சரத்பாபு உடல்நலக்குறைவால் நிரந்தரமாக விடைப்பெற்றுவிட்டார். ஆனால் அவரது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை இங்கேயே விட்டு சென்றிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 200-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து சரத்பாபு சம்பாதித்த சொத்துக்கள் கமர்ஷியல் மால்களாகவும், அப்பார்ட்மெண்ட்களாகவும், வில்லாக்களாகவும், வீடுகளாகவும், இதர சொத்துகளாகவும் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் இருக்கின்றன.
இதுதான் இப்போது பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. இந்த சொத்துக்கள் யாருக்கு போய் சேரும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சரத்பாபு சொத்துக்களை உரிமைக் கொண்டாட வாரிசு யார் என்ற குழப்பம் அதிகரித்து இருக்கிறது.
சரத்பாபு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தெலுங்கு நடிகை ராமா பிரபா முதல் மனைவி. இவரை 1988-ல் விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது. இரண்டாவதாக 1990-ல் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்திருக்கிறார். அவரை 2011ல் விவாகரத்து செய்திருக்கிறார். மூன்றாவதாக திருமணம் செய்யும் எண்ணத்திலும் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இரண்டு திருமணங்கள் நடந்திருந்தாலும் சரத்பாபுவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்று கூறப்படுகிறது.
ராமா பிரபாவுடன் வாழ்ந்த போது விஜய சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணை சரத்பாபு – ராமா பிரபா தம்பதி தத்து எடுத்தார்கள் என்றும், தனது மகளாக அவரை வளர்த்து வந்தார் என்றும் சரத்பாபுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்த விஜய சாமூண்டீஸ்வரி, ராமா பிரபாவின் அக்கா மகள். அவருக்கு ஒரு வயது இருக்கும்போது தத்து எடுத்திருக்கிறார்கள். விஜயசாமூண்டீஸ்வரி பின்னர் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை திருமணம் செய்துக் கொண்டார் என்று தெலுங்கு திரையுலகத்தினர் கூறுகிறார்கள். ஆனால் விஜயசாமூண்டீஸ்வரியும் சரத்பாபுவும் தொடர்பில் இருந்தார்களா அல்லது ராமா பிரபாவை பிரிந்தப் பிறகு விஜய சாமூண்டீஸ்வரி தொடர்பு அறுந்து விட்டதா என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.
சரத்பாபுவுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். இதில் நான்காவதாக பிறந்தவர் சரத்பாபு. இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தனது உடன் பிறந்தவர்களுடனும், அவர்களது குழந்தைகளுடனும் உணர்வுப்பூர்வமான உறவில் இருந்திருக்கிறார்.
இதனால் இப்போது சரத்பாபுவின் சொத்துக்கள் ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டு, 13 பங்குகளாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதாவது சரத்பாபுவுடன் உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கென சமமாக பிரிக்கப்பட இருப்பதாக கூறுகிறார்கள்.
’சரத்பாபு எங்களுடன் பிறந்தவர். நான்காவதாக பிறந்தாலும் அவர் எங்கள் அனைவரையும் ஒரு அப்பாவைப் போல் அக்கறையுடன் கவனித்து கொண்டார். நாங்கள் அனைவரும் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்திருந்தோம். எல்லாவற்றிலும் ஒன்று சேர்ந்தே இருந்திருக்கிறோம். ஆனால் சரத்பாபு அவரது சொத்துக்கள் தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. அப்படி உயில் இருந்தால் அதில் நாங்கள் அதை ஒன்றும் செய்யப் போவது இல்லை. இல்லையென்றால், சொத்துக்கள் எங்களுடைய குடும்பத்தினருக்கு சமமாக பிரிக்கப்படும். இது எங்களுடைய குடும்ப விஷயம். அதனால் மற்றவர்கள் கவலைக் கொள்ள தேவையில்லை’ என்று சரத்பாபுவின் சகோதரர் கூறியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
சரத்பாபுவின் உறவினர்கள் தரப்பில் 13 பங்குகள் என்று சொல்லப்பட்டாலும், சரத்பாபு விஜய சாமுண்டீஸ்வரியை தனது மகளாக சட்டப்பூர்வமாக தத்தெடுத்து இருந்தால், முழுச்சொத்தும் அவருக்கே போய் சேரும். ஆனால் வளர்ப்பு மகள் இருக்கும் பட்சத்தில் அவர் இப்படி 13 பங்குகளாக பிரிக்க ஒப்புக்கொள்வாரா… அல்லது தத்து மகள் என்று சொல்லப்படும் விஜய சாமூண்டீஸ்வரி சட்டரீதியாக போராடுவாரா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாக முன்நிற்கின்றன.