விஜய் மக்கள் இயக்கம் சுறுசுறுப்பாக பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இனி வரும் தேர்தல்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மிக அதிகமிருக்கும் என்பது உறுதியாகிவிட்டதால், அதை கையாள்வதில் தங்களது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தெளிவாக இருக்க வேண்டுமென விஜய் எதிர்பார்க்கிறாராம்.
இதனால்தான் பனையூரில் நடைபெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் சமூக ஊடகங்களில் பதிவிடும் போது பிரச்சினைகள் வராத வகையில் செயல்படவும், அப்படியே பிரச்சினைகள் வந்தால் அவற்றை எதிர்க்கொள்ள தேவையான சட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்னவென்றால், மக்களை எளிதில் சென்றடைய ஒரேவழி டிஜிட்டல் தொழில்நுட்பம்தான். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப், பெரும் பங்களிப்பை கொடுக்கும் என்பதால், ஒவ்வொரு தொகுதிக்கும், அங்குள்ள மக்கள் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், பிரச்சினை முடிக்கப்பட்டுவிட்டதா அல்லது இல்லையா என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள தனித்தனியாக வாட்ஸ் அப் குழுக்களை தொடங்குவது என ஒரே மனதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் இதுவரையில் சுமார் 1,600 வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 10,000 வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கும் எண்ணம் இருப்பதால், அவற்றை நுணுக்கமாக கையாள்வதற்காக எந்த வகையான குழுவாக தொடங்கலாம் என்ற ஆலோசனைகளும் நடைப்பெற்று வருகிறதாம்.
இந்த வாட்ஸ் அப் யுக்தியை முன்பே விஜயகாந்த் கையிலெடுத்ததாகவும், ஆனால் அம்முயற்சியை அவரது கட்சியினர் சரியான முறையில் கையாளாமல் போனதால் அதற்கு வரவேற்பு இல்லாமல் போனது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.