சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் நடிகைகளோ அல்லது நடிகர்களோ தங்களுக்கு காதல் வந்தால் கூட வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். காரணம் மார்க்கெட்டை காதல் காலி பண்ணிவிடும் என்ற பயம்தான் இதற்கு காரணம்.
ஆனால் 2021- ம் ஆண்டிலேயே நான் லிவ் – இன் உறவில் இருக்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்த தைரியசாலி ரகுல் ப்ரீத் சிங்.
கார்த்திக்கு ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியா ’என்.ஜி.கே’ படத்திலும் நடித்த அதே ரகுல் ப்ரீத் சிங்தான். இப்போது கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ படத்திலும் நடித்திருக்கிறார்.
சுமார் மூன்று வருட ’லிவ் இன்’ உறவு இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. காதலர்களாக இருந்த ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் மனைவி – கணவர் ஆக ப்ரமோஷன் ஆகி இருக்கிறார்கள்.
கோவாவில் இருக்கும் ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில்தான் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
மிக நெருங்கிய சொந்தகாரர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் போதும் என இருவரும் முடிவெடுத்துவிட்டதால், கல்யாணத்திற்கு கூட்டம் அதிகமில்லை. ரகுல் ப்ரீத் சிங் தன்னோடு நடித்த தமிழ், தெலுங்கு நட்சத்திரங்களுக்கும் திருமண அழைப்பிதழ் வைக்கவில்லையாம். இதனால் தமிழ், தெலுங்கு நட்சத்திரங்களில் ஒருவரைக்கூட கல்யாண கூட்டத்தில் பார்க்க முடியவில்லை.
இது காதல் கல்யாணம் என்பதால் ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தாரை சந்தோஷப்படுத்த சீக்கிய முறைப்படி சத்தா, ஆனந்த் கரஜ் சடங்கையும், மாப்பிள்ளை ஜாக்கி குடும்பத்தை உற்சாகப்படுத்த சிந்தி முறையில் சடங்கையும் வைத்து ஒரு கலாச்சார சங்கம திருமணமாக நடத்தியிருக்கிறார்கள்.
ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்தராவும் சங்கீத் நிகழ்ச்சியிக்கு ஜோடியாக வந்திருந்தார்கள். டைகர் ஷெராஃப், அக்ஷய் குமார், அர்ஜூன் கபூர், ஆயுஷ்மான் குரானா என சில பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமே வந்திருந்தார்கள். இவர்களும் கூட மாப்பிள்ளை ஒரு தயாரிப்பாளர் என்பதால் வந்திருக்கிறார்கள்.
திருமணம் முடிந்தவுடன் அன்றிரவு உற்சாக விருந்தை கொடுத்திருக்கிறார்கள் புது மணபெண்ணும், மணமகனும்.
பாலிவுட் நடிகர் வருண் தவான், ’கூலி நம்பர் 1’ படத்தின் பாடல் ஒன்றுக்கு ஆடி திருமணத்திற்கு வந்திருந்தவர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
திருமணம் முடிந்த உடன் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு குழந்தை குடும்பம் என செட்டிலாக போவது இல்லை என ரகுல் ப்ரீத் சிங் தெளிவாகவே கூறியிருக்கிறார்.