கடைகளின் முன் நிற்கும் நீண்ட வரிசைகள் முந்தைய ஆண்டுகளில் பார்க்காதது. தீபாவளிக்குப் பிறகு அமாவாசை நாளில் பலர் இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அது பல ஆண்டுகளாக உள்ள ஒரு பாரம்பரியம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆடுகளின் ஏல வசூல் சில இடங்களில் ஈகைத் திருநாளை விட அதிகமாக இருந்திருக்கலாம் என்று நண்பர் ஒருவர் என்னிடம் கூறுகிறார். இந்த மாற்றத்தை யாராவது விளக்குவார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் சுமந்த் ராமன்.

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. ஆனால், எல்லா பகுதிகளிலும் தீபாவளி ஒரே மாதிரி கொண்டாடப்படுவதில்லை. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர். வட நாட்டில் லட்சுமி தேவிக்கு விரதம் இருக்கிறார்கள். அப்போது சைவ பதார்த்தங்களை எல்லாம் படையிலிடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அன்றைய நாளில் இட்லி – குடல்கறி, ஆட்டுக்கால் பாயா என சுடச்சுட அசைவ வகைகள் சாப்பிடும் பழக்கம் உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் இந்த உணவு முறை மாற்றம் ஏன்? என்பதுதான் சுமந்த் ராமன் பதிவைத் தொடர்ந்து பலருக்கும் எழுந்துள்ள கேள்வி. இதற்கு பதிலளித்துள்ள பலரும் தொல்லியல் ஆய்வாளர் தொ. பரமசிவன், தீபாவளிக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசியுள்ளதை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

‘தீபாவளிக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விஜயநகர பேரரசு தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பு தீபாவளி என்றொரு பண்டிகையை தமிழர்கள் கொண்டாடவில்லை. சங்க இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் எதனையும் பார்க்க முடியாது. தீபாவளி வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான பண்டிகை. புராணக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட பிராமணிய பண்டிகை’ என்று கூறியுள்ளார், தொ. பரமசிவன்.

‘‘இப்படி தீபாவளி தமிழ்நாட்டில் ஊடுருவினாலும் உணவு முறையில் மட்டும் மாற்றம் நிகழவில்லை. தமிழர்கள் சங்க இலக்கிய காலம் தொட்டே கொண்டாட்ட காலத்தில் அசைவ உணவுகளை உண்பதை வழக்கமாக கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்தில் இருக்கும்போதும் விருந்தினரை உபசரிக்கும்போதும் புலால் உணவுகளை வைத்து அவர்களுக்கு விருந்து அளிப்பதையே பெருமையாக கருதியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சி தான் இப்போதும் எந்தவொரு கொண்டாட்டத்தின்போதும் இயல்பாகவே அசைவ உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்கிறது” என்கின்றனர் பண்பாட்டு ஆய்வாளர்கள்.

நீண்ட காலம் இதுதான் பெரும்பான்மை தமிழர்களின் வழக்கம் என்றாலும் இந்த ஆண்டு இது சர்ச்சையானதுக்கு காரணம், ஊடகம் ஜனநாயகப்பட்டிருப்பதுதான் என்கிறார், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியரும் காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதி வருபவருமான பாலசுப்பிரமணியன் முத்துசாமி.

“ஆண்டாண்டு காலமாக, ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ ‘முறுக்கு’, ‘தேன்குழல்’, ‘வாயில் கரையும் மைசூர்ப்பா’, ‘தீபாவளி லேகியம்’ என ஒரு குறிப்பிட்ட சாதியினர் நடத்திய பத்திரிகைகளும் அதன் தீபாவளி மலர்களும் ஜோக் செய்து கொண்டாடின. இன்று ஊடகம் ஜனநாயகப் படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், பெரும்பான்மை தமிழர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரிய வருகிறது.

இந்திய மாநிலங்களில் இந்துக்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு (88-90%). அதில் பெரும்பான்மை (95%) அசைவர்கள் தான். தீபாவளியன்று காலை இட்லி – ஆட்டுக்கறி / கோழிக்கறி உண்பது அவர்கள் வழக்கம்.

‘மூட நெய் பெய்து முழங்கை வழிவார / கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!’ என்பது ஒரு தமிழ்க் குழுவின் உணவு முறை; தீபாவளி காலை நல்ல இட்லி சுட்டு, குடல் கறிக் குழம்புடன், முழங்கை வழிய உண்பது மீதி 95% மக்களின் உணவு முறை. இதில் கீழேன்றும் மேலென்றும் சொல்பவர்கள் அற்பர்கள்.

மனிதன் இயற்கையில் மாமிசமும் பழங்கள் காய்கறிகளையும் உண்ணும் அனைத்துண்ணி. தொடக்கத்தில் அனைத்து மனிதர்களும் அசைவம் உண்டவர்களே. மாமிசம் உண்பதில்லை என்பது ஒரு சாராரின் முடிவு. அதில் உயர்ச்சியும் தாழ்ச்சியும் சொல்வது, சாதிப் பெருமை பேசுவது போன்ற ஒரு அற்பத்தனம்; அறியாமை” என்கிறார், பாலசுப்பிரமணியன் முத்துசாமி.

தமிழர்கள் பண்பாட்டு ஆய்வாளரான மணி மணிவண்ணன், “தீபாவளி கொண்டாடும் பழக்கமே சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதான் பரவியது. பொதுவாக தீபாவளி அமாவாசையன்று வரும். அதனால் கறி சமைப்போர் மட்டும் அதற்கு முந்தைய நாள் அல்லது பிந்தைய நாளன்று கொண்டாடுவார்கள்” என்கிறார்.

“தீபாவளிக்கு இட்லி, கறிக்குழம்பு செய்யும் வழக்கம் நெடுங்காலமாக இருப்பது தான். அமாவாசை இந்த சமயம் அடுத்த நாள் வரவே இன்னும் வசதியாகி விட்டது. அமாவாசை சேர்ந்து வந்தால் அசைவம் செய்பவர்கள் வீடுகளில் கூடத் தவிர்த்து விடுவார்கள். கூடவே சஷ்டி விரதமும் அன்றே தொடங்கும் என்பதாலும் அசைவம் இருக்காது. இந்த வருடம் அசைவத்துக்கு வசதியாய் அமைந்துவிட்டது” என்கிறார் ஆய்வாளர் சித்ரா பாலசுப்பிரமணியம்.

இது ஒருபக்கம் இருக்க, இந்தியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது சைவமா அசைவமா என்ற இரண்டு ஆய்வு முடிவுகளில் இந்தியாவில் அதிகம் பேர் அசைவ உணவுப் பிரியர்களாகவே இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Arka Farms எனும் நிறுவனம் மக்கள் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை சதவீதம் வைசம் மற்றும் அசைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் எனும் ஆய்வு செய்து அதன் முடிவை சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிட்டது. இதில் இந்தியாவில் அதிகம் பேர் அசைவ உணவுப் பிரியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் 98.7 சதவீதம் பேர் அசைவ உணவையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். மீதமுள்ள 1.3 சதவீதம் பேர் தான் சைவம் சாப்பிடுபவர்கள். அசைவப் பட்டியலில் தெலுங்கானாவுக்கு அடுத்தப் படியாக மேற்கு வங்கம் உள்ளது. 98.55% வங்காளிகள் அசைவப் பிரியர்களாக உள்ளனர். மீதமுள்ள 1.45% பேர் தான் சைவப்பிரியர்கள். 98.25 சதவீதம் அசைவப் பிரியர்களுடன் ஆந்திர மாநிலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில், 1.75 சதவீதம் பேர் தான் வைசம் சாப்பிடுகிறார்கள். நான்காவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 97.65 சதவீதம் தமிழர்கள் அசைவப் பிரியர்கள். மீதமுள்ள 2.35 சதவீதம் பேர் தான் சைவம். ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளள.

இந்த ஆய்வில், சைவத்தை பொறுத்தவரை ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 74.9 சதவீதம் பேர் அம்மாநிலத்தில் சைவமாக உள்ளனர். மீதமுள்ள 25.1 சதவீதம் பேர் தான் அசைவம் சாப்பிடுபவர்கள். இரண்டாவது இடத்தில், ஹரியானா இருக்கிறது. இங்கு 69.25 சதவீதம் பேர் சைவம் சாப்பிடுபவர்கள். மீதமுள்ள 30.75 சதவீதம் பேர் தான் அசைவர்கள். மூன்றாவது இடத்தில் பஞ்சாப் உள்ளது. அம்மாநிலத்தில் 66.75% பேர் சைவம் சாப்பிடுபவர்கள். 33.25% பேர் தான் அசைவர்கள். இதேபோல், உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான மக்கள் சைவம் சாப்பிடுகிறவர்கள்.  

2014ஆம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தால் (Office of Registrar General & Census Commissioner), நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிலும் இது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வில், 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 71 சதவீதம் பேர் அசைவம் உண்ணுபவர்களாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலும், அசைவ உணவுப் பிரியர்கள் பட்டியலில் இறைச்சி, கோழி மற்றும் மீன் வகைகளை விரும்பி சாப்பிடும் அசைவ மக்களாய், 98.8% ஆண்களையும் 98.6% பெண்களையும் கொண்டு, தெலுங்கானா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. மேற்கு வங்காளம் (98.55%), ஆந்திர பிரதேசம் (98.25%), ஒடிஷா (97.35%), கேரளா (97%) ஆகியவை அதிக அசைவ மக்கள் வசிக்கும் பிற மாநிலங்கள் ஆகும்.

ஆம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அசைவப் பிரியர்களே அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...