No menu items!

அதிமுக Vs பாமக Vs பாஜக – யார் உண்மையான எதிர்க் கட்சி?

அதிமுக Vs பாமக Vs பாஜக – யார் உண்மையான எதிர்க் கட்சி?

பொதுவாக ஆட்சியைப் பிடிப்பதற்குதான் கட்சிகளிடையே போட்டிகள் நடக்கும். ஆனால் இப்போது தமிழ் நாட்டில் யார் பிரதான எதிர்க் கட்சி என்பதற்கு போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். அதிமுகதான் பிரதான எதிர்க் கட்சி, பாஜக அல்ல என்று குறிப்பிட்டார். என்னதான் முயன்றாலும் பாஜகவால் தமிழ் நாட்டில் வளர இயலாது, தமிழ் நாட்டின் நலன்களுக்கு எதிராக பாஜக இருக்கிறது என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

பாஜகவினரும் கடுமையான மறுவினையாற்றினார்கள். யார் அதிக இடங்களில் வென்றார்கள் என்பது முக்கியமல்ல, இன்று ஆளும் தரப்புக்கு எதிராக களத்தில் போராடுவது பாஜகதான் அதனால் அதுதான் முக்கிய எதிர்க் கட்சி என்பது அவர்கள் வாதமாயிருக்கிறது.

அதிமுக, பாஜக மோதலுக்கிடையே நேற்று பாமகவும் இந்த பந்தயத்தில் சேர்ந்துக் கொண்டிருக்கிறது.

’தேசிய அளவில் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் பாஜக வளரும் கட்சிதான். பாமகதான் உண்மையான எதிர்க் கட்சி’ என்று பாமகவின் புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியில் இருக்கின்றன. சமீபத்திய ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் மூன்று கட்சிகளும் ஓரணியில் நின்றன.

பொன்னையன் பேச்சினால் கலவரமடைந்த ஒபிஎஸ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ‘அது பொன்னையனின் சொந்த தனிப்பட்ட கருத்து’ என்று பொன்னையனின் கருத்திலிருந்து தள்ளி நின்றுக் கொண்டார்.

அப்போது உடனிருந்த எடப்பாடி பழனிசாமி பொன்னையன் கருத்துக் குறித்து எதுவும் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பொன்னையன் கருத்து குறித்து எதுவும் பேசாத எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் வி.பி.துரைசாமி கருத்துக்களுக்கு கடுமையாக மறு பதில் அளித்தார். ‘அதிமுக சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே பாஜகவின் வி.பி. துரைசாமி அதிமுகவுக்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும். நாட்டு மக்களின் பிரச்சினைகளை எந்தளவுக்கு புள்ளி விவரத்தோடு நானும், ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்து வருகிறோம். அதோடு பாஜகவைச் சேர்ந்தவர் எப்படி பேசுகிறார் என்பது நாட்டு மக்களுக்கும் தெரியும்.’ என்று குறிப்பிட்டார்.

பாஜக குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பது நேற்றைய செய்தியாளர் சந்திப்பு காட்டுகிறது என்றே கூறலாம்.

அன்புமணி ராமதாசின் கருத்தும் எதிர்பாராதது. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘இந்தியாவில் பெரிய கட்சி பாஜக. ஆனால், தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி. தமிழகத்திற்கு சாபக்கேடாக அமைந்துள்ள மேகேதாட்டு அணையை எக்காரணம் கொண்டும் கட்டவிடமாட்டோம். மத்தியிலும், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் கொண்டு வர மாட்டோம் என்று சொல்வாரா? அணை கட்டவிடாமல் தடுத்து நிறுத்துவாரா? தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாமகதான்

பாஜக கிடையாது. திமுகவுக்கு பாஜக எதிர்கட்சி கிடையாது. உண்மையான எதிர்க்கட்சி பாமகதான்’ என்று குறிப்பிட்டார்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வாக்குசதவீதத்தில் இன்று வரை திமுகவுக்கு அடுத்த நிலையில் அதிமுகதான் இருக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 25.4 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. பாஜக 4.92 வாக்குகளையும் பாமக 1.54 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் மூன்று கட்சிகளும் தனித் தனியே போட்டியிட்டன.

2021 தமிழ் நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன. அதிமுக 33.2 சதவீத வாக்குகளையும் பாமக 3.8 சதவீத வாக்குகளையும் பாஜக 2.6 சதவீத வாக்குகளையும் பெற்றன. ஆனால் இந்த வாக்கு சதவீதம் கூட்டணியாக அவை பெற்றவை.

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளும் தனித் தனியே போட்டியிட்டன. ஜெயலலிதா வழிநடத்திய அந்தத் தேர்தலில் அதிமுக 40.7 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாட்டாளி மக்கள் கட்சி 5.3 சதவீத வாக்குகளையும் பாஜக 2.8 சதவீத வாக்குகளையும் பெற்றன.

இவைதான் இந்தக் கட்சிகளின் வாக்கு சதவீதமாக இருக்கின்றன.
கட்சிகளின் வாக்கு சதவீதங்களை மட்டுமே வைத்து எதிர்க் கட்சியா இல்லையா என்பதை தீர்மானிக்க இயலுமா என்ற கேள்வி எழுகிறது.

பாமகவின் தேர்தல் சரித்திரத்தை தொடர்ந்து பார்க்கும்போது அதன் வாக்கு சதவீதம் ஒரே ஒரு முறைதான் 8 சதவீத வாக்குகளை பாமக எட்டியது.

அதுவும் நாடாளுமன்றத் தேர்தலில். 1999ல் கிடைத்த அந்த உயர்வுக்கு முன்னும் பின்னும் பாமகவின் வாக்கு சதவீதம் சராசரியாக 5.5 சதவீத வாக்குகளை பெற்று வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக அவ்வப்போது கூறியிருக்கிறது. ஆனால் அதற்கான முழு முயற்சி 2016 தேர்தலில் எடுத்தது. மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷத்துடன் இறங்கியது. ஆனால் வெற்றி பெற இயலவில்லை. அதே 5 சதவீத வாக்குகள்தாம்.

அதே நிலைதான் பாஜகவுக்கும். கூட்டணியுடன் தேர்தல்களை சந்திக்கும்போது மட்டும் அதன் வாக்கு சதவீதங்கள் உயர்கின்றன. 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த போது அதன் வாக்கு சதவீதம் 3.2 சகவீதமாக அதிகரித்தது. அதன்பின்னும் முன்னும் அதன் வாக்கு சதவீதம் சரசாரியாக 2 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. இந்த ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அதன் வாக்கு சதவீதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டு பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற போது தமிழக பாஜக பரபரப்பானது. அதிரடியான செய்தியாளர் சந்திப்புகள், தமிழிசையின் ஆரவாரமான மேடை பேச்சுக்கள் பாஜக வேகமாக வளர்வது போன்ற பிம்பத்தை கொடுத்தது. ஆனால் 2016 தேர்தலில் பாஜக கடைசி இடத்தைப் பிடித்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது எல்.முருகன் பாஜகவின் தமிழ் நாட்டு தலைவரானார். அவரும் பரபரப்பான பேட்டிகளைத் தந்தார். திமுகவை கடுமையாக விமர்சித்தார். வேல் யாத்திரை சென்றார். குஷ்பு பாஜகவின் இணைந்து மக்களின் பார்வையை பாஜக பக்கம் திருப்பினார். திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்தார்கள். ஆனால் அதிமுக கூட்டணியுடன் சந்ததித்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கடுமையான தோல்வியை சந்தித்தது.

தமிழிசை, எல்.முருகன் வழியில் அண்ணாமலையும் இப்போது பரபரப்புகளை கிளப்புகிறார். அவை வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகமே.

இந்த வாக்கு சதவீத வரலாற்றைப் பார்க்கும்போது அதிமுகதான் இன்னும் பலமான கட்சியாக ஆட்சிக்கு சவால் விடும் கட்சியாக இன்று வரை இருக்கிறது என்பதே உண்மை.

ஜெயலலிதா இல்லாததும் பத்து வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததும் கட்சிக்குள் இருந்த பிரிவினைகளும் அதிமுகவுக்கு 2021 தேர்தலில் எதிராக இருந்தன. ஆனாலும் 33 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றதும் 66 தொகுதிகளில் வென்றதும் அதிமுகவின் செல்வாக்கு அதிகம் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.

இன்றைய அதிமுகவுக்கு தேவை ஒற்றுமையான கட்சி அமைப்பும் பாஜகவுக்கு அஞ்சாத மனநிலையும்தான். அதிமுகவை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிம்பங்களே காப்பாற்றிவிடும்.

எதிர்க் கட்சி யார் என்ற போட்டியில் பாமக, பாஜகவை விட அதிக வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் காங்கிரஸ் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் காமெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...