No menu items!

சில்கா ஏரியில் ஐராவதி டால்பின்!

சில்கா ஏரியில் ஐராவதி டால்பின்!

நோயல் நடேசன்

சீனாவில், சுதந்திரத்தின் பின்னர் சீன கம்மியூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோ சேதுங், தானியங்களை உண்பதால் நான்கு உயிரினங்களை அழிக்கவேண்டும் என்று தீவிரமான நடவடிக்கை எடுத்தார். அதன் பயனாக சீனாவில் எலி, இலையான், நுளம்பு, குருவி ஆகிய நான்கு இனங்களும் அழிந்தன. இதனால் இலையான், எலி, நுளம்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு உண்டாகக்கூடிய சில நோய்கள் குறைவடைந்தது உண்மைதான். ஆனால், குருவிகள் அழிந்ததால், வெட்டுக்கிளிகள் பெருகி, தானியங்கள் உருவாகும் முன்பே உணவுப் பயிர்கள் அழியும் நிலையும் ஏற்பட்டது. அதனால், சீனாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் தேன் குருவிகள் இல்லாத இடங்களில் குறிப்பிடத்தக்க அளவு தானிய விளைச்சல் அழிந்துவிடும் என்று எங்கோ படித்திருக்கிறேன்.

இந்தப் பூமியில் எல்லா உயிரினங்களும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே உள்ளன. அவைகளால் சூழலியலில் ஒரு சமநிலை பேணப்படுகிறது. இப்போது, அந்தச் சமநிலைக்கு, இதுவரை காலமும் இல்லாத ஒரு சவால் ஏற்பட்டுள்ளது. ஆறு, குளம், காடு, கடல் என்பன அழியும்போது அவைகளை நம்பி வாழும் மிருகங்களும் அழிந்து விடுகின்றன.

நான் ஒரு விலங்கு வைத்தியர் என்பதால் விலங்குகள் எப்பொழுதும் எனது நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்தவையாக உள்ளன. சில மிருக இனங்கள் அழிந்தால் அவற்றை மீண்டும் கொண்டு வருதல் இலகுவானது அல்ல. இதற்கு நல்ல உதாரணமாக, இந்தியாவில் உள்ள வேங்கைப்புலிகளை எடுத்துக்கொள்ளலாம். அவை நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவை. அவற்றில் சில வேங்கைப்புலிகள் இறந்துவிட்டன. அதனால், ஒரு வேங்கைப்புலி குட்டி போட்டாலும் இந்தியப் பிரதமர் மிகவும் புளகாங்கிதம் அடைகிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள தஸ்மேனியன் புலியை அழித்துவிட்டு டி.என்.ஏ. (DNA) மூலம் மீள உருவாக்கும் முயற்சி நாற்பது வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாற்பதினாயிரம் புலிகள் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் எண்ணிக்கையற்ற புலிகள் அழிந்துபோக, 1964ஆம் ஆண்டில் வெறும் நாலாயிரம் புலிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதன் பின்னர், 1970ஆம் ஆண்டளவில் பல காரணங்களால் அந்தத் தொகை, இரண்டாயிரமாகக் குறைந்தபோது, அதிர்ச்சியடைந்த, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 1973இல் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அந்தத் திட்டத்தின் அடிப்படையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக உத்தரகாண்டு மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், இந்தியாவில் தற்பொழுது உள்ள புலிகளின் தொகை மூவாயிரத்திற்கு மேலாகி உள்ளது. ஆனால், உத்தரகாண்டு மாநிலத்தில் ஏற்பட்ட வெற்றி, நாட்டின் மற்றைய இடங்களில் கிடைக்கவில்லை.

புலிகளைத் தேடி நான் தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள பெரியார் வனத்திற்குச் சென்றபோது அங்கு புலிகளின் மலத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. நாட்டில் மொத்தமான புலிகளின் தொகை கூடினாலும் பெரும்பாலான வனங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது.

புலிகளைத் தவிர இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாகப் பாதுகாக்கப்படும் மற்றும் ஒரு விலங்கு ஐராவதி டால்பின் (Irrawaddy Dolphin). இது ஆஸ்திரேலியாவிலும் தென்ஆபிரிக்காவிலும் உள்ள டால்பின்களிலிருந்து வேறுபட்டது. இந்த ஐராவதி டால்பின்கள் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மட்டுமே உள்ளன. இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் சில்கா ஏரியில் (Chilka Lake) இவை வாழ்கின்றன. லாவோஸ், பர்மா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இவை அருகி வருகின்றன.

கழுத்தில்லாமலும் புல்ரெரியர் நாயின் முகத்தோடும் காணப்படும் இவைகளைப் பார்க்க நான் விரும்பினேன். இவற்றைப் பற்றி, நான் அறிந்த முக்கியமான ஒரு விடயம் என்னை வியக்க வைத்தது. இவை தங்கள் மூளையின் பாதியைத் தூக்கத்திலும் மீதியை விழிப்பாகவும் வைத்திருக்கக்கூடிய தன்மையைக் கொண்டவை. இந்த விடயத்தைக் கேள்வியுற்றபோது, கிராமத்தில் ஏழைப் பெண் ஒருத்தி புடவையின் ஒரு பாதியை உடுத்துக்கொண்டு, மறுபாதியைக் காயவைப்பது எனது மனதில் நிழலாடியது. இங்கும் நோக்கம் பாதுகாப்பே ஆகும்.

டால்பின்கள் நிலத்திலுள்ள ஹிப்போபொட்டமஸ் என்ற நீர் யானைக்கு பங்காளி உறவாகியவை. அதாவது இரண்டும் ஒரே முன்னோர்களிலிருந்து தோன்றிய பரம்பரையைக் கொண்டவை. இரண்டும் முலையூட்டிகள். நீர் யானைகள் 17 மாத கர்ப்பத்தின் பின் கன்று ஈன்று பாலூட்டுபவை. மூன்று வருடங்கள் தாயுடனேயே குட்டிகள் இருக்கும்.

ஐராவதி டால்பின்கள், நன்னீரில் வாழ்பவை அல்ல. ஆறுகள் வந்து கடலுடன் கலக்கும் கழிமுகங்களில் உள்ள உப்புத்தன்மையை விரும்பி அப்படியான இடங்களில் வாழ்பவை.

டால்பின்களுக்கும் மீனவர்களுக்கும் உறவிருக்கிறது. தென்னாசிய நாடுகளில் வேட்டையாடும் மனிதர்களுக்கு நாய்கள் உதவுவதுபோல், ஆற்றில் மீன் பிடிக்கும் மனிதர்களுக்கு டால்பின்கள் உதவுகின்றன. நாய்கள் செம்மறி ஆடுகளைத் துரத்திச் சுற்றி வளைத்து ஓரிடத்தில் ஒன்றாக்கி, வேட்டையாடுவோருக்கு உதவுவதைப் போல டால்பின்கள், மீன் கூட்டங்களைத் துரத்தி மீனவர்களின் வலைகளுக்கு அருகில் கொண்டு செல்லும்போது அவர்களால் இலகுவாக வலைவீசி அந்த மீன்களைப் பிடிக்கமுடியும்.

டால்பின்களைப் பற்றி, இந்தோனேசியாவின் களிமந்தாங் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் தொன்மைக் கதையொன்று நிலவுகிறது. டால்பின்களைத் தங்கள் பிள்ளைகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். முன்னொரு காலத்தில் தங்களது குழப்படியான பிள்ளைகள், பசி பொறுக்க மாட்டாமல் சூடான உணவைப் புசித்தபோது, அந்தச் சூட்டில் வாய் எரிவதைத் தாங்க முடியாமல் அவர்கள் ஆற்றில் குதித்தார்களாம். அப்படி ஆற்றில் குதித்த அந்தப் பிள்ளைகளே டால்பின்களாக மாறினார்கள் என்பதே அந்தக் கதை.

புத்த சமயத்தச் சேர்ந்த, லாவோஸ், கம்போடியா மீனவர்கள் டால்பினை நேசிப்பவர்கள். ஆனால், இஸ்லாமியக் கம்போடியர்கள் டால்பினை உண்பார்கள். அதனால் அவர்கள் இருக்கும் பக்கம் டால்பின்கள் செல்லாது. அதேபோல் யப்பானியர்களும் டால்பினை உண்பார்கள்.

வெடிவைத்து மீன் பிடிக்கும் வழக்கம் பல ஆசிய நாடுகளில் உள்ளது. ஐராவதி டால்பின்கள் பெரிய சத்தத்தை விரும்பாதவை. மோட்டார் வள்ளங்களின் சத்தம் அவற்றிற்குப் பிடிக்காது. டால்பின்கள் தவறுதலாக வலைகளில் பிடிபட்டு இறப்பதும் உண்டு. மேலும், சுற்றாடலின் நச்சுத்தன்மையால் முக்கியமாக, பாதரசத்தின் நஞ்சினால் (Mercury poison ) பாதிக்கப்படும்போதும் அவை அழிகின்றன.

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ளது சில்கா என்ற ஏரி. அது ஆசியாவில் உள்ள கடல் ஏரிகளில் பெரியது. மகாநதியின் கிளை நதிகள் வங்காளக் கடலில் சந்திக்கும் இடத்தில் அது இருப்பதால் அதன் தண்ணீர் கடலுக்குக் சமீபமான பகுதியில் உப்பாகவும் ஏனைய பல இடங்களில் உப்பற்றும் உள்ளது. இந்த ஏரியருகே புராதனமான கடல் துறைமுகம் இருந்தது. கலிங்க தேசத்திலிருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கு மக்கள் இதனூடாகப் பயணம் செய்துள்ளனர். வாணிபத்திற்கான போக்குவரத்தும் பாலி வரை நடந்திருக்கிறது. இது வங்காள விரிகுடாவில் இருப்பதால், கப்பல்களையும் வள்ளங்களையும் இலங்கை திருகோணமலையைப்போல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கலாம். அறுபது மைல்கள் நீளமான இந்த ஏரியில், பல தீவுகள் உள்ளன. குளிர் நாடுகளிலிருந்து மாரிகாலத்தில் பல பறவைகள் இங்கு வந்து தங்கும்.

இந்த சில்கா ஏரியின் கழி முகத்தில் ஐராவதி டால்பின்கள் வாழ்கின்றன என்றும், கார்த்திகை மாதத்தில் ஏரியில் நீர் நிறைந்திருப்பதால் டால்பின்களை நன்றாகப் பார்க்க முடியும் என்றும் அறிந்தேன். அன்றொருநாள் மதிய நேரத்தில் புவனேஸ்வரிலிருந்து எங்கள் பயணம் அமைந்தது. நண்பகல் நேரம் பறவைகளையும் டால்பின்களையும் பார்ப்பதற்குச் சிறந்த நேரமில்லை என்றாலும் எங்களுக்கு அவகாசம் இல்லாததால், அந்த நேரத்தில்தான் செல்லவேண்டி ஏற்பட்டது. இந்தியாவில் அதிகாலையில் கோவில்களுக்குள் மட்டுமே நுழைய முடியும். மற்றைய எல்லா வேலைகளிலும் எட்டுமணிக்குப் பின்னால்தான் ஈடுபடமுடியும். முன்னர் ஒரு நாள் மாமல்லபுரத்தில் நான் மட்டுமே காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணிவரையும் தனி ஓர் ஆளாக நின்று பார்த்த அனுபவம் எனக்குண்டு.

அதிகாலையில் பூரி ஜகநாத்கோவிலுக்கு சென்றாலும் எனது மனதில் டால்பின்கள்தான் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. கோவிலைவிட்டு வெளியே வருவதற்கு மதியமாகிவிட்டது.

ஏரியின் மேற்கு கரையிலிருந்து ஒரு சிறிய படகில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது இரண்டு கடல் காகங்கள் எங்களுடன் (துணையாக?) படகில் வந்தன. அவை தொடர்ந்து மூன்று மணிநேரம் படகிலிருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இரண்டும் ஒன்றையொன்று பார்த்தபடி ஏதோ பேசுவதைப்போலத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. “யாரோ இரண்டு முட்டாள்கள் பணம் கொடுத்து, இந்தப் படகில் செல்கிறார்கள். இது டால்பினின் இடத்துக்குச் செல்கிறது. அங்கு கட்டாயம் மீன்கள் இருக்கும். நாம் ஏன் வீணாகப் பறந்து எங்கள் சக்தியை விரயம் செய்ய வேண்டும்? இந்தப் படகிலே சென்றால் இன்று இலகுவாக மீன்பிடிக்கலாம்” என்று அவை நினைத்தனவோ என்னவோ!

நான் எதிர்பார்த்தது நடந்தது. அதாவது திரும்பி வரும்போது அவை எங்களுடன் வரவில்லை. ‘காகங்களும் மனிதர்களைப் போலத்தானோ? விடயம் முடிந்ததும் கைவிட்டு விலகிவிட்டனவே’ என்று நினைத்துக்கொண்டேன். மிருகங்களது மூளை பல விடயங்களில் தெளிவாக வேலை செய்யும். காட்டில் சிறுத்தைகளைக் கண்டால் குரங்குகள் கொப்பு கொப்பாகப் பாய்ந்து மயில்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடும். அப்பொழுது ஆண் மயில்கள் எழுந்து தங்கள் துணையைத் தேடி அகவும். அப்போது, எல்லா மிருகங்களும் உசாராகி பாதுகாக்கப்படும்.

எமது படகை இடைக்கிடையே ஏரியில் காணப்படும் சில தீவுகளில் நிறுத்தினார்கள். ஒரு தீவில் நிறுத்தியதும் எங்களை நோக்கி இருவர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பல நிறங்களையுடைய சிறிய நண்டுகளை எங்களுக்குக் காட்டினார். அப்பொழுது நான் சொன்னேன், “நானும் ஒரு சிறிய தீவில்தான் பிறந்தேன். எனக்கும் பல விதமான நண்டுகளைத் தெரியும்” என்று.

மற்றவர் ஓர் இளைஞர். அவர் சியாமளாவின் முன்பாக அமர்ந்து முத்துச் சிப்பிகளைப் போன்றவற்றை எமக்கு முன்பாக உடைத்து முத்துக்களுக்கு விலை பேசினார். முத்துக்களின் பரிமாணம் பெரிய அளவிலிருந்தபோதும் ஏற்கனவே வியட்நாமிலும் சீனாவிலும் முத்துக்களைத் தெரிந்து பார்த்து நாங்கள் வாங்கியிருப்பதால் “தேவை இல்லை” என்றேன். அவர் தொடர்ந்து எங்களைத் தூண்டியும் நாங்கள் வாங்கவில்லை. ஆனால், அனுதாபத்தில் அவருக்குச் சிறிது பணம் கொடுத்தேன். பின்புதான் அறிந்தேன், இங்கே அவர்கள் பிளாஸ்டிக் முத்துகளை உள்ளே வைத்து உல்லாசப் பிரயாணிகளை ஏமாற்றுகிறார்கள் என்று. அது எனக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. ஆனால், முத்தில் ஆசை இல்லாததால்தான் நாங்கள் வாங்கவில்லை.

இறுதியாகக் கழிமுகத்தை நாங்கள் அடைந்த போது, டால்பின்களில் பெரும்பாலானவை எங்களை விட்டு விலகுவதும் புறமுதுகைக் காட்டுவதுமாக இருந்தன. இறுதியில் சாரதி படகின் யந்திரத்தை நிறுத்திய பின்னர்தான், நின்று, நிதானமாக அவற்றைப் பார்க்க முடிந்தது.

ஐராவதி டால்பின்களைப் போலவே கங்கை மற்றும் சிந்து நதியின் கழிமுகத்திலும் டால்பின்கள் உள்ளன. அவைகளும் எண்ணிக்கையில் அருகி வருவதாகச் செய்திகளில் பார்க்க முடிகிறது.

டால்பின்கள் பொதுவாகவே மிகவும் புத்திக் கூர்மையானவை. அவற்றைப் பல விடயங்களுக்குப் பழக்கியெடுக்க முடியும் என்பதால் இராணுவத்திலும் பாவிப்பதாகச் செய்திகளில் பார்க்க முடிகிறது. ஆனால், அதை ரஷ்யாவும் அமெரிக்காவும் மறுப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரேக்கர்களது தொன்மைக் கதைகளில் டால்பின்களுக்கும் இடமுண்டு. நமது முருகன் மயிலில் செல்வதுபோல் கிரேக்கத் தெய்வங்கள் டால்பினை வாகனமாக உபயோகிப்பதாக ஓவியங்கள் உள்ளன. மேலும், கிரேக்கத் தெய்வங்கள், தங்கள் வேலைகளுக்கு தூதுவர்களாகவும் டால்பின்களைப் பாவித்துள்ளதாகக் கதைகள் உள்ளன. கங்காதேவியின் வாகனம் முதலைபோன்ற தலையையும் மீன்போன்ற வாலையும் கொண்டது. அது உண்மையில் டால்பினாக இருக்கலாம் என்பது பலரது கருத்து. உங்களுக்கு வாகனம் வேண்டுமென்றால் வேகமான வாகனத்தையே வாங்குவீர்கள். கங்காதேவி மட்டும் ஏன் முதலை போன்ற சோம்பேறி மிருகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? டால்பின்கள் மணிக்கு 56 கிலோ மீட்டர் நீந்தக் கூடியவை என்பதால் நமது சிற்பிகள் வேடிக்கையாக டால்பினுக்கு முதலை முகத்தைக் கொடுத்து வடித்திருக்கிறார்கள்போலும்! யமுனாதேவிக்கு ஆமையை வாகனமாக்கியது நன்றாகவா இருக்கிறது?

எப்படி என்றாலும் சில்கா ஏரியில் நூற்றி ஐம்பத்தாறு (156) ஐராவதி டால்பின்களே உள்ளதாகக் கடைசிக் கணிப்பு சொல்கிறது. நாங்கள் நான்கு டால்பின்களைப் பார்த்ததே மிகப் பெரிய விடயமென நினைத்துக்கொண்டு திரும்பி வந்தோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...