கேரளாவில் உள்ள பெரிய கோயில்களில் தவிர்க்க முடியாத அம்சமாக யானைகள் உள்ளன. நம் ஊர் கோயில்களில் எப்படி தேரில் சுவாமி சிலையை எடுத்துக்கொண்டு ஊர்வலம் செல்கிறோமோ, அதேபோல் கேரளாவில் யானைகளின் மீது வைத்துதான் சுவாமி சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். ஒரு சில கோயில்களில் மாலையில் நடக்கும் சீவேலிகளில் சுவாமி சிலைகளை ஊர்வலமாக வைத்து எடுத்துச் செல்வார்கள். இதனாலேயே பல பக்தர்கள் கோயிலுக்கு யானைகளை தானமாக வழங்குவார்கள்.
குருவாயூர் கோயிலில் மட்டும் பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட சுமார் 50 யானைகள் உள்ளன. இந்த யானைகளை பராமரிப்பதற்காக மட்டுமே புன்னத்தூர் கோட்டை என்ற யானைகள் பராமரிப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பக்தர்களால் கோயிலுக்கு வழங்கப்படும் யானைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவை காட்டில் வளராமல் நகரத்தில் வளர்வதால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதாகவும் மிருகவதை எதிர்ப்பு அமைப்புகள் புகார்களை தெரிவித்து வருகின்றன. சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகள், திருவிழாக்களின்போது சத்தங்களைக் கேட்டு மிரள்வதாகவும் அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த புகார்களைத் தொடர்ந்து சில கோயில்களில் யானைகளுக்கு பதிலாக அவர்களின் சிலைகள் பூஜைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால் பார்ப்பதற்கு யானைகளைப் போல இருந்தாலும், யானைகளைப் போல அவை செயல்படாததால் பக்தர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.
இந்த சூழலில்தான் திருச்சூரில் உள்ள இரிஞடப்பிள்ளி கிருஷ்ணன் கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை வழங்கியிருக்கிறார் நடிகை பார்வதி திருவோத்து. பிடா அமைப்புடன் இணைந்து இந்த யானையை அவர் வழங்கியிருக்கிறார். 10 அடி உயரம் கொண்ட இந்த யானையின் மொத்த எடை 800 கிலோ. மின்சாரத்தின் உதவியால் உயிருள்ள யானையைப் போலவே இது தலை, வால், காது, தும்பிக்கையை ஆட்டும். முக்கிய பூஜைகளின்போதும் திருவிழாக்களின்போதும் இந்த யானையின் மீது சுவாமி சிலையுடன் 4 பேர் அமர்ந்துகொள்ளலாம்.
பார்ப்பதற்கும், செயல்பாடுகளிலும் இந்த நிஜ யானையைப் போலவே இந்த இயந்திர யானை இருப்பதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த யானையை மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. அதனால் நிஜ யானையைப் போலவே இந்த யானைக்கு ’இரிஞடப்பிள்ளி ராமன்’ என்று பெயர் வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் பக்தர்கள்.
இந்த யானையைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறியுள்ள நடிகை பார்வதி, “கோயில்களில் யானைகளைப் பயன்படுத்துவதால் அவை ஏகப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகின்றன. அதனால் அவற்றுக்கு பதில் இயந்திர யானையை கோயிலுக்கு வழங்கினால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவாக பிடா அமைப்புடன் இணைந்து இந்த யானையை வடிவமைத்து வழங்கியுள்ளேன். நிஜ யானையைப் போலவே இது இருப்பதால், கோயில் நடைமுறைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்த இது உதவும். பக்தர்களுக்கும் இந்த இயந்திர யானை திருப்தி அளித்திருக்கிறது” என்றார்.
கிருஷ்ணன் கோயிலின் பூசாரியான ராஜ்குமார் நம்பூதிரி, “மிருகங்களை பயன்படுத்தாமல், அதேநேரத்தில் கோயிலின் ஆகம விதிகளை மீறாமல் இந்த இயந்திர யானையை வைத்து பூஜைகளை செய்ய முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார்.