’ஜெய் பீம்’ படம் மூலம் அதிர்வலையை உருவாக்கிய இயக்குநர் த.செ. ஞானவேல் அடுத்து ரஜினியை வைத்து பெயரிடப்படாத ‘தலைவர் 170’ படத்தை இயக்கி வருகிறார். வழக்கம் போல் ரஜினியின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைகா ப்ரொடக்ஷன்ஸ்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.
‘அந்தா கானூன்’, ‘கிராஃப்தார்’, ’ஹம்’ என ஹிந்திப்படங்களில் ரஜினி அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தார். அதற்குப் பிறகு ரஜினி தமிழ்ப்படங்களில் மட்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணையும் வாய்ப்பை ’தலைவர் 170’ உருவாக்கி இருக்கிறது.
இதனால், நீண்ட இடைவெளியாக 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினியுடன் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கிறார்.
என்கவுண்டருக்கு ஆதரவான கதைக்களத்தில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் மலையாள நடிப்பு அரக்கன் ஃபஹத் ஃபாசிலும் இணைந்திருக்கிறாராம். இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும் தெரிய வந்திருக்கிறது.
இப்போது சென்னையில் ரஜினி மற்றும் ஃபஹத் ஃபாசில் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை இயக்குநர் த.செ. ஞானவேல் ஷூட் செய்து வருகிறார். இங்கு ஒரு வாரம் நடக்கும் ஷூட்டிங்கில் ஃபஹத் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்குப் பிறகு அடுத்த ஷெட்யூலில் அமிதாப் பச்சனும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கருக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
ஷங்கர் இப்பொழுது ’இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ பட வேலைகளில் மிகத்தீவிரமாக வேலைப் பார்த்து கொண்டிருக்கிறார்.
ஆனால் மறுபக்கம் ஷங்கர் இயக்கும் முதல் நேரடி தெலுங்குப் படமான ‘கேம் சேஞ்சர்’ பட வேலைகள் அப்படியே கிணத்தில் போடப்பட்ட கல்லைப் போல் சத்தமில்லாமல் இருக்கிறதாம்.
‘இந்தியன் 2’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக இருந்த ஷங்கர், அடுத்தடுத்த பிரச்சினைகளால், அந்தப் படத்தை ஏறக்குறைய கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் முதல் முறையாக தெலுங்குப் படமொன்றை இயக்கும் வேலைகளில் இறங்கினார்.
சிரஞ்சீவியின் மகனும், ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடித்த நாயகனுமான ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்க ஆரம்பித்தார். மளமளவென நடந்த இப்படத்தின் ஷூட்டிங் ஒரு கட்டத்தில் தடுமாறியது. காரணம் ‘விக்ரம்’ பட வெற்றியினால், ‘இந்தியன் 2’ மீண்டும் உயிர்ப்பெற்றது.
ஒரே நேரத்தில் இரு படங்களை இயக்குவதை வழக்கமாக கொண்டிராத ஷங்கர், இந்தியனில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனால் தெலுங்குப் பட வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுக்கப்பட்டு வந்ததன.
’இந்தியன் 2’ படத்தின் நீளம் அதிகமானதால் ‘இந்தியன் 3’ என இரு பாகங்களாக எடுக்கும் திட்டம் புதிதாக உதிக்கவே, கமலுக்கும், ஷங்கருக்கும் இரண்டு சம்பளம் பேசி முடிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல், தெலுங்குப் படத்தை அப்படியே ஓரங்கட்டிவிட்டு, இந்தியனுக்குத் தாவினார் ஷங்கர்.
இதுதான் இப்போது பிரச்சினையாகி இருக்கிறது. ‘கேம் சேஞ்சர்’ படம் மூலம் தனது மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ராம் சரண், வேறு புதிய படங்களில் நடிக்காமல் இருந்துவருகிறார். இவரது காத்திருப்பு காலம் இப்போது நீண்டு கொண்டே போவதால் ராம் சரண் கடுப்பில் இருக்கிறாராம்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ராம் சரண், ஷங்கரிடம் தொலைப்பேசியில் பேசினாராம். ’என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. கேம் சேஞ்சர் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக வேண்டும். அதற்கேற்றப்படி ஷெட்யூலை வையுங்கள். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடியுங்கள்’ என்று கறாராக சொல்லியிருக்கிறாராம்.