No menu items!

கமலின் மக்கள் நீதி மய்யம் மாறிய கதை!

கமலின் மக்கள் நீதி மய்யம் மாறிய கதை!

மக்கள் நீதி மய்யம்.

2018 பிப்ரவரி 21ல் கமல் கட்சி தொடங்கியதும் அப்போது ஆட்சியிலிருந்த ‘அரசியலில் கமல்ஹாசன் ஒரு எறும்பு’ என்று விமர்சித்தது அதிமுக, எதிர்க் கட்சி வரிசையிலிருந்த திமுக, ’பூம் பூம்காரனின் மாடு’ என்று இன்னும் கடுமையாக விமர்சித்தது. ’ நோட்டாவை ஜெயிக்க முடியுமா பாருங்கள்’ என்று கேலி செய்தன.

விமர்சனங்களும் எதிர் வினைகளும் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கிய கமல்ஹாசனுக்கு புதிதல்ல. இப்போது 69 வயதில் இருக்கும் கமல்ஹாசனை அவரது 6 வயதிலிருந்து தமிழகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் வாழ்க்கைதான் அவருக்குப் புதிது. ஆனால் கமல்ஹாசனின் பொது வாழ்க்கை ஐம்பது வருடங்களை கடந்துவிட்டது. குழந்தை நட்சத்திரமாக, நடனக் கலைஞராக, உதவி இயக்குனராக, நடிகராக, நட்சத்திரமாக, உலக நாயகனாக இப்படி அவரது உருமாற்றங்கள் அனைத்தும் மக்களு முன் நடந்தவைதான். இப்போது அரசியல்வாதி கமல்ஹாசனாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆரம்பம்

பரமக்குடியில் வளர்ந்த கமல்ஹாசனுக்கு வீட்டிலேயே அரசியல் இருந்தது. அங்கே வழக்கறிஞர் தொழில் செய்து வந்த அவரது தந்தை சீனிவாசன் காங்கிரஸ்காரார். காமராஜர், ராஜாஜி போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவர். கமல்ஹாசனின் ஆரம்ப அரசியல் பரமக்குடி வீட்டில்தான் துவங்கியிருக்கிறது.

கமல்ஹாசனின் தந்தை பிரபலமான வழக்கறிஞராக இருந்ததால் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அவரை சட்டப்பேரவை தேர்தலில் நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்ததாக செய்திகள் உண்டு. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்திரா காங்கிரஸ் என்று காங்கிரஸ் மாறிய போது காமராஜரின் தோழராக பழைய காங்கிரசிலேயே நீடித்தார். கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகில் நட்சத்திரமாக உயர்ந்த பிறகு கூட பரமக்குடியிலிருந்து சென்னைக்கு பேருந்தில்தான் பயணம் செய்வாராம் இந்த பழைய காங்கிரஸ்காரர்.

கமல்ஹாசனின் ஆரம்பக் கல்வி பரமக்குடியில். தந்தையில் சமூகப் பணிகள், அரசியல் பணிகள் எல்லாவற்றையும் நேரடியாக பார்த்து வளர்ந்தவர். இவைதான் கமல்ஹாசனின் ஆரம்ப அரசியல் அனுபவங்கள்.

நடிகர் கமல்ஹாசன்

மூன்றாவது படத்திலேயே அரசியல் பன்ச் பேசும் இந்தக் கால நடிகர்கள் போல் இல்லாமல் கமல்ஹாசனின் ஆரம்பக் கால படங்கள் அரசியல் இல்லாமல் இயக்குநர்களின் படங்களாகதான் வெளிவந்தன. தமிழகத்தின் பிரபல நட்சத்திரமான பிறகு கூட அவரது படங்களில் கட்சி அரசியல் குறித்த விமர்சனங்கள் இல்லாமல் சமூக அரசியல் குறித்த கோபம், கிண்டல்தான் அதிகம் இருந்தது.

வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா போன்ற கமலின் படங்கள் சமூகத்தின் மீதான் கோபத்தை வெளிப்படுத்தின. அன்பே சிவம், ஹே ராம், இந்தியன் போன்ற திரைப்படங்கள் தேர்தல் அரசியலைப் பேசாமல் வேறு அரசியலைப் பேசின.

ரசிகர் மன்றங்கள்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 1983ல் ஒரு பத்திரிகை பேட்டியில் ’நீங்கள் ரசிகர் மன்றங்களை ஆரம்பித்தது அரசியலில் நுழைவதற்கா?’ என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். அதற்கு கமலின் பதில் இதுதான் ‘1980 வரை ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, சமூக சேவை என்ற விழிப்பு உணர்வு வந்த பிறகு, ஏன் ரசிகர்மன்றத்தைத் தோற்றுவித்து ஆக்கபூர்வமாகச் செயல்படக் கூடாது என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் ரசிகர் மன்றங்கள். முதன்முதலில் பஸ் ஸ்டாப்பில் ‘இன்ன எண் பஸ்… இன்ன இடத்துக்குச் செல்லும்’ என்ற விவரம் அடங்கின பலகையை மாட்டி, எங்களுக்குத் தெரிந்த விதத்தில் சமூக சேவையை ஆரம்பித்தோம்,’ என்கிறார் கமல்ஹாசன். அப்படி உருவாகிய கமல்ஹாசனின் ரசிகர் மன்றங்கள் பிறகு கமல்ஹாசனின் நற்பணி இயக்கமாக மாறியது.

ரத்த தான முகாம்கள் நடத்துவது, கண் தானம் செய்ய பெயர்களை பதிவு செய்வது, கல்வி உதவி செய்வது போன்ற அரசியல் கலப்பில்லா இயக்கமாகதான் செயல்பட்டுவந்தது.

1983ல் இலங்கை வெளிக்கடை சிறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அங்கே ஈழப் போரட்டம் கிளர்ந்து எழுந்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போரட்டங்களை நடத்தினார்கள். அரசியல் கலப்பின்றி செயல்பட்டுக் கொண்டிருந்த கமல்ஹாசனின் ரசிகர் மன்றம் முதல்முறையாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 1985ஆம் வருடம் செப்டம்பர் மாதம் சென்னையில் கண்டனப் பேரணி நடத்தியது. இதுதான் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் முதல் அரசியல் நிகழ்வு.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி ரசிகர்களைச் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் கமல்ஹாசன். அப்போதெல்லாம் அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்து நமக்கு அரசியல் வேண்டாம் என்பது.

அரசியல் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த கமல்ஹாசன் அரசியலுக்குள் வந்தது எப்படி என்ற கேள்விக்குள் போவதற்கு முன் சில சம்பவங்களையும் சில நட்புகளையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

கருணாநிதியின் நட்பு

தமிழ்த் திரையுலக பேராளுமைகள் எம்.ஜி.ஆர்ருடனும் சிவாஜியுடனும் கமல்ஹாசன் பிரியத்துடன் இருந்தாலும் அவருக்குப் பிடித்த அரசியல் தலைவர் வேறொருவராக இருந்தார்.

கமல்ஹாசனின் அப்பா சீனிவாசனுக்கு பிடித்த தலைவராக காமராஜர் இருந்தார். அவரது மகன் கமல்ஹாசனுக்கு பிடித்த அரசியல் தலைவராக கருணாநிதி இருந்தார்.

தன்னுடைய திரைப்பட விழாக்களுக்கு கருணாநிதியை அழைத்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்ததற்காக விருது பெற்ற போது கமல் குள்ள அப்புவாக மேடையில் தோன்றி கருணாநிதியிடமிருந்து விருது பெற்றார்.

அவ்வை சண்முகியாக மாமி வேடம் போட்டதும் அவர் முதலில் சென்றது கருணாநிதியின் கோபாலபுர இல்லம்தான்.

கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணியை அழைத்து வந்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையும் அழைத்தார்.

இதன் தொடர்ச்சியாக கட்சி ஆரம்பிப்பதற்கு முன் கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றார் கமல்ஹாசன்.

கலைஞருடன் இத்தனை நட்பு இருந்தாலும் கட்சித் தொடங்கியபின் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார் கமல்ஹாசன். அரசியல் தந்த மாற்றம். ஆனால் இந்த மாற்றம் மீண்டும் மாறி திமுகவுடன் நட்பாக இப்போது தொடர்கிறது.

கருணாநிதியுடன் நெருக்கம் காட்டிய கமல்ஹாசனால் சமகாலத்தின் இன்னொரு முக்கிய அரசியல் தலைவரான ஜெயலலிதாவுடன் நட்புடன் பழக இயலவில்லை.

விஸ்வரூபம் பிரச்சினை

கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. தேவர் மகன் படம் சாதியத்தை தூக்கிப் பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சண்டியர் என்ற தலைப்புக்கு எதிர்ப்பு வந்து அது விருமாண்டி என்று மாற்றப்பட்டது. வசூல்ராஜா படத்துக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு. ஹேராம் படத்துக்கும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சர்ச்சைகள் எல்லாவற்றையும் விட மகா சர்ச்சையாக உருவானது விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினை. 2012ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படத்தை எடுக்கத் தொடங்கினார் கமல்ஹாசன். சர்வதேச தீவிரவாதம் குறித்த திரைப்படம் என்று சொல்லப்பட்டது. 2013ஆம் வருடம் ஜனவரி 25ஆம் தேதி வெளிவர வேண்டிய திரைப்படம். ஆனால் படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்லாமியருக்கு எதிராக திரைப்படம் இருக்கிறது என்பது அவர்கள் கருத்து. இஸ்லாமியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு. அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.

கமல்ஹாசன் நீதிமன்றத்தில் முறையிட்டார். படத்தைப் பார்த்த நீதிபதி திரையிடுவதற்கு அனுமதி அளித்தார். ஆனால் தமிழக அரசு மேல் முறையீடு செய்து தடையை நீடித்தது.

இந்த தமிழக அரசின் தடை நீடிப்பும் மேல் முறையீடும் எங்கு பிரச்சினை என்பதை கமல்ஹாசனுக்கு சுட்டிக் காட்டியது.

கமல்ஹாசன் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு காழ்ப்புணர்ச்சி என்று கமலுக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட, தடைக்கான காரணங்களைச் சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். விஸ்வரூபம் பிரச்சினை தமிழக அரசியல் பிரச்சினையாக மாறியது. பொதுவாய் பத்திரிகையாளர்களை சந்திப்பதை அதிகம் விரும்பாத ஜெயலலிதா விஸ்வரூபத்துக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்து காழ்ப்புணர்ச்சி அல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சினைதான் படத்தின் தடைக்கு காரணம் என்று விளக்கமளித்தார். இது தமிழக அரசியலில் நடந்த அபூர்வம்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் விஸ்வரூபத்தை வெளியிட முடியவில்லையென்றால் நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன் என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.

இறுதியில் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியானது.

விஸ்வரூபம் சிக்கலுக்கு முன்பு நடந்த ஒரு வேட்டி சம்பவமும் விஸ்வரூபம் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

வேட்டிக் கட்டிய தமிழர் பிரதமர்

2012ஆம் வருடம் டிசம்பர் மாத இறுதியில் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கருணாநிதி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட விழா. இந்த விழாவில் கமல் பேசிய போது ’ அடுத்து ஒரு முக்கியப் பொறுப்பு இவருக்கு வரக் கூடும் என்று பேசுகிறார்கள். வர வேண்டும் என்று நான் கூறுகிறேன்’ என்று நிதியமைச்சாராக் இருந்த சிதம்பரம் குறித்து பேசினார்.

கமல்ஹாசனுக்குப் பிறகு பேச வந்த கருணாநிதி, ‘ நிதியமைச்சருக்கு அடுத்த பெரிய பொறுப்பு பிரதமர்தான். வேட்டிக் கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்ற கருத்தை இங்குள்ளவர்கள் பேசியிருக்கிறார்கள். இதிலிருந்து சேலை கட்டிய தமிழர் பிரதமர் ஆகலாமா கூடாதா என்பதற்கு விடையும் அளித்திருக்கிறீர்கள்’ என்று அரசியல் கலந்து பேசினார்.

பிரதமராவதற்கு ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அதிமுகவினரால் கூறப்பட்டு வந்த நேரத்தில் அடுத்த பிரதமர் சிதம்பரம் என்று கமல் கோடிட்டு காட்டியதும் அதற்கு கருணாநிதி விளக்கம் அளித்ததும் கூட விஸ்வரூபம் சிக்கலுக்கு காரணமாக அமைந்தது என்று அந்த சமயத்தில் பேசப்பட்டது.
சென்னை வெள்ளமும் கருத்து கந்தசாமியும்

கமல்ஹாசனுக்கு ஜெயலலிதாவுடன் அடுத்த சிக்கல் சென்னை வெள்ளத்தின் போது வந்தது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை வரலாறு காணாத வெள்ளத்தில் மிதந்தது. பல மரணங்கள். பலத்த சேதங்கள்.

சென்னை வெள்ளத்தின்போது தமிழக அரசு சரியாக செயல்படவில்லை, நாங்கள் கட்டிய வரி பணம் எல்லாம் எங்கே என்று காட்டமாக கமல்ஹாசன் கேட்பதாக ஊடகங்களில் செய்தி வந்தது. இதற்கு உடனடியாக அன்றைய நிதியமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்திடமிருந்து மிகக் கடுமையான பதில் அறிக்கை வந்தது.

”எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல, குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்” என்று சொன்னது அந்த அறிக்கை.

தமிழக அரசின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டோம் என்றறிந்த கமல்ஹாசன் தான் சொன்னதற்கு விளக்க அறிக்கை வெளியிட்டார். வட இந்திய நண்பருக்கு அனுப்பிய தனிப்பட்ட மின்னஞ்சல் ஊடகங்களில் தவறாக வெளிவந்திருக்கிறது. நான் மாநில அரசை குறை கூறவில்லை. வரிப் பணத்தை என்ன செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை’ என்று மாநில அரசுடன் மோதாமல் பின்வாங்கினார்.

ஜெயலலிதா மரணமும் கமலின் அஞ்சலியும்

ஜெயலலிதா மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்ட அஞ்சலி செய்தியும் சர்ச்சைக்குள்ளானது. ’சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’ இதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கான கமல்ஹாசனின் நான்கு வார்த்தை அஞ்சலி செய்தி. மறைந்தவரின் பெயரைக்கூட குறிப்பிடாமல் வெளிவந்த மிக சுருக்கமான அஞ்சலி செய்தி ஜெயலலிதாவுக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள நட்பை தெளிவாக விளக்குகிறது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சொன்னார் கமல்ஹாசன். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று காரணத்தையும் குறிப்பிட்டார்.

அரசியல் குறித்து கமல்ஹாசன்

அரசியல் அழுக்கானது என்பதுதான் கமல்ஹாசனின் நீண்ட கால கருத்து. 2018ல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் வரை இந்தக் கருத்தைதான் அவர் வைத்திருந்தார்.

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாத்ம் செய்தியாளர்களிடம் பேசும் போது அரசியல் குறித்து கமல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். ’ நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.’

2014 ஜனவரியில், ‘”எல்லாருமே அரசியல்வாதிகள்தான். 5 வருஷத்திற்கு ஒரு தடவை கைல கறையை போட்டுக் கொள்கிறோம். விரல்ல வைக்குற அந்தக் கறை போதும் கைப்பூராவும் எதற்கு.” என்று செய்தியாளர்களைக் கேட்கிறார்.

அதே வருடம் தனது பிறந்த நாள் விழாவில், ‘இப்போது எனது ரசிகர்கள், என்னைப் பார்த்து ‘தயவு செய்து அரசியலுக்கு வந்து விடாதீர்கள்’ என்று அறிவுரை கூறும் அளவுக்கு தெளிவு பெற்றுவிட்டார்கள். நாம் நடத்தி வரும் இந்த இயக்கம் நற்பணி இயக்கம் மட்டுமே. நமக்கு பிறகும் நற்பணி இயக்கமாகவே இயங்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்.

2015 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், ‘அரசியலுக்கு வருகிறீர்களா என்று கேட்கிறார்கள், அது எனக்கு வேண்டாம். 5 வருடங்களுக்கு ஒரு முறை, என் கையை கறையாக்கிக் கொள்கிறேனே அந்த கறை போதுமானது.’ என்று மீண்டும் உறுதிபட கூறுகிறார் கமல்.

இப்படியிருந்த கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?

ட்விட்டரில் இணையும் கமல்ஹாசன்

2016 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சமூக வலைதளமான ட்விட்டரில் இணைகிறார் கமல்ஹாசன். அரசியல் கருத்துக்களை வெளியிடாமல் சமூக ரீதியான கருத்துக்களைத் தெரிவிக்கத் துவங்குகிறார்.

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டி பதிவிட்ட ட்வீட் அவரது அரசியல் ட்வீட்டுகளின் ஆரம்பம் என்றால் அந்த ட்வீட்டுகள் சூடு பிடிக்கத் துவங்குவது 2017 ஜனவரியில் நடந்த ஜல்லிக் கட்டு போராட்டங்களின் போது.

இங்கே குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம். 2016 டிசம்பரில் ஜெயலலிதா காலமாகிறார்.

ஜல்லிக் கட்டுப் போரட்டத்தில் துவங்கும் அவரது அரசியல் கருத்துக்கள் நாட்கள் போகப் போக அதிகரிக்கின்றன. மாநில அரசை விமர்சிக்கத் துவங்குகிறார். சசிகலாவை விமர்சிக்கிறார். அப்போதும் முழு நேர அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்காத நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். ட்விட்டர் அரசியல்வாதி என்ற விமர்சனம் கமல்ஹாசன் மீது வைக்கப்படுகிறது.

2017 பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சுப்ரமணிய சுவாமி சர்ச்சையின்போது ஒரு ட்வீட்டை பதிவு செய்கிறார். ‘நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது’

கட்சியற்ற கொள்கை மாறாது என்று சொல்லி மிகச் சரியாக ஒரு வருடம் கழித்து 2018ல் அதே பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பிக்கிறார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம்

பிப்ரவரி 21 2018. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து பயணத்தை துவக்கும் கமல்ஹாசன், மாலை மதுரை ஒத்தக்கடையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவிக்கிறார். கொடியை அறிமுகப்படுத்துகிறார். ‘கட்சி கொடியில் உள்ள 6 கைகள் 6 தென்னிந்திய மாநிலங்களைக் குறிக்கும், நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களை குறிக்கும். மக்களையும் நீதியையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது’ என்று தனது கட்சியைக் குறித்து சொன்ன கமல்ஹாசன் திராவிடத்தையும் தேசியத்தையும் உள்ளடக்கியது கட்சி என்றும் தெரிவித்தார்.

’எனது கருத்து வலதுசாரியா, இடதுசாரியா என்கின்றனர். இரண்டும் இல்லை. மய்யத்தில் இருக்கிறேன். திரும்ப, திரும்ப உங்களது கொள்கைகள் என்ன என்றால், நீங்கள் என்னென்ன செய்யத் தவறினீர்களோ அவற்றை செய்வதே எங்களது கொள்கைகள்.’ என்று தனது கொள்கை விளக்கத்தைச் சொன்னார்.
’ இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல் உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். நட்சத்திரமாக இருந்த நான் வீட்டு விளக்காகியுள்ளேன். என்னை ஊழல் போன்ற காற்றிலிருந்து காக்க வேண்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் வருட அரசியல்

கட்சி ஆரம்பித்த முதல் வருடத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த கமல்ஹாசன் பல கல்லூரி மேடைகளில் பேசினார். மக்கள் பிரச்சினைகளைச் சொல்ல விசில் செயலியை அறிமுகப்படுத்தினார். காவிரிக்காக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டினார். ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ராகுலை சந்தித்தார். காவி, கருப்பு என்று நிறங்களில் அரசியல் சொன்னார். கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.

இடையே மீண்டும் பிக் பாஸ் 2க்கு சென்றார். இந்தியன் 2க்கும் ஒப்புக் கொண்டார்.

அதிமுக அரசின் மீதான கடுமையான விமர்சனங்களில் துவங்கிய மக்கள் நீதி மய்யம் திமுகவையும் கடுமையாக விமர்சித்தது. திமுகவும் கமல்ஹாசனை காட்டமாக விமர்சித்தது.

தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை எதிர்த்தன. விமர்சித்தன.

ஆனால் இன்று…?

கமலின் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் கள வரலாற்றையும் பார்ப்போம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் மநீம தனித்துப் போட்டியிட்டது. அந்த சமயம் தனித்துப் போட்டியிடுவதுதான் மநீமவின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது. போட்டியிட்ட தொகுதிகளில் 3.75 வாக்கு சதவீதத்தை பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தது. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து கமல் போட்டியிட்டார். இந்தத் தேர்தலிலும் தோல்வி. நாடாளுமன்றத் தேர்தலை விட குறைவான வாக்குசதவீதத்தையே பெற்றார். 2.45 சதவீத வாக்குகளே கிடைத்தது. கோவையில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோற்றார்.

இந்த இரண்டு தேர்தல்களில் ஏற்பட்ட சறுக்கல் கமலின் அரசியல் பாதையை மாற்றியது. கட்சியிலிருந்து பல முக்கியஸ்தர்கள் வெளியேறினார்கள். புதியவர்கள் இணைந்தார்கள். ஆனாலும் கட்சி வேகம் எடுக்கவில்லை. மாறாக கமலின் திரை பயணம் வேகமெடுத்தது.

2022ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் அவர் திரை வாழ்வை மட்டுமல்ல அரசியல் வழியையும் மாற்றியது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி. 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல். கமல் திரை வரலாற்றில் இத்தனை பெரிய வசூல் வெற்றியை அவர் பெற்றதில்லை. விக்ரம் படத்தை தயாரித்தது கமலின் ராஜ்கமல் நிறுவனம். விநியோகித்தது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம். கமலுக்கும் உதயநிதிக்கும் நல்ல நட்பு உருவாகியது.

சக்கர நாற்காலி, ஸ்டாலின் என்று சொன்னால் அவமானம் போன்ற கமலின் திமுக விமர்சனங்கள் மறைந்து இப்போது திமுகவுடன் நல்ல நட்பு.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இன்று மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல் மத்திய அரசைதான் விமர்சித்து பேசியிருக்கிறார். தேசத்தை காப்பற்றுவதுதான் முதலில் அப்புறம்தான் கட்சி என்று கூறியிருக்கிறார்.

திராவிட ஆட்சிகளுக்கு மாற்று என்று வந்தவர் இன்று அது குறித்து பேசுவதில்லை. திமுகவினரிடம் நெருக்கம் காட்டுகிறார். மத்திய அரசை மய்யமாக விமர்சிக்கிறார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவர் எந்தப் பக்கம் செல்கிறார் என்று தெரிந்துவிட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி. அதற்காக காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...