No menu items!

கிரிக்கெட் வீரர்கள் அப்பா ஆனபோது…

கிரிக்கெட் வீரர்கள் அப்பா ஆனபோது…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பாதியிலேயே அணியை விட்டு இந்தியாவுக்கு திரும்பியிருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா. அதனால் நேபாளத்துக்கு எதிராக இன்று நடக்கும் ஒருநாள் போட்டியில் அவர் ஆடமாட்டார். அடுத்த சுற்று போட்டிகளில் அவர் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவின் மனைவி சஞ்சனா பிரசவத்துக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மனைவியின் அருகில் இருப்பதற்காக அவர் அவசரமாக இந்தியா வந்திருக்கிறார். எதிர்பார்த்தபடியே இன்று அவருக்கு அங்கட் என்ற ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்திய அணியின் முக்கிய வீரரான பும்ரா, இப்படி தொடரின் பாதியில் அணியை விட்டு வரலாமா என்ற கேள்வி கிரிக்கெட் பண்டிட்களிடையே எழுந்துள்ளது. காயத்தால் கடந்த பல மாதங்களாக கிரிக்கெட் ஆடாமல் இருந்த பும்ரா, இப்போதுதான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் அடுத்தடுத்து ஆடி தனது மேட்ச் பிட்னெஸை நிரூபிக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது பாதியிலேயே அவர் அணியில் இருந்து விலகியது பலரது முகத்தை சுழிக்கவைத்துள்ளது. தொடர் முடிந்த பிறகு அவர் குழந்தையைப் பார்த்திருக்கலாமே என்ற குரல்களைக் கேட்க முடிகிறது. அதே நேரத்தில் கிரிக்கெட் வீர்ர்களும் மனிதர்கள்தானே. தனது குழந்தையை தூக்கும் முதல் நபராக தான் இருக்கவேண்டும் என்று ஒரு அப்பா நினைப்பது தவறா என்பதுபோன்ற குரல்களையும் கேட்க முடிகிறது.

இந்த சூழலில் நம் நாட்டின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தபோது எப்படி நடந்துகொண்டார்கள் என்று பார்ப்போம்..

1976-ல் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த காலத்தில் கவாஸ்கருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர் விடுப்பு எடுத்து பாதியில் திரும்பி வராமல் போட்டிகளில் ஆடினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீர்ர்கள், தங்கள் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை மிரட்டிக்கொண்டிருந்த காலம் அது. ஜமைக்காவில் நடந்த ஒரு டெஸ்ட்டில் மேற்கிந்திய அணியின் பந்துவீச்சால், 5 இந்திய பேட்ஸ்மேன்கள் காயமடைந்தனர். அப்போது சக வீரரான கெய்க்வாட்டிடம், “நான் இங்கு சாக விரும்பவில்லை. ஊருக்குச் சென்று மகனைக் காண விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் கவாஸ்கர். மகன் பிறந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகே கவாஸ்கரால் இந்தியாவுக்கு திரும்ப முடிந்தது.

2001-ம் ஆண்டில் தனக்கு மகள் பிறந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணியை வழிநடத்திக் கொண்டிருந்தார் சவுரவ் கங்குலி. குழந்தை பிறந்த தகவலைக் கேட்ட பிறகும் அவர் பாதியில் ஊருக்கு திரும்பவில்லை. ஒரு மாதத்துக்கு பிறகு, தொடர் முடிந்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகே அவர் குழந்தையைப் பார்த்தார்.

தோனிக்கு குழந்தை பிறந்தபோது அவர் மனைவியின் அனுமதியைப் பெற்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடிக்கொண்டு இருந்தார். மகள் பிறந்த தகவலை சொல்ல குடும்பத்தினர் முயன்றபோது தோனியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் ரெய்னா மூலமாக அவருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். குழந்தையைப் பார்க்கச் செல்லவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் இப்போது நாட்டுக்கான பணியில் இருக்கிறேன். குழந்தையை பிறகு பார்த்துக்கொள்ளலாம். உலகக் கோப்பைதான் முக்கியம்” என்றார். உலகக் கோப்பை தொடரை முடித்த பின்பே அவர் இந்தியா திரும்பினார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்துகொண்டு இருந்தபோதுதான் விரார் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த்து. பிரசவ நேரத்தில் தன் மனைவிக்கு அருகில் இருக்கவேண்டும் என்று கூறி, இந்த தொடரின் பாதியிலேயே இந்தியாவுக்கு திரும்பினார் அப்போதைய கேப்டனான விராட் கோலி. பத்திரிகைகளில் இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

ஒரு முக்கிய தொடரின்போது அணியின் கேப்டனான விராட் கோலி, தனது குழந்தைக்காக தொடரை பாதியிலேயே விட்டுச் செல்ல்லாமா என்ற விமர்சன்ங்கள் எழுந்தன. ஆனால் கோலி இந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் பிரசவத்தின்போது தன் மனைவிக்கு அருகில் இருப்பதை முக்கிய கடமையாக கருதினார். இந்த வகையில் பும்ராவுக்கு முன்னோடியாக இருக்கிறார் விராட் கோலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...