No menu items!

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

”ரெண்டு ஹாட் நியூஸ் இருக்கு. எதை முதல்ல சொல்ல?” என்று கேட்டாவாறு அலுவலகத்துக்குள் நுழைந்தாள் ரகசியா.

“செந்தில் பாலாஜியும் அண்ணாமலையுமா? ரெண்டுமே ஹாட்தான். உன் ஆர்டர்ல சொல்லு”

”A ஃபார் அண்ணாமலை. அதுனால முதல்ல் Aலருந்து ஆரம்பிக்கிறேன். ஜெயலலிதாவைப் பத்தி அண்ணாமலை சொன்ன கருத்தால ஒட்டுமொத்த அதிமுகவும் கொதிச்சுக் கிடக்குது. அண்ணாமலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டில ஊழல் வழக்குகளுக்காக தமிழ்நாட்டில் முதல்வர்களுக்கு தண்டனைகூட கிடைச்சிருக்கு. அதனாலதான் தமிழகத்தை ஊழல் மிகுந்த மாநிலமா பார்க்கறாங்கன்னு சொன்னது அதிமுக தலைவர்களுக்கு சுத்தமா பிடிக்கலை. என்ன ஆனாலும் இனி பாஜகவோட கூட்டணி வேண்டாம்.
அப்படி கூட்டணி வச்சாலும் அடிமட்ட தொண்டர்கள் அதை ஏத்துக்க மாட்டாங்கன்னு எடப்பாடிகிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்கள் சொல்லி இருக்காங்க.’’

“அதுக்கப்புறம்தான் கண்டன தீர்மானம் போட்டாங்களா?”

“ஆமாம். எடப்பாடிக்கு ஏற்கனவே அண்ணாமலை மீது கடுப்பு இருந்தது. இப்ப இது வசதியா மாட்டிக்கிச்சு. தீர்மானத்த்தை செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமியே வாசித்தார். அண்ணாமலை எதிர்ப்புல பாஜக தீவிரமா இருக்கிறதை காட்டுது. அனுபவம் இல்லை, முதிர்ச்சி இல்லைனு கடுமையான வார்த்தைகள்ல தீர்மானம் போட்டிருக்காங்க. அதிமுக அதிகாரப்பூர்வமா கண்டனம் தெரிவிச்சா பாஜக ஏதாவது நடவடிக்கை எடுக்கும், அண்ணாமலையை மாத்துவாங்கனு அதிமுகவினர் நம்புறாங்க. அவஙகளுக்கு பாஜக பிரச்சினை இல்லை. அண்ணாமலைதான் பிரச்சினை”

“இப்பதான் அண்ணாமலையை பாராட்டி பேசிட்டு போனாரு அமித்ஷா. அப்படியிருக்கும்போது அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பாங்களா?”

“பாராட்டிப் பேசுனதே அவரை மாத்துறதுக்குதான்னு சொல்றாங்க கமலாலயத்துல”

“எப்படி?”

“நீங்க இவ்வளவு சிறப்பா செயல்படுறீங்க. உங்க கடமை டெல்லிக்கு வேணும்னு அங்க மாத்தப் போறாங்கனு சொல்றாங்க. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால அண்ணாமலையை மாத்தினாதான் கூட்டணின்ற முடிவுல அதிமுகவும் இருக்கிறதுனால அண்ணாமலை மாற்றப்படுவார்னு தகவல் இருக்கு”

”உட்கட்சியிலேயும் அண்ணாமலைக்கு அதிக எதிர்ப்புன்னு பேசிக்கறாங்களே..’’

‘’ஆமாம். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமித் ஷாவை விமான நிலையத்தில் வரவேற்றுட்டு கிளம்பிட்டார் தென்சென்னை தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டத்துலயும் வேலூர் பொதுக்கூட்டத்துலயும் அவர் கலந்துக்கல. இந்த கூட்டத்துக்கு உரிய முறையில் அண்ணாமலை அழைப்பு விடுக்கலைன்னு புகார் சொல்லி இருக்கார்.”’

“மத்திய அமைச்சருக்கே அழைப்பு இல்லையா..’’

‘’இன்னொருத்தரும் அண்ணாமலை மேல கடுப்புல இருக்கார். அவர் வானதி சீனிவாசன். முதல்வர் ஜப்பான் போயிருந்த அதே நேரத்துல வானதி சீனிவாசனும் குடும்பத்தோட ஜப்பான் போயிருக்கார். அவரோட இந்த பயணத்துக்கு திமுக தலைவர்தான் ஸ்பான்சர் செஞ்சிருக்கார்னு ஒரு பெட்டிஷனை அண்ணாமலை தரப்பு டெல்லிக்கு தட்டி விட்டிருக்கு. இதுல வானதி சீனிவாசனுக்கு கடுப்பு. சமீபத்தில் தென்சென்னை பாஜக நிர்வாகிகள் கூட்டம் முடிஞ்ச பிறகு மேடைக்கு பின்னால அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன்லாம் நின்னு பேசிட்டு இருந்தாங்க. அப்ப அங்க வந்த வானதி சீனிவாசன், ‘கமலாலயத்தில் இப்ப மொட்டை பெட்டிஷன் தொல்லை ஜாஸ்தியாகிடுச்சு’ன்னு சொல்ல எச்.ராஜா வாய்விட்டு சிரிச்சிருக்கார். இதனால கடுப்பான அண்ணாமலை அந்த இடத்தைவிட்டே போயிட்டாராம். இப்படி எல்லோருக்குமே அண்ணாமலை மீது கடுப்புதான். அதிமுக சிக்கல்ல அண்ணாமலை மாட்டியிருக்கிறது பல பாஜகவினருக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கு.”

‘வழக்கத்துக்கு மாறா ஜெயக்குமார் ரொம்ப கடுமையா அண்ணாமலையை திட்டியிருக்கிறாரே”

”ஜெயக்குமார் கடுமையா பேசினதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு?’’

‘’என்ன காரணம்?”

‘’ஜெயக்குமாரோட மகன் ஜெயவர்தன் தென்சென்னை மக்களவை தொகுதியில 2 முறை போட்டியிட்டு இருக்கார். இதுல ஒரு தடவை அவர் ஜெயிச்சிருக்கார். இந்த முறையும் மகனை அந்த தொகுதியில நிக்கவைக்க ஜெயக்குமார் ஆசைப்படறார். ஆனா, பாஜக அந்த தொகுதிக்கு குறிவைக்குது. தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்களை அமித் ஷா சந்திச்சுப் பேசினது இதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கு. தன் மகன்கிட்ட இருந்து தென் சென்னை தொகுதி கைவிட்டு போயிடுமோங்கிற பயம்தான் அவர் கொந்தளிச்சதுக்கு இன்னொரு காரணம்.’’

‘’இப்படியும் ஒரு காரணம் இருக்கா?”

“தென் சென்னையை வச்சு பாஜகவும் ஒரு கணக்கு போட்டு வச்சுருக்கு. இந்த நாடாளுமன்றத் தேர்தல்ல தென் சென்னைல தமிழிசை சவுந்தரராஜன் போட்டி போடுவாங்க. அவர் வெற்றி பெற்றால் துணை பிரதமராக கூட பதவி கொடுக்கலாம்னு பாஜகவுல ஒரு கணக்கு போட்டு வச்சிருக்காங்க?”

“அது ஏன் தென் சென்னை? கோவை மாதிரி பாஜக இன்னும் கொஞ்சம் செல்வாக்கோட இருக்கிற இடத்துல போட்டி போட வைக்கலாமே?”

“தமிழிசை போட்டியிட்டால் ரஜினிகாந்த் பிரச்சாரத்துக்கு வரேன்னு சொல்லியிருக்கிறார்னு ஒரு தகவல் இருக்கு. தென் சென்னைனா ரஜினி வர்றதுக்கு வசதியாயிருக்கும்னும் பாஜகவுல பேசிக்கிறாங்க”

“கவர்னர் பதவியை விட்டுட்டு தமிழிசை வருவாங்களா?”

“அவங்களே எப்போ வரலாம்னு இருக்காங்க”

“அப்ப ஒரு தமிழ்ப் பெண் துணை பிரதமராகப் போகிறாரா?”

“தேர்தல்ல ஜெயிச்சா!” என்று நிறுத்தி சிரித்தாள் ரகசியா.

‘”வழக்கமா அமித் ஷா சென்னைக்கு வந்தா அதிமுக தலைவர்கள் ஓடிப்போய் சந்திப்பாங்களே.. இந்த தடவை ஏன் சந்திக்கலை?”’

”இப்ப அமித் ஷாகிட்ட பேச என்ன இருக்குன்னு சந்திப்பை எடப்பாடி தவிர்த்ததா சொல்றாங்க’’

‘’ஓபிஎஸ் முயற்சி செய்யலையா?”’

’’ஓபிஎஸ் மட்டுமில்லை. ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசுவாமி எல்லாரும் அமித் ஷாவை சந்திக்க விருப்பம் தெரிவிச்சிருக்காங்க. ஆனா அமித் ஷா, ‘இவங்களைப் பார்த்து நான் என்ன செய்யப் போறேன்’னு மறுத்துட்டாராம். மத்தவங்க இதை சகஜமா எடுத்துட்டாலும், ஓபிஎஸ் இந்த விஷயத்துல கோபமா இருக்கார். அமித் ஷாவை தான் சந்திக்க அண்ணாமலைதான் தடையா இருந்தார்னு அவர் நினைக்கறாராம். அதனால்தான் அண்ணாமலையை கண்டிச்சு கழுதை கற்பூரம்னு கருத்து சொல்லியிருக்கார்.’’

’’அமித் ஷாவோட சென்னை சந்திப்புகள் பத்தி வேற ஏதாவது செய்திகள் இருக்கா’’

‘’இந்த முறை அமித் ஷாவை சந்திக்க வரச்சொல்லி சில சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு போயிருக்கு. இதுபத்தி அண்ணாமலை சார்பா அமர் பிரசாத் ரெட்டி பேசியிருக்கார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷால்கிட்ட அவர் தொடர்பு கொண்டதா சொல்றாங்க. ஆனா அவங்க வேற சில காரணங்களைச் சொல்லி தவிர்த்துட்டாங்க. ஆனா இதுபத்தி ரெண்டு பேரும் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு போயிருக்காங்க. அமித் ஷாவைச் சந்திச்ச ஆர்.கே.செல்வமணி, ‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஒரு சதவீதம் கூட வளரவில்லை யாராவது வளர்ந்துட்டதா சொன்னா நம்பாதீங்க’ன்னு சொல்லி இருக்காராம். அண்ணாமலையின் செயலாளர் ஸ்ரீகாந்த்தான் அவர் பேசினதை இந்தியில் மொழிபெயர்ப்பு செஞ்சுட்டு இருந்தார். இதை மொழிபெயர்ப்பு செய்யறதா வேண்டாமான்னு அவர் அண்ணாமலையைப் பார்த்திருக்கார். அவர் வேண்டாம்னு கண்ணசைக்க, அவர் மொழிமாற்றம் செய்யலையாம்.’’

’’தமிழர் பிரதமரா வரணும்னு பிரதமர் அமித் ஷா சொன்னது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கே?”’

”போதும், பாஜக – அதிமுக செய்தி..செந்தில் பாலாஜி என்னாச்சு..திருப்பியும் ரெய்ட் வந்துருக்கே? அதுவும் கோட்டைல சிஎம் ரூம் பக்கத்துல இருக்கிற செந்தில் பாலாஜி அறையிலேயே ரெய்ட் நடந்திருக்கே”

“ஆமாம். கோட்டைக்கு வருவாங்கனு திமுகவினர் எதிர்பார்க்கல. வீட்டோடு ரெய்ட் நின்னுடும்னுதான் நினைச்சிருக்காங்க. இது மாதிரி ரெய்ட் நடக்க நடக்க அது அரசியல் ரீதியா திமுகவுக்கு லாபம்தான்னு சொல்றாங்க”

“இந்த முறை தீவிரமா நடக்குதே?”

“ஆமாம். திமுக ஆட்சி மீது விசாரணை கமிஷன் போடப் போறதாவும் டெல்லிலருந்து செய்திகள் வருது. அதுக்கு அடிப்படையாதான் இந்த சோதனைகள்னு சொல்றாங்க. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால திமுக ஆட்சி மீது ஊழல் விசாரணை கமிஷன் போடப்படலாம்”

”திமுகவினரிடமிருந்து ரியாக்‌ஷன் எதுவும் வரலையே?”

“தலைவர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கணும். பேட்டி கொடுத்திருக்கணும்னு திமுகவின் முன்னணி தலைவர்கள் நினைக்கிறாங்க. அப்படி எதுவும் நடக்காததுல அவங்களுக்கு வருத்தம்தான். கலைஞர்னா அப்படி செஞ்சிருப்பாருனு சொல்றாங்க. ஆனா ஸ்டாலின் தான் மோர் டேஞ்சரஸ்தன் கருணாநிதியாச்சே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...