No menu items!

கொஞ்சம் கேளுங்கள் : செங்கோல்….! தமிழ்நாட்டை வசப்படுத்தும் மந்திரக்கோல்…!

கொஞ்சம் கேளுங்கள் : செங்கோல்….! தமிழ்நாட்டை வசப்படுத்தும் மந்திரக்கோல்…!

மே 27 – ஜவஹர்லால் நேரு மறைந்த தினத்தை மக்கள் மறந்து வருகிறார்கள். மறக்கலாமா என்றால் – அது காலம் செய்கிற கோலம்!

மே 28 – அதற்கு அடுத்த நாளாக பார்த்து புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுகிறது.

“உலகின் தலைசிறந்த ஜனநாயகவாதி நேரு. சுதந்திரம் அடைந்த உடனேயே 21 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்க நேரு உறுதியாக இருந்தார். கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் இதைக் கடுமையாக எதிர்த்தார். ‘எங்கள் இங்கிலாந்து நாட்டிலேயே இப்படி உடனடியாக எல்லோருக்கும் வாக்குரிமை தரப்படவில்லை. படிப்படியாக பல நூறு ஆண்டுகள் ஆயிற்று. பெண்களுக்கு வாக்குரிமை வழங்க நாங்களே தயங்கினோம்’ என்று மவுண்ட் பேட்டன் எதிர்த்தார். இந்திய தலைவர்கள் சிலரும் அவரைப் போல தயங்கினர். நேரு விடாப்பிடியாக இருந்தார். ‘என் மக்களை எனக்கு தெரியும்’ என்பது நேருவின் பதில்.

இந்திய தேசம் எத்தனையோ விதமான மன்னர்களால், சர்வாதிகாரிகளால், அந்நியர்களால், கடைசியாக ‘சுரண்டல் பிரிட்டிஷரால்’ ஆளப்பட்டிருக்கிறது. ஊமையர்களாய், செவிடர்களாய் இருக்க இந்திய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். உண்மை விடுதலை வாக்குரிமையால்தானே கிடைத்தது. மக்களிடமே அதிகாரம் வந்தது மிகப்பெரிய அரசியல் திருப்பம் அல்லவா!

இந்திய மக்களுக்கு ஜனநாயக பயிற்சி அளித்தார் நேரு. அவர் ஒரு சோஷியலிஸ்ட். ஆனால் தன் கருத்தை மக்கள் மீது திணிக்க அவர் முயற்சிக்கவில்லை. ‘ஜனநாயக சோஷலிஸம்’ என்ற புது வடிவம் கொடுத்தார். அதிலும் ‘ஜனநாயகம்’தான். ‘சூடான ஐஸ் க்ரீம்’ என்று ஏ.என். சிவராமன் போன்ற மேதைகளே அதை கேலி செய்தனர். இப்போது 5 நட்சத்திர ஹோட்டல்களில் சூடான ஐஸ்கிரீம் கிடைக்கிறதே.

“நேரு புகழை மறைக்க ஆர்.எஸ்.எஸ். துடிக்கிறது! 17 ஆண்டுகள் நேரு ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கருத்துகள் துளிர்விட முடியவில்லை என்ற கோபம் அந்த இயக்கத்துக்கு” என்றார் ஒரு முதிய தமிழ் தலைவர். “அப்படி இருக்க, நேருவை போற்றும் விதத்தில் மே 27ல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பார்களா? உண்மையில் ஜனநயகத்தை காத்து நிலைக்க வைத்த அவரது நினைவு நாளான்று இந்த கட்டிடத்தை திறப்பதுதான் நியாயம் என்றாலும்” அவர் சொன்னார்.

திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து புறப்பட்டிருக்கும் செங்கோல் பவனி பற்றி கேட்டபோது, அவருக்கு அந்தக் கால நினைவுகள் சரியாக மனதில் பதிவாகவில்லை.

“சுதந்திர நாளன்று – ஆட்சி மாறும் நேரத்தில் மங்கல இசை முழங்கினால் நல்லது என்ற கருத்து சொல்லப்பட்டது. டி.கே.சி. போன்ற அறிஞர்கள் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர இசையை ஏற்பாடு செய்யுமாறு ராஜாஜியிடம் கூறினார்கள். அகில இந்திய வானொலி மூலம் அது ஏற்பாடாயிற்று. 1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் அவரது அற்புத நாதஸ்வர இசை மெய்சிலிர்க்க வைத்த அனுபவம். ராஜரத்தினம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆஸ்தான வித்வான். ஆதீனகர்த்தரிடம் ஆசி பெற்று டெல்லி வந்தபோது இந்த செங்கோல் எடுத்து வந்திருக்கலாம். ராஜாஜியிடம் அவர்கள் கொடுத்ததை நேருவிடம் தருவதே சரி என்று ராஜாஜி கூறியிருக்கலாம்” என்று அவர் சற்று யோசித்தவாறு கூறினார்.

“ஆட்சி மாற்ற அறிகுறியாக செங்கோல் மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து நேருவிடம் தந்ததாக அப்போது செய்தி வந்த நினைவுகள் இல்லை. செங்கோல் மீது நந்தி இருக்கிறது. மதச்சார்பற்ற கருத்துக்கு பொருந்தாது என்று நேரு இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம்” என்றார் அவர்.

சுதந்திரம் வந்த பிறகும் மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக 10 மாதங்கள் நீடித்தார்.

“ஜனாதிபதி மாளிகையில் எந்தவித மதச்சார்புள்ள அடையாளங்களும் வெள்ளைக்கார ஆட்சிகளிலேயே இருந்தது கிடையாது. அவர்களுக்கான சர்ச் மாளிகையின் எதிர்ப்புறம்தான் கட்டிக் கொண்டார்கள். வெள்ளைக்கார வைஸ்ராய்கள் அங்கேதான் போவது வழக்கம்.

ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதி ஆனவுடன் அந்த மாளிகைக்கு உள்ளேயே லஷ்மி நாராயணன் கோயில் அமைத்தார். நேரு எதிர்த்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. மோதல் அரசியலில் காலத்தை வீணாக்க நேரு விரும்பியதில்லை. மதச்சார்பற்ற எண்ணத்துக்கு மக்களை பழக்கப்படுத்த நேரு விரும்பினார். மாறிவிட்ட இந்தியாவுக்கு அதுவே சரியானதாக இருக்கும் என்பது அவரது திடமான நம்பிக்கை. அரசியல் சட்டம்கூட மதச்சார்பற்ற தன்மையைதானே சொல்கிறது.”

“அது தவிர, காலனி ஆதிக்க அடையாளங்கள் நீடிக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்கிறவர்கள் மன்னர் காலத்துக்கு ஏன் போகவேண்டும்? ஒரு வேளை அந்த செங்கோல் தமிழ்நாட்டை வசப்படுத்தும் மந்திரக்கோல் என்று நினைக்கிறார்கள் போலும்! இப்போது தமிழ்நாட்டில் சோழப் பேரரசு பெருமைகளை மணிரத்னம் தூக்கிப்பிடித்திருக்கிறாரே!” – சிரித்தவாறு கூறினார் அந்த மூத்த தலைவர்.

புதிய நாடாளுமன்றத்தில் கெடுபிடிகள் எப்படி இருக்கும் என்பது இப்போது டெல்லி நிருபர்களிடையே பேச்சு. ஏற்கெனவே நிருபர்களுக்கு என்று முன்போல பார்லிமெண்டுக்கான நிரந்தர பாஸ் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றார் ஒரு டெல்லி நிருபர். குறிப்பிட்ட சில தினங்களுக்கான அனுமதி சீட்டு கேட்டு பெற்றால்தான் உள்ளே போகமுடிகிறது. விசிட்டர் பாஸ் போல் ஆகிவிட்டதே. புதிய பார்லிமெண்டில் தாங்கள் செய்தி சேகரிக்கும் நிலை எப்படி அமையும் என்ற கவலை ரேகைகள் நிருபர்களிடம்.

விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்ட எம்.பி.க்களுக்கு அதோடு ஸ்மார்ட் கார்டு தரப்பட்டிருப்பதாக பேச்சு. அதோடு வரவேண்டுமாம்.

புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால் அதற்கு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. சபாநாயகரை சுற்றி நின்றெல்லாம் முழக்கமிட முடியாதவாறு அவரது கம்பீர இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

“நாடாளுமன்றத்தை பிரதமர் திறந்து வைப்பதோடு நிற்காமல் அவை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கு பெற வேண்டும் என்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் சொல்கிறார்கள்” என்றார் டெல்லி நிருபர்.

“உங்கள் சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மென்மையான குரலில் விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததும் நிருபர்களின் கேள்விகளுக்கு சாந்தமாக பதிலளித்த விதமும் மிகவும் மாறுதலாக இருந்ததே” என்று டெல்லி நிருபர் விசாரித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சபாநாயகரின் ஒருபக்கம் சோழர் செங்கோல் இருக்குமாம். இன்னொரு புறம் ‘துலாக் கோல்’ வைத்தால் நல்லது என்றார் அந்த நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...