No menu items!

சிஎஸ்கே சொதப்புவது ஏன்?

சிஎஸ்கே சொதப்புவது ஏன்?

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  என்ன அச்சு?” – தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ள கேள்வி இது. ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். 2020-ம் ஆண்டைத் தவிர தாங்கள் ஆடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ப்ளே ஆஃப் சுற்றுவரை முன்னேறிய அணி என்ற பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உண்டு.

இப்படி பல  பெருமைகளைக் கொண்ட  சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று 6 போட்டிகளில் ஆடி, அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  புள்ளிப் பட்டியலிலும் 9-வது இடத்தில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தோல்விகளுக்கு என்ன காரணம்  என்று பார்ப்போம்:

 தோனியின் தவறான முடிவு:

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் தான் நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றி முடிவெடுக்க தோனிக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் அதை அவர் அறிவித்த நேரம்தான் தவறு. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றபோதே இந்த முடிவை அவர் அறிவித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஏலத்தின்போதே ஒரு புதிய கேப்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியிருக்கும். ஆனால் அணித் தேர்வு முடிந்தபின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம்  மட்டுமின்றி, வீரர்கள் மத்தியிலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பம் அணியின் சரிவைத் தொடங்கிவைத்தது.

ஜடேஜாவின் அனுபவமின்மை:

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதும், அந்த இடத்தில் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜாவைப் பொறுத்தவரை என்றுமே அவர் கேப்டன் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. இந்திய அணி ஆடும் போட்டிகளில்கூட மற்ற வீரர்கள் எல்லாம் அடிக்கடி ஆலோசனைகளில் கலந்துகொண்டாலும், ஜடேஜா அவ்வளவாக டீம் மீட்டிங்கில் பங்கேற்க மாட்டார். தான் உண்டு தனது ஆட்டம் உண்டு என்று இருப்பார். ஐபிஎல் தொடருக்கு வெளியில்கூட பெரிய அளவில் அவர் கேப்டனாக செயல்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது, ஒரு பெரிய பாறாங்கல்லை  தலையில் ஏற்றி வைத்துபோல் அவரை சுமைகள் அழுத்தின. இது அவரது பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கடுமையாக பாதித்து. கூடவே ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக அணியில் அவரது பங்களிப்பும் குறைந்துபோனது.

தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லை:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சாதிப்பதற்கு அந்த அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய அளவில் எந்த வேகப்பந்து வீச்சாளரும் சோபிக்கவில்லை. ஐபிஎல் ஏலத்தில் ரூ.14 கோடி கொடுத்து தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. ஆனால் அவருக்கு துணையாக பெரிய அளவில் வேகப்பந்து வீச்சாளர்களை சிஎஸ்கே வாங்கவில்லை. துரதிருஷ்டவசமாக தீபக் சாஹர் காயம் அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பலவீனப்படுத்தியது.  

ஒருபுறம் இப்படி இருக்கும்போது, ஏற்கெனவே வாங்கிய வீரர்களையும் சிஎஸ்கே ஒழுங்காக பயன்படுத்தவில்லை. உதாரணமாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசியதுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடிய ஹங்கர்கேகரை 1.5 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியுள்ளது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய முகேஷுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது சிஎஸ்கே.

வயதும் ஒரு தடைதான்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ‘டாடீஸ் ஆர்மி’ என்றும் ஒரு பெயர் உள்ளது. அதிலுள்ள வீரர்களில் பலரும் 30 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இப்படி பெயர் வைத்து சிஎஸ்கேவை பலரும் கிண்டலடிப்பார்கள். ஆனால் இந்த முறை 30 பிளஸ் என்பதையும் கடந்து 35 பிளஸ் வயதைக் கடந்த வீரர்களின் அணியாக சென்னை மாறியுள்ளது. தோனி, பிராவோ, ராயுடு, உத்தப்பா என்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பல வீரர்கள் அணியில் உள்ளனர். இதனால் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும் பீல்டிங்கில் சென்னை அணி சொதப்புகிறது.

கழுத்தை நெரிக்கும் மும்பை மைதானங்கள்:

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தை மனதில் வைத்து சிஎஸ்கே அணிக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர். சேப்பாக்கம் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் வாங்காமல் மித வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களையும் வாங்கியது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் திடீரென மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களுக்கு மாற்றப்பட, சேப்பாக்கத்தை மனதில் வைத்து வாங்கிய வீரர்கள் சோபிக்க முடியாமல் போனது.

பிளம்மிங்கின் பழைய  போர்முறைகள்

மற்ற அணிகளெல்லாம் காலத்துக்கு ஏற்றார்போல பயிற்சியாளர்களை மாற்றிக்கொண்டு இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இன்னும் பிளம்மிங்கை பயிற்சியாளராக வைத்துள்ளது. பிளம்மிங்கின் பல போர்முறைகல் பழையகால கிரிக்கெட்டுக்கு மட்டுமே ஏற்றதாக உள்ளதால் அணி பின்னடைவை சந்திப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஐபிஎல்லில் வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில், மேற்சொன்ன விஷயங்களில் திருத்தங்கள் செய்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலாவது  சென்னை மீண்டும் சாம்பியனாக எழுந்து வரலாம்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...