விஜய் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் முடித்து கொடுத்த பின்பு அரசியலுக்குள், வருவதாக தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
அந்த வகையில் அவர் நடித்து கொண்டிருக்கும் ஒரு படம் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’. இந்த வரிசையில் மற்றொரு படமும் இருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பவர் தெலுங்கில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதை வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தயாரிப்பாளர் டிடிவி தனய்யா.
டிடிவி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கவிருக்கும் விஜய்69 படத்தை இயக்கப்போவது வெற்றி மாறன் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
வெற்றி மாறன் சொன்ன கதையைக் கேட்ட விஜய், உற்சாகமானதாக கூறப்படுகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்கிற சவால்களின் சக்தியை நம்மால் ஈடு செய்யவே முடியாது. இந்த சண்டையில் நம் பக்கம் மரணம் மட்டுமே மிஞ்சும் என்று தங்களது இயலாமையினால் கதறியழும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் போராட்டத்தையும் பற்றிய கதை அது.
ஒரு விவசாயின் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு இடையேயான போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதை.
அடுத்தடுத்த விளைச்சல்களும் ஒன்றுமே இல்லாமல் போக, விவசாயியான சுதாகர் பத்ராவுக்கு கடனின் சுமை கழுத்தை நெறிக்குமளவிற்கு அதிகமாகிறது. வேறுவழியின்றி சுதாகர் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த மாவட்டத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க கமிட்டி, அவரது தற்கொலை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுகிறது. அவரது மறைவுக்கு உண்டான இழப்பீட்டையும் அவரது மனைவிக்குத் தர மறுக்கிறது.
சுதாகரின் தம்பி கங்கிரி, தனது அண்ணனின் மரணத்திற்கான நியாயத்தை பெற்றே தீர்வது என்ற நோக்கத்தோடு களத்தில் இறங்குகிறார். அண்ணனுக்கு நீதியை மறுத்த அதிகாரமிக்க அதே மாவட்ட கமிட்டியின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்கச் செய்ய போராட விரும்புகிறான்.
அந்த மாவட்டத்திலிருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேயூர் காசிநாத். இவர் ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் வைஷ்ணவ் காசிநாத்தின் மகன். வைஷ்ணவ் காசிநாத்தின் டெல்லி அரசியலில் வாரிசு.
கேயூர் காசிநாத்திற்கு எதிராக முதல் பிரச்சினை கிளம்புகிறது. அவரது தொகுதியில் மாவட்ட கமிட்டியால் தற்கொலைதான் என சர்டிஃபிகெட் கொடுக்கப்படும் ஒவ்வொரு தற்கொலையும் கடன் தொடர்பானவையாக இருக்கின்றன என்பது தெரிய வருகிறது. இந்த குற்றச்சாட்டு அவரது கட்சியின் இமேஜை காலி பண்ணுகிறது. கேயூர் காசிநாத்தின் கேரக்டரையும் நாசம் பண்ணுகிறது.
இந்த மாதிரி ஒரு தப்பான அரசியல்வாதிக்கு எதிராக புத்திசாலித்தனமான விவசாயியான கங்கிரி களத்தில் இறங்குகிறார். தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் தக்க வைத்து கொள்ள கேயூர் காசிநாத்தும் சளைக்காமால் அரசியல் செய்கிறார்.
இந்த இருவருக்கும் இடையேயான இந்த மோதல் ஒரு போரைப் போல வேகமெடுக்கிறது. இருவரும் இனி தங்களுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பவே முடியாத அளவிற்கு வரம்புகளை மீறுகின்றனர்,
போர் என்றால் அதில் ஒருவர் மட்டுமே வெற்றிப் பெறமுடியும். அது யார் எப்படி நிகழ்ந்தது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லுக் கதைதான் இது.
இந்த கதை ஒரு நாவலை அடிப்படையாக கொண்டது. ‘ஷூஸ் ஆஃப் த டெட்’ [‘Shoes Of The Dead’] என்பதுதான் அந்த நாவலின் பெயர். இதை பிரபல எழுத்தாளர் கோட்டா நீலிமா [Kota Neelima] எழுதியிருக்கிறார்.
இந்த நாவலின் நடைபெறும் சம்பவங்கள் ஆந்திராவில் நடப்பவை. இதை தமிழ்நாட்டுக்கும், இங்குள்ள அரசியல் சூழலுக்கும், விவசாயிகளின் போராட்ட த்திற்கும் ஏற்றபடி திரைக்கதையை மாற்றியமைத்து வெற்றி மாறன் இயக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
அரசியலுக்கு வர நினைக்கும் விஜய்க்கு, மக்களின் பக்கம் நிற்கும் ஒரு ஹீரோ என்பதை போன்ற ஒரு உணர்வை இப்படம் மூலம் கொடுக்கமுடியும் என விஜய் தரப்பில் உற்சாகம் காட்டப்படுகிறதாம்.