இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷி கன்னா.
பார்ப்பதற்கு புராண காலத்தில் செதுக்கிய சிலைப் போல சாமுத்ரிகா லட்சணத்துடன் இருக்கிறார். ஆனால் சினிமாவிற்குள் நுழைந்த காலத்தில் கொழுகொழுவென இருந்தார். இந்த சமாச்சாரத்தை வைத்து சமீபகாலமாக ராஷி கன்னாவை சமூக ஊடகங்களில் சீண்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொறுமைக் காத்த ராஷி ஒரு கட்டத்தில் மனம் தாங்காமல் கலங்கிவிட்டார்.
‘’ஆமாம் ஆரம்பத்தில் கொஞ்சம் கொழுகொழுன்னுதான் இருந்தேன். அதைப் பார்த்து என்னை ‘கேஸ் டேங்கர்’னு கிண்டலடிச்சாங்க. இந்தமாதிரி கமெண்ட் வந்தப்பெல்லாம் நான் எதையும் கண்டுக்காம அமைதியாகதான் இருந்தேன். கமர்ஷியல் சினிமாவுக்கு ஃபிட்டா இருந்தாதான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பதால் நானும் எதுக்கும் ரியாக்ட் பண்ணல.
ஆனாலும் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குல்ல. அதான் எடை அதிகமாக இருந்ததுக்கு என்ன காரணம்னு வெளிப்படையா சொல்லலாம்னு நினைக்கிறேன். உண்மையில் நான் பிசிஒடி பிரச்னையினால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் நான் ஆசைப்பட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியல. இது யாருக்கும் தெரியாது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்துட்டேன்.
என்னோட பாஸிட்டிவ்வான எண்ணம்தான் என்னை இந்தளவுக்கு மாத்தியிருக்குன்னு நினைக்கிறேன். இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன். என்னோட அனுபவத்தை வைச்சு சொல்றேன். தயவு செய்து யாரையும் உருவக்கேலி பண்ணாதீங்க. நீங்க கிண்டலடிக்கிறவங்களுக்கு என்ன பிரச்னை இருக்குன்னு உங்களுக்கு தெரியாது. அதனால் யாரையும் காயப்படுத்தாதீங்க’’ என்று கையெடுத்து கும்பிடுகிறார்.
தற்போது தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருவதால் ராஷிக்கு ஒரே குஷி. அந்த குஷியைக் கொண்டாட அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு பரிசாக பிஎம்டபிள்யூ 7 சீரியஸை சேர்ந்த BMW 740li காரை பரிசாக அளித்திருக்கிறார். அதுவும் அவரது அம்மாவுக்குப் பிடித்த மெட்டாலிக் ப்ளூ வண்ணத்தில் வாங்கிக் கொடுத்திருப்பதால் ராஷி கன்னா அம்மா உற்சாகத்தில் இருக்கிறார்.