இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள். மக்களுக்கு மிகவும் பிடித்த குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார் அவரது நண்பரும், ஆலோசகராக இருந்தவருமான ஸ்ரீஜன் பால் சிங்.
அப்துல் கலாம் என்றதும் நம் நினைவுக்கு வருவது, வித்தியாசமான அவரது ஹேர்ஸ்டைல்தான். அந்த ஹேர்ஸடைலை அப்துல் கலாம் மிகவும் நேசித்தார். அவருக்கு கடிதம் எழுதுபவர்களில் சிலர், அவரது ஹேர்ஸ்டைலை மாற்றச் சொல்லி பரிந்துரைப்பார்கள். அந்த கடிதங்களைப் பார்த்து அப்துல் கலாம் சிரிப்பார்.
அப்துல் கலாமின் கையில் உள்ள பையில் எப்போதும் வட்ட வடிவத்தில் உள்ள ஒரு சீப்பும், ஒரு சிறிய பாட்டில் தேங்காய் எண்ணெயும் இருக்கும் தன் முடி எப்போதும் கலையாமல் சீராக இருக்க வேண்டும் என்பதில் அப்துல் கலாம் அதிக அக்கறை காட்டினார்.
எந்த கட்டத்திலும் ஒரு எளிமையான மனிதராகத்தான் அப்துல் கலாம் நடந்துகொண்டார். நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதிலும் இந்த குணம் அவரை விட்டுப் போகவில்லை. இதற்கு உதாரணமாக IIM-ல் நடந்த சம்பவத்தைச் சொல்லலாம். ஒருமுறை ஐஐஎம்மில் நான் அவரைச் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அதன் டீன் அவரைச் சந்திக்க வரப்போவதாக அப்துல் கலாமுக்கு தகவல் வந்தது.
இதைக் கேள்விப்பட்டதும் டீன் வருவதற்காக காத்திருக்காத அப்துல் கலாம், தனது அறையில் இருந்து வெளியேறி டீனை அவரது அறையில் சந்திக்க சென்றார். ஜனாதிபதியான அப்துல் கலாம் தன் அறைக்கு வந்ததைப் பார்த்த்தும் டீனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் எழுந்து நிற்க, அவரை உட்காருமாறு சொன்ன அப்துல் கலாம், ‘நான் இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் இந்த கல்லூரிக்கு நீங்கள்தான் டீன். நான் வந்து உங்களை பார்ப்பதுதான் சரியாக இருக்கும்’ என்றார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆனி ரோவ்லிங் பல்கலைக்கழகத்துக்கு ஒருமுறை அப்துல் கலாமுடன் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஆராய்ச்ச்சியாளர்கள் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக சொல்லி அதுபற்றி விளக்கினார்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு முன்பு பேசிய ஆடியோக்களை வைத்து அந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருந்தது. இதைக் கேட்ட அப்துல் கலாம் அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியதும் தனக்கு தர முடியுமா என்று கேட்டார். அதன்பிறகு அவரிடம் பேசிய நான், ‘உங்களுக்கு எதற்காக அந்த தொழில்நுட்பம்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், அந்த தொழில்நுட்பத்தை வாஜ்பாய்க்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க விரும்புவதாக கூறினார். அப்துல் கலாமின் தன்னலமற்ற, பிறருக்கு உதவும் குணத்தை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.