தமிழகத்தில் நாளை 60 சதவிகிதம்வரை பேருந்துகளை இயக்க அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச. பொருளாளர் நடராஜன், “தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்து வெற்றிகரமாக முதல் நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, போராட்டத்தின் வடிவை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
பள்ளி வேன் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 7 வயது மகன் தீக்ஷித். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவந்தான்.
இன்று காலை பள்ளிக்கு வேனில் சென்ற தீக்ஷித் வேனிலிருந்து இறங்கி வகுப்பறை நோக்கி நடந்திருக்கிறான். ஆனால் மீண்டும் வேனை நோக்கி ஓடி வந்ததாக தெரிகிறது. ஏதோ பொருளை மறந்துவிட்டதால் எடுப்பதற்கு வேனை நோக்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேன் நோக்கி ஓடி வந்த தீக்ஷித், வேனுக்குள் ஏற முயற்சித்திருக்கிறான், அந்த நேரத்தில் வேன் டிரைவர் வண்டியை பின்னோக்கி நகர்த்தியிருக்கிறார். வேனுக்குள் ஏற முயன்ற தீக்ஷித் மீது வேன் மோதியிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வழியிலேயே உயிரிழந்திருக்கிறான் சிறுவன் தீக்ஷித்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வேன் டிரைவர் பூங்காவனத்தை வளசரவாக்கம் போலீஸார் கைது செய்தனர். தீக்ஷித்தின் உடல் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பள்ளி வளாகத்திலேயே மாணவர் ஒருவர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அப்பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வேன் பணியாளர் ஞானசக்தி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் (கொலை குற்றமாகாத மரணத்தை விளைவித்தல் ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு – அபுதாபியில் முதல்வர் முன்னிலையில் முதலீடுகள்
தமிழகம் முதல்வர் இன்றைய தினம் (மார்ச் 28) கலந்து கொண்ட நிகழ்வுகளின் விவரங்கள் தமிழக அரசின் செய்தி குறிப்பிலிருந்து:
தமிழகம் முதல்வர் , லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலி அவர்களை இன்று அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: இந்த சந்திப்பின்போது, தமிழகம் முதல்வர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம், 3,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. அதில், 2,500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1,000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தேசிய பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரத்தில், தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 11-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவின் கையெழுத்து மாதிரிகளை கேட்டு, சிபிஐ தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடு தேடி வரும் ரேஷன் – பஞ்சாப் அரசு அறிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் வீடுதேடி வரும் ரேஷன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், “பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீடு தேடி ரேஷன் விநியோகம் திட்டத்தை அறிவித்துள்ளார். இது விரைவில் நடைமுறைக்கு வரும். டெல்லியில் மொஹல்லா கிளினிக்கை கொண்டுவந்தபோது நாடு முழுவதும் பேசப்பட்டது போல், இதுவும் பேசப்படும்” என்றார்.