எம் எஸ் தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி (M S Dhoni: The Untold Story) – ஹாட்ஸ்டார்
கிரிக்கெட்டில் தோனியின் காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இறுதி ஆட்டத்துக்குச் செல்ல, தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் வலுக்க, அவரைப் பற்றிய தேடல்கள் கூகுள் சர்ச்சில் அதிகரித்துள்ளன.
இந்த சூழலில் தோனியைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள M S Dhoni: The Untold Story திரைப்படம் உங்களுக்கு நிச்சயம் உதவும். நீரஜ் பாண்டேவின் இயக்கத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகனாக நடித்துள்ள இப்படம், தோனியின் கிரிக்கெட் பாசம், அறியப்படாத காதல், சீனியர்களுடனான தோனியின் மோதல் என்று பல விஷயங்களைச் சொல்கிறது.
கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளையும் பார்க்கவைக்கலாம்.
பொன்னியின் செல்வன் 2 – (தமிழ் அமேசான் ப்ரைம்)
தியேட்டர்களில் கடந்த மாதம் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஆனால் இலவசமாக பார்க்க முடியாது 399 ரூபாய் வாடகை செலுத்திப் பார்க்க வேண்டும்.
கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனுக்கும், வந்தியத் தேவனுக்கும் என்ன ஆனது, நந்தினியை ஆதித்த கரிகாலன் சந்தித்தானா? சோழச் சக்ரவர்த்தியாக சுந்தர சோழருக்கு பிறகு முடிசூட்டப் போவது யார்? என பல கேள்விகளுடன் முதல் பாகத்தை முடித்திருந்தார்கள். அந்த கேள்விகளுக்கு இந்த இரண்டாவது பாகம் பதிலளித்துள்ளது.
படத்தில் காதல், கோபம், துரோகம் என உணர்ச்சிகளைக்காட்டி கவர்ந்திருக்கிறார் விக்ரம். உலக அழகியின் பேரரழகில் மணி ரத்னம் & கோ-வுக்கு நம்பிக்கை இல்லை போலும், ஒரு ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அப்ளிகேஷனில் மேக்கப் போட்டு ஐஸ்வர்யா ராய் லுக்கை முடி செய்திருக்கிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது அவரது தோற்றம். உண்மையைச் சொல்வதென்றால். நந்தினியின் அம்மா மந்தாகினியாக வரும் ஐஸ்வர்யா ராய் கூட அழகாய் இருக்கிறார். வந்தியதேவன் கார்த்திக்கு இந்த பாகத்தில் சேட்டை செய்ய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஆக்ஷனிலும், கிடைத்த இடைவெளியில் குறும்பிலும் ரசிக்க முடிகிறது. பொன்னியின் செல்வன் டைட்டில் கேரக்டராக இருந்தாலும், ஜெயம் ரவிக்கு போதுமான காட்சிகள் இல்லை.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதையில் இல்லாத பல விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த பாகம் கல்கியின் பொன்னியின் செல்வனாக இல்லாமல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனாக இருக்கிறது.
மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் (தமிழ்) – ஆஹா
தயால் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ் நடித்துள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும் மஹத், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறார். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறார். ஆனால் அன்று இரவே அவர் கொல்லப்படுகிறார். ஆசிரமத்தில் மகனுடன் வளர்ந்த நண்பர்கல் இதற்கு பழிவாங்க திட்டமிடுகிறார்கள். அவர்களின் திட்டம் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
த்ரில்லர் படத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
அயல்வாசி ( Ayalvaashi -மலையாளம்) – நெட்பிளிக்ஸ்
அழுத்தமான கதை எதுவும் இல்லாமல் சாதாரணமான விஷயங்களை வைத்து ஒரு சுவாரஸ்யமான படத்தை எடுப்பதில் மல்லுவுட்காரர்கள் கெட்டிக்காரர்கள். அதற்கு மேலும் ஒரு உதாரணம் அயல்வாசி.
பக்கத்து வீடுகளில் வசிக்கும் 2 நண்பர்களைப் பற்றிய படம் இது. மிகவும் நெருக்கமாக இருக்கும் இவர்களில் ஒருவர் பணக்காரர் (பினு பாப்பு). மற்றவர் ஏழை (சவுபின் சாஹிர்). இதில் பினு பாப்புவின் ஸ்கூட்டரில் ஒரு சிராய்ப்பு ஏற்படுகிறது. சவுபின்தான் அதற்கு காரணம் என்று நினைக்கிறார் பினு பாப்பு. இதைத்தொடர்ந்து இருவரின் வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் வர, ஸ்கூட்டரில் சிராய்ப்பு ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து கொல்லப்போவதாக சபதம் செய்கிறார் சவுபின். ஸ்கூட்டரில் சிராய்ப்பை ஏற்படுத்தியது யார்? அவரை சவுபின் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கதை.