No menu items!

2026 தேர்தலில் விஜய்! – மிஸ் ரகசியா

2026 தேர்தலில் விஜய்! – மிஸ் ரகசியா

”என்ன எல்லோரும் சிரிச்சிக்கிட்டு இருக்கிங்க?” என்று கேட்டவாறு அலுவலக அறைக்குள் நுழைந்தாள் ரகசியா.

“சீமான் லேட்டஸ்ட் வீடியோ பார்த்துக்கிட்டு இருக்கோம்”

“எது அந்த ஒபிசி வீடியோவா? நானும் பார்த்தேன். சிரித்தேன். அதைவிட காமெடியான விஷயம்லாம் அரசியல்ல இருக்கு” என்று ஆரம்பித்தாள் ரகசியா.

”எதை காமெடினு சொல்ற? அண்ணாமலை பிரஸ் மீட்டையா?”

“அது முடிஞ்சுப் போச்சு. இப்ப ஓபிஎஸ் காமெடிதான்”

“ஓபிஎஸ்ஸா? இன்னும் சீன்ல இருக்காரா? என்ன காமெடி?”

“திருச்சில மாநாட்டை அறிவிச்சுட்டு கூட்டத்தை எப்படி திரட்டுறதுனு யோசிச்சிக்கிட்டு இருக்கார்”

”ஓபிஎஸ் மாநாட்டுக்கு சசிகலா, தினகரன்னு எல்லாரும் வருவாங்கன்னு சொன்னாங்களே?”

”யாரும் வருகிற மாதிரி தெரியலை. இதுவரை சசிகலாகிட்ட இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம். எடப்பாடிகிட்ட அதிமுக இருக்கும்போது ஓபிஎஸ் கூட்டத்துக்கு போனா அது சரியா இருக்காதுனு சசிகலா நினைக்கிறாங்க.”

“தினகரனும் வரலையா?”

”இல்லை. ‘நான் ஏற்கெனவே கட்சி தொடங்கி நல்லா நடத்திட்டு இருக்கேன். மக்கள்கிட்டயும் பிரபலமா இருக்கேன். அதனால உங்களை நம்பிவரத் தயாரா இல்லை. வேணும்னா நீங்க எங்ககிட்ட வாங்க’ன்னு சொல்லி அவரும் கையை விரிச்சுட்டாராம். தேவையில்லாம மாநாட்டை அறிவிச்சுட்டோமோன்னு கூட இருக்கிறவஙக கிட்ட புலம்பிட்டு இருக்காரு ஓபிஎஸ். அதனால இப்ப மாநில மாநாட்டை மண்டல மாநாடா சுருக்கிட்டாரு.”

”காமெடிதான். எடப்பாடி பழனிசாமியும் மதுரைல மாநாட்டை அறிவிச்சு இருக்காரே?”

“தென்மாவட்டங்கள்ல ஓபிஎஸ்ஸுக்குதான் செல்வாக்கு இருக்கு, தனக்கு செல்வாக்கு இல்லைங்கிற பிம்பத்தை இந்த மாநாடு மூலமா உடைக்க நினைக்கிறார் எடப்பாடி. அதுக்காக செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பான்னு ஆரம்பம் முதல் தன்னோட ஆதரவாளர்களா இருக்கறவங்ககிட்ட மாநாட்டை வெற்றிகரமா நடத்தற பொறுப்பை கொடுத்திருக்காராம் எடப்பாடி. அவங்களும் தேவையான வைட்டமின்களை இறக்கி சீரும் சிறப்புமா மாநாட்டை நடத்தப் போறாங்க!”

“திமுககாரங்க அண்ணாமலை மேல ரொம்ப கோபமா இருக்காங்க போல. உதயநிதி, அன்பில் மகேஸ்னு அண்ணாமலைக்கு எதிரா பேச ஆரம்பிச்சிட்டாங்களே?”

“அண்ணாமலையைப் பத்தி யாரும் கருத்து சொல்ல வேணாம்னு முதல்வர் அறிவுரை கொடுத்திருந்தாராம். ஆனாலும் அதை மீறி கட்சிக்காரங்க கருத்து சொன்னதை முதல்வர் ரசிக்கல. இது பத்தி துரைமுருகன்கிட்ட முதல்வர் சொல்லியிருக்கார். நான் தான் பேச வேணாம்னு சொன்னேனேன்னு முதல்வர் குறைபட்டுக்கிட்டாராம்.”

“கட்சித் தொண்டர்களும் அப்படித்தான் நினைக்கறாங்க. அண்ணாமலையோட ஊழல் பட்டியலைப் பத்தி கேட்டப்ப, பெருசா எந்த கருத்தையும் சொல்லாம துரைமுருகன் தவிர்த்தார். அவரை மாதிரியே மத்தவங்களும் அண்ணாமலை விவகாரத்தை கண்டுக்காம இருந்திருக்கலாம். ஆனா தேவையில்லாம அவருக்கு பதில் சொல்லியும் வழக்குப் போட்டும் அவரை பெரிய ஆளா ஆக்கிட்டதா புலம்பறாங்க.”

“அண்ணாமலையை திமுக எப்படி சமாளிக்கப் போகுது?”

“அண்ணாமலை மேல குறைஞ்சது 100 போலீஸ் ஸ்டேஷன்லயாவது அவதூறு கேஸ் கொடுக்க திமுக தலைமை திட்டமிட்டு இருக்கு. இது தவிர சில மாவட்ட நீதிமன்றங்கள்லயும் அவர் மேல அவதூறு வழக்கு போட திட்டமிட்டு இருக்காங்க. மொத்தத்துல அண்ணாமலையை தமிழ்நாடு முழுக்க சுத்த விடறது அவங்களோட திட்டம்.”

“பாதயாத்திரைக்கு பதிலா அவர் கோர்ட் யாத்திரை போகவேண்டி வருமோ?”

“இந்த விவகாரத்துல அதிமுகவையும் அண்ணாமலை இழுத்து விட்டதுல அந்த கட்சிக்காரங்களுக்கு வருத்தம். இதுபத்தி கருத்து கேட்டப்ப, ‘அவரெல்லாம் ஒரு தலைவரா? அவரைப்பத்தியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க’ன்னு எடப்பாடி சொல்லியிருக்கார். கே.பி.முனுசாமியும், ஜெயக்குமாரும் அண்ணாமலையை வறுத்து எடுத்திருக்காங்க. இப்படி அதிமுக தலைவர்கள் சிலரே அண்ணாமலையை எதிர்க்கும்போது சொந்த கட்சிக்காரங்க அண்ணாமலைக்கு ஆதரவா ஏதும் பேசாம இருந்திருக்காங்க. அண்ணாமலையோட நெருங்கிய நண்பரான அமர் பிரசாத் ரெட்டி மட்டும்தான் அதிமுக அணைந்து போன நெருப்புன்னு ட்விட்டர்ல பதிவு செஞ்சார். மத்தவங்க வாய் திறக்காததால அண்ணாமலை மூட் அவுட்ல இருக்காராம்.”

“உதயநிதியை துணை முதல்வராக்கணும்னு சட்டசபையில குரல் கொடுத்திருக்காங்களே?”

“அவர் அமைச்சர் ஆகறத்துக்கு முன்னாலயும் சட்டபையில அவரை அமைச்சர் ஆக்கணும்னு சில எம்எல்ஏக்கள் கோரிக்கை வச்சிருந்தாங்க. அப்புறம் அவர் அமைச்சரானார். அதேபோல இப்ப அவரை துணை முதல்வராக்கணும்னு சட்டமன்றத்துல கோரிக்கை வந்திருக்கு. முன்ன அவர் அமைச்சரான மாதிரி இப்ப அவர் துணை முதல்வராகவும் வாய்ப்பு இருக்குன்னு பேசிக்கறாங்க. சட்டசபை கூட்டத் தொடருக்கு பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் சில மாற்றங்களைச் செய்ய முதல்வர் திட்டமிட்டிருக்காராம். அப்பா உதயநிதிக்கு பிரமோஷன் கிடைக்கலாம்னு பேசிக்கறாங்க. ஆனா இன்னொரு தரப்போ நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னாடி பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காதுன்னு சொல்றாங்க.”

“அரசியல் களத்துல நடிகர் விஜய்யும் வேகமெடுக்கற மாதிரி தெரியுதே?”

“விஷயம் உங்க வரைக்கும் வந்துடுச்சா?.. 2026 சட்டசபை தேர்தல்ல தனிக்கட்சி தொடங்கி களத்துல இறங்க விஜய் தீவிரமா இருக்காரு. அதனால ஒரு புது பழக்கமா கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அவரோட சிலைக்கு மாலை போடச்சொல்லி விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு. அவங்களும் பல இடங்கள்ல அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டிருக்காங்க. இதை மத்த கட்சிக்காரங்க ஆச்சர்யமா பார்க்கறாங்க. அதே சமயம் எந்தெந்த ஊரில் விஜய் மக்கள் இயக்கம் அம்பேத்கருக்கு மரியாதை செஞ்சதுங்கிற பட்டியலை விஜய்க்கு அவங்க அனுப்பி வச்சிருக்காங்க. அரசு தரப்புல உளவுத்துறையும் இந்த விவரங்களை சேகரிச்சு முதல்வருக்கு அனுப்பியிருக்கு.”

“சிலைக்கு மாலை போட்டா மட்டும் அரசியலுக்கு வந்திர முடியுமா?
களத்துல இறங்கி வேலை செய்யாம அரசியல்ல எப்படி ஜெயிக்க முடியும்?

“கரெக்ட். விஜயகாந்த் அரசியலுக்கு வந்தப்ப தமிழ்நாடு முழுவதும் பயணம் பண்ணார். அதுக்கு முன்னாலேயும் நடிகர் சங்கம், போராட்டங்கள்னு நிறைய நேரம் களத்துலதான் இருந்தார். இதெல்லாம் விஜய்க்கு தெரியாதா? 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்து களமிறங்கலாம்னு இருக்கிறாராம்”

“விஜய் அரசியலுக்கு வந்தா பிரச்சாரத்துக்கு அவங்க மனைவி வருவாங்களா? விஜயகாந்துக்கு பிரேமலதா வந்தா மாதிரி?”

“நீங்க எங்க வர்றீங்கனு தெரியுது. இந்த வம்பையெல்லாம் சினிமா ஆட்கள்கிட்ட கேட்டுக்குங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...