பாலிவுட் ப்யூட்டி கேத்ரீனா கைஃப் (katrina kaif) நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார்.
ஓகே அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?
படத்தின் கதாநாயகன் நம்மூர் விஜய் சேதுபதி என்பதுதான் ஹைலைட்.
மும்பையில் செட் போடப்பட்டு, இப்படத்தின் ஷூட் நடந்து வருகிறது. இதில் கேத்ரீனா கைஃப் தமிழில் பேச வேண்டிய காட்சிகளும் இடம்பெறுகிறதாம்.
திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கவேண்டும் என்பதில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கறாராக இருக்கிறாராம். இதனால், கேத்ரீனா கைஃப் தமிழ் கற்றுக்கொண்டே ஆகவேண்டுமென இயக்குநர் உத்தரவு போட்டுவிட்டார். வேறு வழியின்றி முழு வீச்சில் தமிழ் கற்று வருகிறார் கேத்ரீனா கைஃப்.
கேத்ரீனாவுக்கு எப்படி தமிழ் கற்றுக் கொடுப்பது என தெரியாமல் தடுமாறியிருக்கிறது மெர்ரி கிறிஸ்மஸ் படக்குழு. யூட்யூப் சேனல்களையும், மும்பையில் தமிழ் பேசுபவர்களையும் வைத்து தமிழ் பேச கற்று கொடுக்க முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அதனால் சென்னையில் இருந்து ஒரு பக்காவான தமிழ் ஆளை அழைத்து வாருங்கள் என்று கேத்ரீனா கைஃப் சொல்லிவிட்டாராம்.
இப்போது கேத்ரீனாவுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பது யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் தீபா வெங்கட்தான்.
சென்னையில் ஃப்ளைட்டை பிடித்தவர் மும்பையில் இறங்கி ஒரு வாரம் தங்கியிருந்து கேத்ரீனாவுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து வருகிறார் தீபா.
கேத்ரீனா தமிழைக் கேட்க ஆவலோடு இருக்கிறோம் தீபா டீச்சர்!
விஜய் சேதுபதியை சம்மதிக்க வைத்து எப்படி? – யுவன்சங்கர் ராஜா
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ (Maamanithan) படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன” என்றார்.
சீனு ராமசாமி பேசும்போது, “நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அல்லு அரவிந்துக்கு நன்றி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார்” என்றார்.
யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது, “நானும் சீனு ராமசாமியும் பலமுறை ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அவர் ஒரு அருமையான இயக்குநர். நான் விஜய் சேதுபதியை அணுகியபோது முதலில் அவர் தேதி இல்லை என்று கூறினார். பின்னர் நானும் என் அப்பாவும் படத்திற்கு ஒன்றாக இசையமைப்போம் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். இந்தப் படத்தில் என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன், படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது” என்றார்.
கவிதை வெளியிட்ட வடிவேலு
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் நல்ல எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் எழுதிய ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’, ‘மறக்கவே நினைக்கிறேன்’ ஆகிய நூல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இப்போது அவர் எழுதிய கவிதைகள் ‘உச்சினியென்பது’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. கொம்பு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேலு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.
திரைப்படமாகும் லலித் மோடியின் வாழ்க்கை
இந்தியன் பிரீமியர் லீக். சர்வதேச கிரிக்கெட் உலகில் சூப்பர் ஸ்டாராகத் திகழும் இந்த தொடரை உருவாக்கியவர் லலித் மோடி.
மோடி தனது சொந்த விதிகளின்படி 2008-ல் இப்போட்டியை கட்டமைத்து, ஒழுங்கமைத்தார். ஐபிஎல்லின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அதே விதிகள் நிர்வாகத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இதையடுத்து மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இது எப்படி, ஏன் நடந்தது? இதன் பின்னால் இருந்தவர்கள் யார்? இப்படி வெளிவராத ரகசியங்கள் பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது ‘Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga’ என்ற புத்தகம். இன்று Simon & Schuster India பதிப்பக நிறுவனம் பிரபல எழுத்தாளர் போரியா மஜும்தார் எழுத்தில் உருவாகியுள்ள இப்புத்தகம் மே.22-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் “தலைவி, 83” படங்களின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி இதைத் திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.
இதுபற்றி விஷ்ணுவர்த்தன் இந்தூரி கூறும்போது, “லலித் மோடி பற்றிய நுண் தகவல்கள் பல இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அற்புதமான புத்தகத்தை நாங்கள் திரைப்படமாக மாற்றுகிறோம் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.