No menu items!

வெயிலில் கொதிக்கும் வட மாநிலங்கள் – காரணம் என்ன?

வெயிலில் கொதிக்கும் வட மாநிலங்கள் – காரணம் என்ன?

40 டிகிரி, 42 டிகிரி வெயிலையே சமாளிக்க முடியாமல் தமிழகத்தில் நாம் திணறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் டெல்லியில் வெயிலின் உக்கிரம் 50 டிகிரியைக் கடந்து உச்சத்தை தொட்டிருக்கிறது. அங்குள்ள முங்கேஷ்வர் பகுதியில் புதன்கிழமையன்று 52.3 டிகிரி செல்ஷியஸ் (126.1 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை பதிவான வெப்ப அளவில் இதுதான் உச்சபட்சம்.

உச்சபட்ச வெயிலுக்கு காரணம் என்ன?

பொதுவாக டெல்லியில் மே மாதத்தில் வெயில் கொளுத்தும் என்றாலும் இந்த அளவுக்கு வெப்பம் பதிவானதில்லை. இந்த ஆண்டில் இந்த அளவுக்கு வெப்பம் பதிவாவதற்கு விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.

அந்த வகையில் டெல்லியின் வெப்பத்துக்கு விஞ்ஞானிகள் சொல்லும் முதல் காரணம் புவி வெப்பமயமாதல். அடுத்த காரணம் பசுமைப் பகுதிகளின் பரப்பு குறைவது. டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே பசுமைப் பகுதிகள் அழிக்கப்பட்டு அங்கெல்லாம் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்கு ஏராளமான மக்கள் குடியேறுவதால் போக்குவரத்து நெரிசலும் வாகனப் புகையும் அதிகரித்துள்ளது. இதுவும் டெல்லியின் வெயிலுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கிழக்கிந்திய பகுதிகள் மற்றும் வங்கதேசத்தில் இந்த வாரம் வீசிய ரெமல் புயலும் இந்த வெப்பத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு இடத்தில் புயல் அடித்தால், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள மேகத்தை புயல் இழுத்துக்கொள்ளும். அந்த வகையில் டெல்லியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களை ரெமல் புயல் இழுத்துக் கொண்டதாலும் டெல்லியில் வெயில் காய்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வானிலை அதிகாரி விளக்கம்:

டெல்லி வெயில் பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மைய வட்டார இயக்குநர் குல்தீப் ஸ்ரீவத்சவா , “ ராஜஸ்தானில் இருந்து வீசும் வெப்பக் காற்றானது டெல்லியின் புறநகர் பகுதிகளை தாக்குகிறது. ஏற்கெனவே வெயிலால் வாடும் டெல்லியின் வெப்ப நிலை, ராஜஸ்தானில் இருந்து வரும் வெப்பக் காற்றால் மேலும் அதிகரிக்கிறது. டெல்லியில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவாக இது முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம் மீது சந்தேகம்:

இதெல்லாம் ஒருபுறம் இருக்க டெல்லியில் உள்ள முங்கேஷ்கர் பகுதியில் நிஜமாகவே 52.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதா என்ற சந்தேகமும் பரவலாக எழுந்துள்ளது. வெயிலை அளக்கும் கருவியில் உள்ள குறைபாட்டால் இந்த அளவுக்கு வெயிலை அது காட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது. அதனால் இந்த தரவுகளை மீண்டும் வானிலை ஆய்வு மையம் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜு உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் தண்ணீர் பஞ்சம்:

டெல்லியில் வெயிலின் அளவு அதிகரிக்கும் அதே வேகத்தில் தண்ணீர் பஞ்சமும் அதிகரித்து வருகிறது. ஹரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து கார்களை கழுவுவது, கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்றவற்றுக்காக குடிநீரை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

வாடும் வட மாநிலங்கள்

டெல்லியில்தான் இப்படியென்றால், மற்ற மாநிலங்களையும் வெயில் விட்டுவைக்கவில்லை. பிஹாரில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசியது. இதனால் சில பகுதிகளில் ஆங்காங்கே பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கெனவே வெயிலுக்கு புகழ்பெற்ற ராஜஸ்தானில் 123.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. ஹரியாணாவில் 122.54 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வட மாநிலங்களில் இதே நிலை இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நம் நிலை எவ்வளவோ பரவாயில்லை போல் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...