No menu items!

ஹீரோக்களுக்கு இது மோசமான காலம்!

ஹீரோக்களுக்கு இது மோசமான காலம்!

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவாக மூன்று மாதங்கள் கொண்டாட்டப்படுபவை ஐபிஎல் போட்டிகள்.  இந்த மூன்று மாதங்களும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்ட்டாடம். ஆனால் சினிமா புள்ளிக்களுக்கு திண்டாட்டம்.  வசூல் வருமா வராதா என்று சினிமா வட்டாரம் தயக்கத்தோடு கணக்குப் போட்டு பார்க்கும் சோதனையான காலக்கட்டம்.

தங்களது வீட்டிலோ அல்லது ஏதாவது க்ளப்பில் நண்பர்களுடனோ சேர்ந்து உட்கார்ந்தபடி, நொறுக்குத்தீனிகளை கொறித்தபடி, மக்கள் ஐபிஎல் போட்டிகளைப் பார்ப்பார்களே தவிர, திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் அப்படியே குறைந்துவிடும். இதனால் பெரிய நட்சத்திரங்களும், கமர்ஷியல் ஹீரோக்களும் கூட ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது தங்களது புதிய திரைப்படங்களை திரையிட தயங்குவார்கள்.

அதிலும் இந்த வருடம், தமிழ் சினிமாவுக்கும் இன்னும் அதிக சோதனையைக் கொடுத்திருக்கிறது.  இந்தியாவில் தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றதால், கருத்து கணிப்புகள், கருத்து திணிப்புகள், விவாதங்கள், அரசியல் நாடகங்கள் எல்லாமும் சேர்ந்து, மூன்று மாதங்களாக மக்களை தொலைக்காட்சிகளின் முன்னால் உட்காரவைத்துவிட்டன.

இதனால் இந்த வருடம் ஏறக்குறைய 5 மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சோதனையான காலகட்டமாகியிருக்கின்றன.

ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. தோனி கோப்பையை வெல்ல தான் இந்த ஏற்பாடு என்ற கிசுகிசு ஒருபக்கம். மோடி தலைமையில் 400-க்கு அதிகமான தொகுதிகளை வெல்லும் பாஜக என்ற கணிப்புகள் ஒருபக்கம். இவை இரண்டும் பொய்த்து போன பிறகும் கூட, மக்கள் பழையபடி திரையரங்குகள் பக்கம் திரும்பி பார்க்க ஆரம்பிக்கவே இல்லை என்கிறது கோலிவுட்டின் வியாபார வட்டாரம்.

ஆனால் இந்த வருடம், ரஜினிக்கு ‘வேட்டையன்’ உறுதி.  கமலுக்கு ‘இந்தியன் 2’, விஜய்க்கு ‘க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ தயாராகி வருகின்றன. அஜித்திற்கு ‘விடாமுயற்சியா’ அல்லது  ‘குட் பேட் அக்ளி’யா என உறுதியாகவில்லை. ஆனால் ஒரு படம் இந்த வருடம் வெளியாவது உறுதி. இப்படி முன்னணி நட்சத்திரங்கள் எல்லோருக்கும் ஒரு படமாவது இந்த வருடம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது.

இவர்களது படங்களுக்கு, பூஜையின் போதே ஒடிடி, டிஜிட்டல் உரிமைகள் பெரும் விலைக்குப் போய்விடுகின்றன. படம் முடிவதற்குள் திரையரங்கு உரிமை, தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு உரிமை எல்லாமும் சேர்ந்து போட்ட முதலீட்டுக்கு அதிகமான வருவாயை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துவிடுகின்றன.

ஆனால் இவர்களைத் தவிர்த்து தமிழ் சினிமாவில் இருக்கிற நடுத்தர கதாநாயகர்கள் மற்றும் சின்ன நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து சோதனைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. இதில் சில நடிகர்களுக்கு ஏதாவது ஒரு படம் கைவசம் இருக்கிறது, சிலருக்கு ஒரு படம் கூட ஒப்பந்தமாகவில்லை.

ஒரு பக்கம் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு எப்படியாவது கொஞ்சம் லாபம் கிடைத்துவிடுகிறது. மறுபக்கம் நடுத்தர மற்றும் சிறிய கதாநாயகர்களின் படங்கள் போட்ட முதலீட்டை கூட வசூலிக்க படாதப்பாடு படுகின்றன.

இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், மூன்று முக்கிய விஷயங்களை பட்டியலிடுகிறார்கள்.

  1. தொடர்ந்து அதிகரித்து வரும் படத்தயாரிப்பு செலவுகள் மற்றும் நட்சத்திரங்களின் சம்பளம்.
  • திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்ட வருவது. குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய கதாநாயகர்களின் படங்களுக்கு மக்கள் வருவது அரிதாகி வருகிறது.
  • இதுவரையில் லாபம் கொடுத்த டிஜிட்டல் உரிமைகளின் விலைகள் சரிவடைந்து கொண்டிருப்பது.

இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் தயாரிப்பாளர்களுக்கு இருந்தாலும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தினாலும், விநியோகஸ்தர்களுக்கு பீதியைக் கிளப்பினாலும், தங்களுடைய சம்பளத்தை குறைக்க கதாநாயகர்கள் தயாராக இல்லை. இந்த கதாநாயகர்களின் படங்கள் 50 கோடி வசூலைக் கூட எட்டுவது இல்லை. ஆனால் இவர்கள் 3 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் கேட்கிறார்கள்.

3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் கதாநாயகனுக்கு, அவர் வாங்கும் சம்பளத்தை ஈடுக்கட்டும் வகையில் திரையரங்கு உரிமை, வசூல் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. திரையரங்கு உரிமை மட்டுமில்லாமல் வெளிநாட்டு உரிமை மற்றும் ஒடிடி, டிஜிட்டல் உரிமைகளையும் சேர்த்தாலும் இதே நிலைமைதான்.

நடிகர்களின் சம்பளம் எகிறிக் கொண்டே இருப்பதால், தயாரிப்பு செலவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு நடுத்தர ஹீரோவை வைத்து படமெடுக்க வேண்டுமென்றால் 12 முதல் 15 கோடிகள் வரை பட்ஜெட் தேவைப்படுகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில், தயாரிப்பாளர்கள் பணத்தை இறக்குவதற்கு காரணமாக இருக்கும் ஒரே விஷயம், இந்தப் படம் நிச்சயம் ப்ளாக் பஸ்டர் என்ற ஒரே நம்பிக்கைதான். அப்படி பார்க்கையில் ஒரு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் ப்ளாக் பஸ்டர் படமாக வரவேற்பைப் பெறுமானால், லாபம் என்பது பல மடங்காக இருக்கும்.

ஆனால் இது போன்ற மாபெரும் வெற்றி என்பது எப்போதாவது நடக்கும் ஒரு சினிமா அதிசயம். இதற்கு சமீபத்திய மலையாளப் படங்களை குறிப்பிடலாம். ‘மஞ்ஜூம்மேல் பாய்ஸ்’, ‘ப்ரேமலு’, ‘ஆவேஷம்’ என எல்லா படங்களும் சிறிய பட்ஜெட் படங்கள்தான். இவை அவற்றின் பட்ஜெட்டை விட மூன்று நான்கு மடங்கு வசூலை அள்ளிக்குவித்திருக்கின்றன.

ஆனால் சிறிய, நடுத்தர கதாநாயகர்களை வைத்து சின்ன மற்று நடுத்தர பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களில் 99% பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள். இதற்கு காரணம், டிஜிட்டல், ஒடிடி உரிமை, வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை போன்றவற்றில் இந்தப் படங்களுக்கு வரவேற்பு இல்லை. யாரும் இந்த உரிமை வாங்குவதற்கு கூட முன்வருவது இல்லை. இந்த ஹீரோக்களுக்கு மக்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் தனிப்பட்ட செல்வாக்கும் வரவேற்பும் இல்லை.

இன்றைய சூழ்நிலையில், கொரானாவின் பாதிப்புக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் பார்த்ததும் அடையாளம் காணும் நடுத்தர ஹீரோக்களில் ஏழெட்டு பேருக்கு படங்கள் ஓடவே இல்லை. கைவசம் படங்கள் இருந்தாலும், அவற்றை எடுக்க தயாரிப்பாளர்கள் நிதி பிரச்சினையில் தவித்து வருகிறார்கள்.

இதனால் தமிழ் சினிமாவில் வழக்கமாக பாடும் சம்பள பஞ்சாயத்துதான் இப்போதும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. பட தயாரிப்பு செலவைக் குறைக்க, சிறிய மற்றும் நடுத்தர கதாநாயகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் இப்போது அதிகரித்து இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வாங்கிவிட்டு, படம் ஓடி வசூலான பின்பு லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெற்றால், அது தயாரிப்பாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்  என்ற பேச்சு இப்போது வலுத்திருக்கிறது.

புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே, எட்டு வாரங்கள் கழித்து ஒடிடி-யில் ஸ்ட்ரிமிங் செய்ய ஒடிடி தளங்கள் முன்வருகின்றன. இல்லையென்றால் ஒடிடி தளங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களைக் கண்டுகொள்வதே இல்லை. முன்பு போல் தொலைக்காட்சி உரிமையும் விலை போவதில்லை. காரணம் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த திரைப்படங்களுக்கு ரேட்டிங் கிடைப்பதில்லை. இதனால் விளம்பரதாரர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை.

இதனால் தமிழ் சினிமாவில் இருக்கும் சிறிய மற்றும் நடுத்தர ஹீரோக்களுக்கு இது மோசமான காலம் என்று வருத்தப்படுகிறார்கள் கோலிவுட்டின் வியாபார புள்ளிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...