No menu items!

அண்ணாமலை கரை சேருவாரா? கோவை நிலவரம் என்ன?

அண்ணாமலை கரை சேருவாரா? கோவை நிலவரம் என்ன?

பாஜகவின் மாநிலத் தலைவரான அண்ணாமலை போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது கோவை. அண்ணாமலைக்கு ஆதரவாக பிரதமர் மோடியும், அவருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வரிந்து கட்டிக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட ஒட்டுமொத்த கோவையே திக்குமுக்காடி கிடக்கிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை நகரம் தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக கோவை தொகுதி உள்ளது.

மத அடிப்படையில் இந்துக்கள் 80 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 5 முதல் 10 சதவீதமும், இஸ்லாமியர்கள் 7 முதல் 8 சதவீதமும், ஜெயின் சமூகத்தினர் 1.5 சதவீதமும், மீதம் பிற மதத்தினரும் உள்ளனர். இந்துக்களில் கவுண்டர் சமூகத்தினர் இத்தொகுதியில் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்து நாயுடு சமூகத்தினரும், அருந்ததி இனத்தவர்களும் உள்ளனர்.

தொகுதியின் வரலாறு:

1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2019 ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக கூட்டணியின் ( மநீம நீங்கலாக ) சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட மா.கம்யூ கட்சியின் பி.ஆர்.நடராஜன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 150 வாக்குகளை பெற்று வென்றார். பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 92 ஆயிரத்து 007 வாக்குகள் பெற்றார். புதுமுகமாக களமிறங்கிய மநீம வேட்பாளர் மகேந்திரன் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளை பெற்றார்.

நம்பிக்கையுடன் திமுக:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை தொகுதியை ஒதுக்கிய திமுக, இம்முறை அத்தொகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற லட்சியத்துடன் தங்கள் சொந்த வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக முன்னாள் மேயரும், மாநகர் மாவட்ட அவைத் தலைவருமான கணபதி ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெற்ற 5.71 லட்சம் வாக்குகளும், புதிதாக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற 1.45 லட்சம் வாக்குகளும் சேர்த்து தங்கள் வேட்பாளரை எளிதில் ஜெயிக்கவைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக கூட்டணி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்ற குற்ரச்சாட்டை முன்வைத்து திமுக பிரச்ச்சாரம் செய்கிறது. தொகுதியில் அதிகமாக உள்ள சிறுபான்மையினர் மாற்றும் தொழிலாளர்கள் திமுக கூட்டணிக்கே வாக்களிப்பார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. அத்துடன் கடந்த தேர்தலில் ஒன்றாக போட்டியிட்ட பாஜகவும், அதிமுகவும் இம்முறை 2 அணிகளாக பிரிந்து நிற்பதும் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று திமுக கருதுகிறது.

விடாமல் துரத்தும் அதிமுக:

அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எம்.எல்.ஏ-க்கள், சகாக்களுடன் களமிறங்கி தீவிர பிரச்சாரத்தை மேற்கொடு வருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிடம் தோற்றாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் கொங்கு பகுதியில் பெருவாரியான சட்டமன்ற தொகுதிகளில் வென்றதால், கோவை நமக்குதான் என மார் தட்டுகிறது அதிமுக. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிமுக அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அக்கட்சியின் முக்கிய பிரமுகரான எஸ்.பி.வேலுமணி கோவையில் பெற்றுள்ள செல்வாக்கு, அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

கடுமையாக போராடும் அண்ணாமலை:

கன்னியாகுமரிக்கு அடுத்ததாக தமிழகத்தில் பாஜக அதிகம் வளர்ந்துள்ள தொகுதியாக கோவை பார்க்கப்படுகிறது. அதனாலேயே இம்முறை கோவை தொகுதியை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு மாநிலத் தலைவரான அண்ணாமலையை இங்கு நிறுத்தியிருக்கிறது பாஜக. அவரும் கடுமையாக போராடி வருகிறார்.

மருதமலை முருகன் கோவிலில் பிரசாரத்தைத் துவங்கிய அண்ணாமலை, ‘‘கோவையின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் போதைப் புழக்கத்தைத் தடுக்கவும், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அலுவலகம் (NCB) அமைக்கப்படும்,’’ என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அண்ணாமலை வென்றால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும், அதனால் ஒரு மத்திய அமைச்சரை தேர்ந்தெடுத்த பெருமை கோவைக்கு கிடைக்கும் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்கள் பாஜகவினர். மக்கள் ஆதரவை பொறுத்தவரை இப்போதைக்கு அண்ணாமலை 3-வது இட்த்தில் இருந்தாலும், அவரை முதல் இடத்துக்கு கொண்டுவர பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை கோவையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் பிரச்சாரம் அண்ணாமலையை முதல் இடத்துக்கு கொண்டுவருமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...