விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது. இதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரங்களை முடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் அமைந்திருக்கும் மண்டபத்தில் 45 மணிநேரம் தியானம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
விவேகானந்தர் பாறையின் வரலாறு:
குமரிக் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு தனி வரலாறு இருக்கிறது. பார்வதி தேவியும், சிவபெருமானும் ஒற்றைக் காலில் நின்ற இடம்தான் இந்த விவேகானந்தர் பாறை எனப் புராணங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. விவேகானந்தர் ஞானம் பெற்றதும் இதே இடம்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த பாறையில் 1972-ம் ஆண்டு விவேகானந்தர் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி இதைத் திறந்து வைத்தார். விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தின் கீழ்த்தளத்தில் இருக்கும் தியான அறையில்தான் நரேந்திர மோடி தியானம் செய்யப் போகிறார்.
பிரதமர் மோடியின் பயண திட்டம்:
கன்னியாகுமரியில் படகு மூலம் இன்று மாலை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு தொடர்ந்து 45 மணிநேரம் தியானம் செய்ய திட்டமிட்டுள்ளார். தியானத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புறப்படும் பிரதமர், 3:20 மணிக்கு கன்னியாகுமரி ஹெலிபேட் வந்தடைவார் என்றும், பின்னர் அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் செல்வார் என்றும் பிரதமரின் பயணத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி மொத்தம் 45 மணிநேரம் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு பணிகளில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடல் வழியில் நரேந்திர மோடி பயணிக்கவிருக்கும் படகு மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், கடற்படை போலீசாரும் நேற்று முதலே குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி சரக டிஐஜியான பிரவேஷ் குமார், எஸ்பி சுந்தரவதனம் ஆகியோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு:
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் உள்ள ஆதார் அட்டையை சரிபார்த்து, விலாசம் பெறப்பட்டு, முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்படுள்ளது. அங்கு தங்கி இருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு:
பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்வது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் பிரதமரின் தியானத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். “பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கோரப்படவில்லை. தனியார் பராமரிப்பில் உள்ள இடத்திற்கு தனிப்பட்ட நிகழ்விற்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை. தேர்தல் விதிமுறைப்படி பரப்புரை மேற்கொண்டாலோ அல்லது கூட்டம் கூட்டினாலோ நடவடிக்கை எடுக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.