No menu items!

மீண்டு வந்த குல்தீப் யாதவ்

மீண்டு வந்த குல்தீப் யாதவ்

கிரிக்கெட்டில் அதிக அறிமுகம் இல்லாதவர்களை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதும், சாதனையாளர்கள் பலரை ஒரே தொடரில் காணாமல் போகச் செய்வதும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கே உரிய சிறப்பம்சம். இந்த தொடரால் வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் அதிகம். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் குல்தீப் யாதவ்.

2020 ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் கடந்த 2 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த குல்தீப் யாதவ், தற்போது அதே ஐபிஎல்லால் மீண்டு வந்திருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளிடையே நேற்று நடந்த போட்டியில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியதால் மீண்டும் பலரது பார்வை அவர் மீது விழுந்துள்ளது.

குல்தீப் யாதவை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான் 2012-ல் முதலில் குல்தீப் யாதவை தங்கள் அணியில் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் அந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத குல்தீப் யாதவ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து 2014-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 14 விக்கெட்களை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும்.

இந்த சாதனையைத் தொடர்ந்து கேகேஆர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குல்தீப் யாதவ், அங்கிருந்த பிராட் ஹாக்கிடம் சுழற்பந்து வீச்சின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். 2016-ம் ஆண்டு கொல்கத்தா அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுத் தந்தார். இந்த சூழலில் 2 ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் போட்டிகளில் சொதப்ப, குல்தீப்பின் பயணம் தடைப்பட்டது. கேகேஆர் அணி ஒரு கட்டத்தில் அவரை ஆடவைக்காமல் பெஞ்சில் அமரவைக்க, மேலும் தகர்ந்துபோனார் குல்தீப். 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே குல்தீப்புக்கு வாய்ப்பு கொடுத்தது கேகேஆர். அதிலும் அவர் ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல்லில் சொதப்பியதால் சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் துவண்டு போனார்.
இந்தச் சூழலில்தான் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நடந்தது. கேகேஆர் மீண்டும் குல்தீப்பை சேர்க்காமல் போக, 2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது டெல்லி கேபிடல்ஸ். மற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களோடு ஒப்பிடும்போது இது குறைவான தொகைதான். ஆனாலும் தனக்கு ஆட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஒப்புக்கொண்டார் குல்தீப் யாதவ்.

“நாங்கள் உங்களை நம்புகிறோம். ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும் அணியில் உங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும்” என்று டெல்லி கேபிடல்ஸின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதிமொழி அளிக்க, புத்துணர்வு பெற்றார்.

கேப்டன் ரிஷப் பந்த்தும் இதையே சொல்ல அவரது தன்னம்பிக்கை அதிகரித்தது. பழைய உற்சாகம் பறந்து வந்தது. நேற்றைய போட்டியில் ஆவேசமாக பந்து வீசிய குல்தீப் யாதவ், 18 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

எந்த ஐபிஎல் குல்தீப் யாதவின் பயணத்தை பாதியில் தடுத்ததோ, அதே ஐபிஎல் இப்போது அவருக்கு ராஜபாட்டையை அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாய் குல்தீப் யாதவ் உருவெடுப்பார் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...