No menu items!

நியூஸ் அப்டேட்: சொத்து வரி உயர்வு – முதல்வர் விளக்கம்

நியூஸ் அப்டேட்: சொத்து வரி உயர்வு – முதல்வர் விளக்கம்

சொத்து வரி உயர்வை விருப்பத்துடன் செய்யவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

பல்வேறு துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய கூட்டத்தின்போது சொத்துவரி உயர்வு தொடர்பான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “சொத்து வரி உயர்வை விருப்பத்துடன் செய்யவில்லை. புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும்” என்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, கடந்த 16 நாட்களில் 14-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரிக்கப்பட்டு 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 100 ரூபாய் 94 காசுகளுக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை 16 நாட்களில் லிட்டருக்கு ரூ.9.45-ம், டீசல் ரூ.9.51-ம் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக நிறுவன நாள்: தொண்டர்களுக்கு மோடி வாழ்த்து

பாஜகவின் நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு 14 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று காலை கொடியேற்றத்துடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் கட்சி அலுவலகத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, “பாஜக தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு பாஜக நிறுவன நாள் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளோம். மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் நமது கட்சியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது. மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் கிடைப்பதை கட்சித் தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்

3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் தகவல்

தமிழகத்தில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன், “மூதாதையர் காலத்தில் இருந்து வசிக்கும் நிறைய இடங்களுக்கு பட்டா மாறுதல் இல்லாமல் இருக்கிறது. அதனை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரிசுகளின் எண்ணிக்கைகளைக் கருத்தில் கொண்டு அது சரிசெய்யப்பட நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டும் இந்த ஆண்டுக்கும் சேர்த்து 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த் துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி : ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதமாக இருக்க வாய்ப்பு உள்ளது. 2023-ம் ஆண்டில் முதல் காலாண்டில் அது 7.4 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2023-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டு தொடக்கத்தில் அது 8 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...