இந்திய பிரதமராக நரேந்திர மோடி நாளை 3-வது முறையாக பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதை முன்னிட்டு தலைநகர் டெல்லியிலும், ஜனாதிபதி மாளிகையிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக தனி மெஜாரிட்டி பெறாவிட்டாலும் நரேந்திர மோடி பிரதமராக அந்த கூட்டணியின் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து நரேந்திர மோடி மே.9-ம் தேதி (நாளை) மாலை 7.15 மணிக்கு பிரதமராக பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாள், மொரீஷியஸ், செசல்ஸ் தீவுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு நடந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் இப்போதும் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
மோடியின் பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் கர்தவ்யா பாத் ஆகியவற்றில் முதல் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுத்து விருந்தினர்கள் தங்கும் ஓட்டல்களைச் சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதவியேற்பு நடைபெறும் ஜனாதிபதி மாளைகையில் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு விருந்தினர்கள் புதுடெல்லிக்கு வருகை தரும் போது தங்குவதற்கு நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியின் NCT பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவின் போது அச்சுறுத்தல்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, வான்வழி தளங்களின் செயல்பாட்டை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் ஜூன் 9 முதல் ஜூன் 10 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை பாரா கிளைடர்கள், சிறிய ரக ஏர்கிராப்ட்கள், ட்ரோன்கள், பாரா மோட்டார்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமான இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்படும். ஓட்டல்களில் தங்கியுள்ளோரின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
பதவியேற்பு விழா நடைபெறும் போது மாநில எல்லை சீல் வைக்கப்படும். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த தடை உத்தரவு அடுத்த இரண்டு நாட்கள் அமலில் இருக்கும்.
போக்குவரத்து மாற்றம்:
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. நகரின் பல பகுதிகளில் இருந்தும் மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.