திருமணத்தை 3 நாட்கள் நடத்தினாலே இத்தனை ஆடம்பரமான திருமணமா என்று பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். ஆனால் ஜூலை 12-ம் தேதி நடக்கவுள்ள தனது மகனின் திருமணத்துக்கு இப்போதே (மார்ச் 1 முதல் 3 வரை) ‘ , ‘திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்’ என்ற பெயரில் 3 நாள் விழா ஒன்றுக்கு தொழிலதிபர் அம்பானி ஏற்பாடு செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட்டில் சச்சின் முதல் தோனி வரை சினிமாவில் ஷாரூக் முதல் தீபிகா படுகோன் வரை பேஸ்புக் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா, பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால் என உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து ரஜினிகந்த் ஒருவருக்குதான் அழைப்பு என்று கூறப்படுகிறது.
விருந்தினர்களுக்கு சமைத்துப் போட 21 சமையல் கலை நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களில் 2,500 வகையான உணவுகள் விருந்தினர்களுக்கு பறிமாறப்படுகின்றன. காலை உணவுக்கு 75 வகையான உணவுகள். மதிய உணவுக்கு 225 வகையான உணவுகள். இரவு உணவுக்கு 275 வகை. நள்ளிரவு உணவுக்கு 75 வகை. இவை மட்டுமல்ல இடைப்பட்ட நேரங்களுக்கும் விதவிதமான உணவுகள் பறிமாறப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜப்பான், தாய்லாந்து, மெக்சிகோ என உலகின் பல நாடுகளின் சிறப்பு உணவுகளுடன் இந்தியாவின் ஸ்பெஷல் ஐட்டங்களும் விருந்தினர்களுக்கு சமைக்கப்படுகின்றன. இந்த மூன்று நாள் விழா விருந்தினர்களுக்கு போரடித்துவிடக் கூடாது என்பதால் விதவிதமான இசை நிகழ்ச்சிகள், நடனங்கள், விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எந்த விதமான உடையில் வர வேண்டும் என்று உடை குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.