No menu items!

நியூஸ் அப்டேட்: நான் கருப்பு திராவிடன் – யுவன் சங்கர் ராஜா

நியூஸ் அப்டேட்: நான் கருப்பு திராவிடன் – யுவன் சங்கர் ராஜா

பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தக முன்னுரை சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இன்ஸ்டாகிராமில் கருப்பு ஆடை அணிந்து, ‘நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன்’ என்று கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இருவரும் இணையானவர்கள் என்று இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில்  யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.

தனது தந்தைக்கான பதிலா அல்லது எங்கள் குடும்பம் திராவிடக் குடும்பம், தமிழில் பெருமை கொள்பவர்கள் என்று இளையராஜாவை காப்பாற்றும் முயற்சியா என்று சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமை குறைந்துள்ளது – உலக வங்கி தகவல்

இந்தியாவில் 2011-2019 காலகட்டத்தில் தீவிர வறுமை 12.3 சதவீதம் குறைந்துள்ளது என உலக வங்கியின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் இந்த ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்பு அதிகமாக உள்ளது. ‘இந்தியாவில் 2011-ம் ஆண்டை விட 2019-ல் கிராமப்புற வறுமை 14.7 சதவீதமும் நகர்ப்புற வறுமை 7.9 சதவீதமும் குறைந்துள்ளது’ என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரருக்கு கொரோனா

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்டான பேட்ரிக் ஃபார்ஹார்ட்-க்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் அந்த அணியின் வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அணியின் வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.  இதைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டைப்போல தள்ளிவைக்கப்படுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

விஸ்வா தீனதயாளன் மறைவு: தமிழில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன், கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” எனத் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் கார்  மோதிய வழக்கு: ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் ரத்து

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது என  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்.2 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதை ஏதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...