No menu items!

விஜய் பெர்த் டே ஸ்பெஷல்

விஜய் பெர்த் டே ஸ்பெஷல்

இன்றைய தமிழ் சினிமாவில், ‘பாக்ஸ் ஆஃபிஸின் மாஸ்’, லேட்டஸ்ட் யூத்தின் பாஸ் சாட்சாத் இவர்தான். யெஸ்ஸ்ஸ்..

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ரூட்டில் அடியெடுத்த வைத்த ’நாடோடி மன்னன்’ எம்.ஜி.ஆர்., ’தளபதி’ ரஜினிக்கு பிறகு கமர்ஷியல் சினிமாவின் சூட்சுமத்தை புரிந்து வைத்திருக்கும் நம்ம ‘இளைய தளபதி’ விஜய்க்கு இன்று பிறந்த நாள். இப்போது ‘லியோ’வாக கர்ஜிக்கும் விஜய்க்கு வயது 49.

தமிழ் சினிமாவின் ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டம் என்றால் அது இளைய தளபதி விஜய்தான்.

ஆக்‌ஷனில் அதிரடி.. ஹியூமரில் சரவெடி..ரொமான்ஸில் அதிரிபுதிரி என ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் இளைய தளபதி பற்றிய சிறப்புக்கட்டுரை.

இளைய தளபதியோட செல்லப் பெயர் என்னன்னு தெரியுமா? அவரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எப்படி கூப்பிடுவாங்கன்னு தெரியுமா? எனி கெஸ்ஸிங்?.. நம்ம இளைய தளபதியோட செல்லப் பெயர் ‘மாப்பு’. அவரோட க்ளோஸ் டு ஹார்ட் ப்ரெண்ட்ஸ் எல்லோருமே ‘மாப்பு.. மாப்பு..’ன்னுதான் கூப்பிடுவாங்க. இளைய தளபதிக்கு இதைக் கேட்கிறதுல அப்படியொரு சந்தோஷமாம்.

ஒரே சாங்குல சக்ஸஸ்ஃபுல்லாகுற மாதிரி, வாழ்க்கையில முன்னுக்கு வர முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டு சமாளிக்க பழகுறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு லைஃப்போட ஃபீக்குக்கு போகலாம்னு கத்து கொடுத்தது என் அப்பாதான்னு அடிக்கடி சொல்றது விஜயோட பழக்கம். இன்றைய யூத்துல பல பேருக்கு ‘இளைய தளபதி’தான் ரோல் மாடல். ஆனால் நம்ம விஜயோட ரோல் மாடல் அவங்க அப்பா எஸ். ஏ. சந்திரசேகர்தானாம். அதே மாதிரி நம்ம இளையதளபதியோட ‘ரீல் மாடல்’ யாருன்னு தெரியுமா? யெஸ் நம்ம புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான் இவரோட ரீல் மாடல்.

ஒரு டைரக்டரோட மகனாக சினிமாவுக்குள்ளே நுழைஞ்சு… அப்புறம் தன்னைத்தானே நிலைநிறுத்திக்க போராடி ஜெயிச்சு….

தமிழ் சினிமாவோட டாப் ஆக்டராக இருக்கும் இளைய தளபதிகிட்ட உங்க ப்ளஸ் என்ன? மைனஸ் என்னன்னு கேட்டால், ‘என்னோட ப்ளஸ், மைனஸ் ரெண்டுமே ஒரே மேட்டர்தான். அது நிதானம். பல நேரங்கள்ல எனக்கு கைக்கொடுத்த நிதானம் சிலநேரங்கள்ல தேவையே இல்லாத சின்னசின்ன பிரச்னைகள்ல கொண்டு போய் விட்டிருக்கு’ ஆனால் இப்போ எதையுமே நிதானமாக செய்ய பழகிட்டேன்’ என்று என்கிறார் நம்ம இளைய தளபதி.

ஷூட்டிங் ஸ்பாட்டிலயோ இல்லன்னா ஒரு ஃபங்ஷனுக்கோ வந்தால் கூட இருக்கிற இடம் தெரியாம சைலண்ட்டாக இருக்கும் இளைய தளபதிக்கு ’க்ளோஸ் டு ஹார்ட்’ பிடிச்ச ஒரே சமாச்சாரம் ‘மழை’. சாரல் விழுந்தால் ஒரு குட்டிப் பையன் மாதிரி நனைவது இவரோட ஃபேவரிட். இவருக்கு பிடிக்காத ஒரே மேட்டர் ‘கோபம்’.

நம்ம இளைய தளபதியோட ஒரே பொழுது போக்கு விதவிதமான ஸ்கிரிப்ட்கள்ல வரும் சினிமாவை பார்ப்பதுதான். முக்கியமான படங்களை இவர் விட்டு வைக்கிறதே இல்ல.

தமிழ் சினிமாவோட ஆக்‌ஷன் கில்லியான நம்ம இளைய தளபதியை பயப்பட வைக்கிற மேட்டர் ஒண்ணு இருக்கு. சொன்னா நம்ப மாட்டீங்க. என்ன எதாவது கெஸ் பண்ண முடியுதா?…. அமெரிக்கா ஆர்மி குண்டு போட்டாலும் கூட இவர் இருக்கிற இடத்தைவிட்டு நகரமாட்டார். நியூக்ளியர் பவர் ஸ்டேஷன்ல ஆக்ஸிடெண்ட்டுன்னு டென்ஷனை கிளப்பினாலும், இவர் ரொம்ப கூல்லாக இருப்பார். ஆனால் ஒரேயொரு சிங்கிள் கரப்பான் பூச்சி மட்டும் வந்தா போதும்….. அப்புறம் ஸ்பாட்டிலிருந்தே நம்ம இளையதளபதி எஸ்கேப்தான்.

தன்னோடு வேலை செய்கிறவர்கள்கிட்ட, சினிமாவுல வர்ற மாதிரி பேஸ் வாய்ஸ்ஸூல, கடுகடுன்னு பேசுற வழக்கமே இவருக்கு இல்லை. இருபது வருடங்களாக இளைய தளபதியிடம் வேலைப் பார்க்கும் பர்ஸனல் டிரைவர், மேக்கப் மேன், உதவியாளர்கள் என எல்லோரும் ஆச்சர்யமாக சொல்வது இளையதளபதியோட அந்த ’கூல்’ கேரக்டரை பத்திதான்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷன் சமாச்சாரங்கள் ஏதாவது நடந்தால், இளைய தளபதியோட ரிலாக்ஸேஷன் அவரோட கார்தான். பொதுவாக இவர் கார்ல ட்ராவல் பண்ற ஸ்டைலை வைச்சே எந்த மூடுல இருக்காருன்னு ஈஸியாக கண்டுப்பிடிச்சிடலாம். காலையில ஷூட்டிங் போகும் போது, மனசு ரிலாக்ஸாக இருக்கணும்னு நினைப்பார். ஸோ காருக்குள்ளே ஏதாவது எஃப். எம். ஓடிக்கிட்டே இருக்கும். ஷூட்டிங் முடிஞ்சு வரும்போதோ இல்லைன்னா ஏதாவது டென்ஷன் இருந்தாலோ.. கார்ல ஏதாவது காமெடி சீன் டிவிடி ஓடிகிட்டு இருக்கும். அதிலயும் குறிப்பாக கவுண்டமணி – செந்தில் காமெடிதான் அதிகம் இருக்கும்.

விஜய்க்கு பிடிச்ச இன்னொரு விஷயம். செல்ஃப் டிரைவிங். ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு கிளம்பும் போது பெரும்பாலும் செல்ஃப் டிரைவிங்தான். சிட்டிக்குள்ளே கார் ஓட்டுறது இவருக்கு பிடிச்ச விஷயம். ஷூட்டிங் கிளம்பும் போது, லொகேஷனுக்கு போற வழியில ட்ராஃபிக் அதிகம்னு தெரிஞ்சுதுன்னா, தன்னோட ஹம்மரையோ இல்ல ரோல்ஸ் ராய்ஸ்ஸையோ ஓரங்கட்டிட்டு ஒரு குட்டி சுவிஃப்ட் காரை எடுத்துட்டு கிளம்பிடுவார். ட்ராஃபிக்கை சமாளிக்க தான் இந்த ஐடியா.

விஜய்க்கு அவரோட முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’லிருந்து இன்று வரை ஒரே மேக்கப் மேன் தான். இவருக்கும் வேலை ரொம்ப கம்மிதான். ஏன்னா நம்ம இளைய தளபதிக்கு ஹெவியாக மேக்கப் போட்டாலே பிடிக்காது. நேச்சுரல் மேக்கப்பைதான் ரொம்ப விரும்புவார்.

இளைய தளபதி அதிக முக்கியத்துவம் கொடுக்குற ஒரே விஷயம் அவரோட ஹேர் ஸ்டைல் சமாச்சாரம்தான். என்ன ஆனாலும் சரி தன்னோட தலையில யாரையும் கை வைக்கவே விட மாட்டார். முடிஞ்ச வரைக்கும் தன்னோட ஹேர் ஸ்டைலிலேயே நடிக்கணும்னு ஆசைப்படுவார்.

காஸ்ட்யூம் விஷயத்துல இப்பெல்லாம் ரொம்ப கவனமாக இருக்கிறார் இளைய தளபதி. காரணம் அவரோட வொய்ஃப் சங்கீதா. காஸ்ட்யூம் விஷயங்கள்ல சங்கீதா கொடுக்கிற டிப்ஸை சின்சியராக ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கிறார். பளிச்னு கண்களைப் பறிக்கிற கலர்களிலான டிஸைன்ஸ் பிடிக்காது. பெரும்பாலும் லைட் கலர்களைதான் விரும்பி அணிவது இவருக்கு பிடிக்கும். நம்ம இளையதளபதியோட ஷர்ட் அளவு 42. இடுப்பளவு 34 . பல வருஷமா இதே அளவை மெயிண்டெய்ன் பண்ணிட்டு வர்றார் நம்ம இளைய தளபதி.

தமிழ் சினிமாவோட கமர்ஷியல் ரூட்ல பக்காவாக செட்டாகியிருக்கிற ஹீரோக்கள்ல முன்னணியில இருக்கிறவர் இளைய தளபதி. தடதடக்கிற ஆக்‌ஷன், சிலுசிலுக்கிற பாட்டு, கலகலக்கிற காமெடின்னு தான் போகிற தன்னோட கமர்ஷியல் சினிமா ஃபார்மூலாவை பத்தி விஜய் என்ன சொல்றார்னு தெரியுமா? ’என்னோட சினிமா கேரியர்ல, நான் ‘திருமலை’ படம் பண்ற வரைக்கும் நடந்தது எல்லாம் தானாகவே நடந்தது. ’திருமலை’க்கு பிறகுதான், நாம இப்படிதான் படம் பண்ணனும்..நம்ம ரூட் இப்படிதான் இருக்கணும்னு முடிவு பண்ணினதுதான் நான் இப்போ போற ரூட். ‘வசீகரா’, ‘புதிய கீதை’ படங்களுக்கு பிறகு மக்கள் ரசிகர்கள் என்கிட்ட என்ன எதிர்பார்க்குறாங்கன்னு நிதானமா யோசிச்சு பார்த்தேன். அப்படி டேக் ஆஃப் ஆகிடுச்சு இந்த கமர்ஷியல் ரூட்’ என்கிறார் நம்ம இளைய தளபதி.

இளைய தளபதி ரொம்ப ரெஸ்பெக்ட் கொடுக்கிற பெஸ்ட் க்ரிட்டிக்ஸ் ரெண்டு பேர். அந்த ரெண்டு பேரும் அவரோட வீட்டிலேயே இருக்காங்க. முதல் க்ரிட்டிக் அவரோட பையன் சஞ்சய். ரெண்டாவது க்ரிட்டிக் மனைவி சங்கீதா. விஜய் நடிக்கிற படங்களை சீன் பை சீன் பிரிச்சு, கடுமையான விமர்சனம் பண்றது சஞ்சய்தான். ஸ்கூலில் ஃப்ரெண்ட்ஸ் கூட ஹெல்த்தியான விமர்சனங்களை வைக்கும் சஞ்சய் அதை அப்பாகிட்ட சொல்றது வழக்கம். சஞ்சயோட ஜட்ஜ்மெண்ட் ரொம்ப கரெக்ட்டாக இருக்கும் என்பதால இளையதளபதிக்கு சஞ்சயோட ரிப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம்.

’நாளைய தீர்ப்பு’ படத்துக்கு பிறகு மளமளவென ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்ட இளைய தளபதியின் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தையும் தாண்டி போய் கொண்டிருக்கின்றன. ஒரு மன்றத்துக்கு இருபத்தைந்து பேர்னு வைத்தாலே ஒரு கோடியே இருபத்தைந்து லட்ச ரசிகர்கள் என்று மாபெரும் ரசிகர் பட்டாளம் இவருக்கு பின்னால் இருக்குது. இது மட்டுமில்லாம பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள் எண்ணிக்கையும் ரொம்ப அதிகம்.

இளைய தளபதிக்கு அவரோட சகோதரி வித்யா மீது அப்படியொரு அன்பு. சின்ன வயதிலேயே அவங்க நம்ம எல்லோரையும் விட்டுட்டு போனதால, அவரோட பெயர்ல ‘வித்யா சாரிட்டபிள் ட்ரெஸ்ட்’ என்ற ட்ரெஸ்ட்டை தொடங்கி அதன் மூலமா ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித் தொகை, இலவச திருமணம் என பல நல்ல காரியங்களை சைலண்ட்டாக செய்து வருகிறார் இளைய தளபதி.

தமிழ் சினிமாவுல நளினமான டான்ஸ் ஆடுற ஹீரோக்கள்ல விஜய்க்கு ஒரு தனி இடம் எப்பவும் இருக்கும். டான்ஸில் தூள் கிளப்பும் இவரோ இதுவரை யாரிடமும் நடனத்திற்கென தனிப் பயிற்சி பெற்றது இல்லை. தான் நடிக்கும் படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளின் நடனத்திற்காக ரிகர்ஸல் செய்யும் பழக்கமும் இதுவரை இருந்தது இல்லை. கடினமான டான்ஸ் மூவ்மெண்ட்கள் இருந்தால் மட்டும் டான்ஸ் மாஸ்டரை ஒரு முறை ஆடச் சொல்லி, அதைப் பார்த்துவிட்டு சிங்கிள் டேக்கில் ஒ.கே. செய்து மாஸ்டரை ஆச்சர்யப் படவைப்பது இளையதளபதியின் ஸ்பெஷல் குவாலிட்டி.

டைனிங் டேபிளை பொறுத்தவரை பதினைந்து வயசிலிருந்து இன்றுவரைக்கும் செல்ஃப் சர்வீஸ்தான். ஒரு முறை உணவு பரிமாறிக்கொண்டால் அதற்கு பிறகு இரண்டாவது முறையாக உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கமில்லை. இதனால் எப்போதும் அரை வயிறு சாப்பாடுதான்.

விஜய்க்கு அவ்வளவு சுலபத்தில் கோபம் வராது. எல்லை மீறி கோபம் வந்தால் அப்புறம் கொஞ்சம் கஷ்டம்தான். அதிகம் அதிராமல் சத்தம் போடுவார். ஆனால் அடுத்த விநாடியே கூல்லாகி விடுவார். உடனே ஸாரி கேட்பது விஜயின் பழக்கம்.

வீட்டில் வேலைச் செய்கிறவர்கள் யாரையும் திட்டினால் விஜய்க்குப் பிடிக்காது. யாராவது தப்பு பண்ணினால் கூட அவர்களை நாலு பேர் முன்னிலையில் அவர்கள் செய்த தப்பைச் சொல்லிக் காட்டகூடாது என்பார். எதுவாக இருந்தாலும் தனியாக அழைத்து மெதுவாக சொல்லவேண்டும் என்பது அவருடைய பாலிஸி.

லேட்டஸ்ட் கார்களை ஆர்வத்துடன் ரசிப்பது விஜயின் பழக்கம். அந்தளவிற்கு கார் ப்ரியர். மார்கெட்டிற்கு வரும் லேட்டஸ்ட் கார்களை விரும்பி வாங்குவார். அதுவும் கருப்பு நிற கார்கள்தான் விஜயின் ஆல் டைம் ஃபேவரிட்ஸ். எல்லா கார்களுக்கும் ஃபேன்ஸி நம்பர்களைதான் விரும்பி வாங்குவார்.

புதுமுகங்கள் நடித்தப் படங்களின் ப்ரிவியூ காட்சிகளுக்கு அழைப்பு வந்தால் மறுக்காமல் வந்து பார்ப்பார். படம் சுமாராக இருந்தாலும் கூட குறைகளைச் சொல்லாமல்

அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பாஸிட்டிவான விஷயங்களை மட்டும் சொல்வது விஜயின் ஸ்டைல்.

கல்வி தானம் என்றால் அதற்கு முன்னுரிமை கொடுப்பது விஜய்க்குப் பிடிக்கும். செய்தித் தாள்களில் யாருடைய கல்விக்காவது பணம் தேவை என்று செய்திகள் வந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவது விஜயின் நல்ல பழக்கங்களில் முக்கியமானது.

கஷ்டமான நடன காட்சிகளில் ஆடினாலோ, ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்தாலோ ஷூட்டிங் முடிந்ததும் நேராக வீட்டிற்கு போய் வெறும் தரையில் தலையணை கூட இல்லாமல் படுப்பது விஜய்க்கு பிடிக்கும். இப்படிதான் உடல் வலிகளிலிருந்து ரிலாக்ஸ் செய்துக் கொள்ளவது வழக்கம்.

சாப்பாட்டைப் பொறுத்தவரை சிம்பிளாக இருந்தாலே போதும். அந்த மெனு வேண்டும், இந்த பதார்த்தம் வேண்டுமென்று சாப்பாட்டு விஷயத்தில் யாரையும் தொந்தரவு பண்ணுவது இல்லை. ரிலாக்ஸாக நேரம் கிடைத்தால் அவரே சமையலறைக்குச் சென்று ஜாலியாக தோசை சுட ஆரம்பித்து விடுவார். நம்ம இளையதளபதி தோசை ஸ்பெஷலிஸ்ட்.

உங்களோட படங்கள் ஒரே மாதிரியான ஸ்டைலில்தான் இருக்கும்னு ஒரே கமெண்ட்டாக இருக்கேன்னு கமெண்ட் அடிக்கிறவங்களுக்கு இளைய தளபதி சொல்ற ஒரே பதில் இதுதான்…

“புதுசு புதுசாக முயற்சி பண்ணி, இந்த கமர்ஷியல் ரூட்டை விட்டு விலகி வந்து படம் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆஃப் பீட் படங்கள் பண்றதுலயும் எனக்கு விருப்பமில்ல. நான் கமர்ஷியல் படங்கள்ல நடிச்சாலும், ஆஃப் பீட் படங்களை ரசிச்சுப் பார்ப்பேன். கமர்ஷியல் ப்ரேம் வொர்க்கை விட்டு விலகி படம் பண்ண மாட்டேன். ஆனால் அந்த ப்ரேமுக்குள்ளே என்னென்ன வித்தியாசங்கள் பண்ண முடியுமோ அதையெல்லாம் முயற்சி பண்ணுவேன். ’நீ ரிச் ஆகணும்னா, கமர்ஷியல் சக்ஸ்ஸூக்கு அதன் தளம் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கணும்’னு என் அப்பா அடிக்கடி சொல்வாங்க. சில படங்கள்ல அந்த தளத்தை ஸ்ட்ராங்காக பார்த்துக்காம விட்டிருப்பேன். அதுதான் சில சமயம் மைனஸாகி இருக்கு. அதை இப்போ கவனமாக பார்த்துக்குறேன்.” என்பார்.

இன்றைய தமிழ் சினிமாவுல நம்ம இளைய தளபதிக்குன்னு ஒரு கமர்ஷியல் ஃபார்மூலா இருக்கு. அதைப் பற்றி கேட்டால்,”அண்ணா இது என்னுடைய ஃபார்மூலா இல்லைங்கண்ணா. காலம் காலமாக இருக்ககூடிய ஃபார்மூலாதான். எம்.ஜி.ஆர். ஃபார்மூலா. வில்லுவில் கூட ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் -_ சரோஜா தேவி நடித்த ‘அன்பே வா’ படத்திலிருந்து ஒரு காட்சி ஓடும். அதைப் பார்த்து, ‘ தலைவர் ரூட்டை ஃபாலோ பண்ணினால் என்றைக்கும் சக்ஸஸ்தான்’ என்று சொல்லியிருப்பேன். நான் போறது அவருடைய ஃபார்மூலாதான். நான் அந்த மாதிரி படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். என்ஜாய் பண்ணி யிருக்கிறேன். அதனால் நானும் நடிக்க வந்த பிறகு அதே போல் படம் நடிக்க ஆசைப் பட்டேன். இதுதான் என்றைக்கும் என் ஃபார்மூலா. அதே நேரம் டெக்னிக்கல் விஷயத்தில் இன்னும் சில உயரங்களைத் தொடுகிற முயற்சிகள்தான் என்னோட அடுத்தக் கட்டமாக இருக்கும்’னு சொல்றார் நம்ம இளைய தளபதி.

இளைய தளபதியோட ஒரு அற்புதமான முயற்சி…சமூகப் பார்வையிலான ஒரு ஆரம்பக்கட்டம் ஒசூர் ஒன்றியத்தில் விஜயின் நற்பணி மன்ற ரசிகர்கள் இளைய தளபதி பெயர்ல பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். இதுவரை ஏழை குழந்தைகளின் கல்விக்கு புத்தகம், நோட் கொடுத்து வந்த ரசிகர்கள் இன்றைக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பள்ளிக்கூடம் கட்டியது விஜயையே ரொம்ப நெகிழ வைத்துவிட்டது. இந்த மாதிரியான முயற்சி முழுவதுமாக வெற்றி பெற்றால் நீங்கள் சொன்ன மாதிரி தமிழ் நாடு முழுவதும் கொண்டு வரும் எண்ணமும் இருக்கிறதுன்னு இளைய தளபதி சொல்லியிருக்கார். இதன் தொடர்ச்சியாகவே 2023-ல் மாநில அளவில் முதலிடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை தனது சொந்த செலவில் வரவழைத்து கெளரவித்து இருக்கிறார்.

பொதுவாகவே கமர்ஷியல் சினிமாவுல் அடிக்கடி கிளம்பும் சர்ச்சை… ஒரு டைரக்டரோட க்ரியேட்டிவிட்டியில் மாஸ் ஹீரோக்கள் தலையிட்டு கரெக்‌ஷன் சொல்வது.. இதனால் பல சகஸஸ்ஃபுல்லான பல காம்பினேஷன்கள் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் இந்த விஷயத்துல நம்ம இளைய தளபதியோட பாணியே வேற. ’ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தால் அதற்கான பொறுப்புகளும் அதிகம் என்பதை நான் உணர்ந்துக் கொள்ளவே ரொம்ப வருடங்களாகிவிட்டது. என்னுடைய வேலை என்றால் கதைகள் கேட்பேன். அதில் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறேன். முதலில் உட்கார்ந்து கதையைக் கேட்கும் போது எனக்கு தேவையானதை பேசிவிட்டால் பிறகு அந்த இயக்குநருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பேன். பிறகு அதில் தலையிடுவதே இல்லை. இது பலமுறை வொர்க் அவுட்டாகி இருக்கிறது. சில சமயம் தவறியும் போயிருக்கிறது. கமர்ஷியலாக ஜெயிக்க வேண்டும் என்கிற ’பொறுப்புகள் என் தலை மீது இருக்கிறது. அதையும் நான் தான் கவனிக்க வேண்டுமென்பதைப் புரிந்துக்கொண்டேன். இதற்கு பிறகுதான் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு படங்களை தேர்ந்தெடுப்பது, படத்தின் ரிட்டர்ன் எப்படி வரும் என்று பார்த்து பண்ண ஆரம்பித்திருக்கிறேன்.’ என்கிறார் இளைய தளபதி.

ஒரு படம் ஜெயிப்பதற்காக நம்ம ஊர் ஹீரோக்கள் படும் பாடு ரொம்ப ரொம்ப அதிகம். மெல்லிசாக இருக்கிற சிங்கிள் பேக் உடம்பை, ஜிம்முக்கு போய் முறுக்கி ‘சிக்ஸ் பேக்’ ஆக்கி நடிச்சு, ஆக்‌ஷன் பண்ற இன்னிக்குள்ள ட்ரெண்ட்ல ‘நான் என்னிக்கும் சிங்கிள் பேக்கையே நம்புற ஸ்டார் நம்ம இளைய தளபதி. “ஒரு படம் ஜெயிக்கணும்னா ஸ்டோரிங்கிற சிங்கிள் பேக் நல்லா இருந்தா போதும். படம் பட்டையைக் கிளப்பும்.’ என்று ஜாலியாக கமெண்ட் அடிப்பார்.

இன்றைய கமர்ஷியல் சினிமாவில் இருக்கும் பிரம்மாண்டமான போட்டிகளுக்கு இடையே நட்பு பாராட்டுவதை இன்றும் ஃபாலோ பண்ணுவதோடு அடுத்து வரும் இளைய தலைமுறை நடிகர்களுக்க்கும் முன்னுதாரணமாக இருப்பது தல – தளபதியின் நட்பு. ‘தல’ நடிச்ச மங்காத்தாவுல தளபதி படத்தோட காட்சியொன்று இருக்கும். அதே மாதிரி தளபதி படமான வேலாயுதத்துல தல படத்தோட பாடல் காட்சி ஒன்றும் இருக்கும்.

’மங்காத்தா’வுல என் படத்தோட காட்சியைக் காட்டினதால, என் படத்துல மங்காத்தா பாடலை வைக்கல. ஒரு சீன் பின்னணியில ரேடியோவுல பாட்டு கேட்கிற மாதிரி இருந்தா, அந்த பாடலை படத்தோட எஃபெக்ட்ஸ் நடக்கும்போதுதான் மிக்ஸ் பண்ணுவாங்க. அந்த நேரத்துல உதவி இயக்குநர்கள் என்கிட்ட வந்து, ‘அண்ணே அந்த சீன் பின்னணியில் ரேடியோ பாட்டு கேட்கும். அதுக்கு நாம ’மங்காத்தா’ படத்தோட பாட்டை யூஸ் பண்ணலாமா?’னு கேட்டாங்க. இதை நீங்க என்கிட்ட கேட்கவே தேவை இல்ல. தாராளமாக யூஸ் பண்ணுங்க. நல்ல விஷயம். ஆரோக்கியமாக இருக்கும்னு சொல்லியிருக்கார் நம்ம இளைய தளபதி.

முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் பாடல் காட்சிகளில் தனது நாக்கை கன்னங்களின் உள் பக்கம் மடக்கி நாட்டியாக சிரிப்பதை ஸ்டைலாக வைத்திருந்த விஜய், தனது திருமணத்திற்கு பிறகு அந்த மானரிஸத்தை நிறுத்திவிட்டார். எவ்வளவு நாளைக்குதான் அப்படியே நடிப்பீங்க என்று அவரது மனைவி சங்கீதா ஒரு சீரியஸான கமெண்ட்டை வைக்க இந்த முடிவை எடுத்தார் இளைய தளபதி.

இளைய தளபதிக்கு பாக்கெட் மணி வைத்து கொள்ளும் பழக்கம் கிடையாது. அவரோட வாலட்டை வாங்கி பார்த்தால் அது empty ஆகதான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...