No menu items!

மிஸ் ரகசியா – எடப்பாடியின் கோட நாடு அஸ்திரம்

மிஸ் ரகசியா – எடப்பாடியின் கோட நாடு அஸ்திரம்

டிராக் பேண்ட், டிஷர்ட் உடையில் ஆபீசுக்குள் நுழைந்தார் ரகசியா.

“இன்று சர்வதேச யோகா தினமாச்சே. அதனால் ஒரு யோகா நிகழ்ச்சிக்கு போய்ட்டு வரேன்” என்று தன் உடைக்கான விளக்கத்தையும் கொடுத்தார்.

”நீ யோகா செய்யறது இருக்கட்டும். அதிமுகவுல யாருக்கு யோகம் அடிக்கப் போகுது?”

“இதுல என்ன சந்தேகம். எடப்பாடி பக்கம்தான் இப்ப வெற்றிக் காத்து வீசுது. 99 சதவீத மாவட்டச் செயலாளர்கள் அவர் பக்கம்தான்னு ஆர்.பி.உதயகுமார் சொல்லியிருக்கிறாரே”

“அவர் சொல்றது இருக்கட்டும். உனக்கு கிடைச்ச செய்தி என்ன?”

“நான் ஏன் ஆர்.பி.உதயகுமார் பேரை சொன்னேன்னா அதுக்கு காரணம் இருக்கு. அவர் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர். 2019 நாடாளுமன்றத் தேர்தல்ல ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்க கடுமையா உழைச்சவர். தென் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரே எடப்பாடி பக்கம் போகிறார்னா…ஓபிஎஸ் எத்தனை பலவீனமா இருக்கார்ங்கிறதை இது காட்டுது”

”மாஃபா பாண்டியரஜன் காலைத் தொட்டு கும்பிட்டு எடப்பாடி பக்கம் சேர்ந்திருக்கிறாரே?”

“அதையும் நாம் முக்கியமா பாக்கணும். மாஃபா பாண்டியராஜன் எப்பவுமே பாஜக பக்கம்தான் நிப்பார். இப்ப அவர் எடப்பாடி பக்கம் வரார்னா, ஓபிஎஸ்க்கு பாஜக ஆதரவு இல்லைன்றது தெளிவா தெரியுது. ஓபிஎஸ்க்கு பாஜக ஆதரவு அளித்து காப்பாற்றும்னு தெரிஞ்சிருந்தா அவர் ஓபிஎஸ் பக்கமே இருந்திருப்பார்”

“அப்ப பாஜக ஆதரவு ஓபிஎஸ்க்கு உறுதியா இல்லையா?”

“பாஜக வேற கணக்கு போடுது. 2021 சட்டப் பேரவைத் தேர்தல்ல அதிமுக 66 சீட் ஜெயிச்சதுக்கு காரணம் எடப்பாடிதான்னு பாஜக நம்புது. அது மட்டுமில்லாம இப்ப பாஜக சட்டப் பேரவைத் தேர்தல்ல ஜெயிச்சிருக்கிற நாலு சீட்ல கோவை மேற்கும் மொடக்குறிச்சியும் எடப்பாடி பலமா இருக்கிற மேற்கு மண்டலத்துல வருது. மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்கள்ல அதிமுக பலமாக இருக்கு. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகள்ல பாஜகவுக்கும் கொஞ்சம் செல்வாக்கு இருக்கு. எடப்பாடி கூட இருந்தா அந்தப் பகுதில இன்னும் பலமாகலாம்னு கணக்குப் போடுது. ஓபிஎஸ் செல்வாக்குனு சொல்லப்பட்ட இடங்கள்ல கடந்த தேர்தல்ல அதிமுக அதிகமா ஜெயிக்கல. வெற்றி பெறக் கூடிய தலைவர்னா அது எடப்பாடி பழனிசாமிதான்னு பாஜக நினைக்குது”

“ஆனா, ஓபிஎஸ்க்கு ஆதரவாதானே பாஜக இருந்தது. மோடி சொல்லிதான் இணைந்தேன்னு ஓபிஎஸ் சொல்லியிருந்தாரே”

“ஆமா..சொன்னார். அதுக்கென்ன இப்போ…அரசியல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். அது மட்டுமில்லாம இரட்டைத் தலைமை பாஜகவுக்கே அலுப்பாக இருக்கிறதாம். ஒவ்வொரு முறையும் இரண்டு பேர்கிட்ட பேச வேண்டியிருக்கு, ரெண்டு பேரை சமாளிக்க வேண்டியிருக்குனு கஷ்டப்படுறாங்க. ஒற்றைத் தலைமைனா டீல் ஈசியா முடியும்ல”

“ஓபிஎஸ் சமரச முயற்சி எதையும் எடுக்கலையா? தோக்கப் போறோம்னு தெரிஞ்சும் அமைதியா இருக்காரே”

“அவர் சார்பா சில விஷயங்களை எடப்பாடி தரப்புக்கிட்ட பேசியிருக்காங்க. அதில முக்கியமான ஒண்ணு, ஜெயக்குமாரை கட்சியிலருந்து விலக்கணும்கிறது. ஜெயக்குமாரை நீக்கிட்டா ஓபிஎஸ் சமரசம் ஆகிடுவார்னு சொல்லியிருக்காங்க”

“அதுக்கு என்ன பதில் வந்ததாம்?”

“ஜெயக்குமாரை கட்சியில் இருந்து நீக்குறது இருக்கட்டும். ஜெயலலிதா காலத்தில திமுக எதிரி கட்சியாவே பார்க்கப்பட்டது திமுகவினரோட குடும்ப நிகழ்ச்சிகளில்கூட அதிமுகவினர் கலந்துக்க மாட்டாங்க. மீறி யாராவது கலந்துக்கிட்டா கட்சியில இருந்து நீக்கிடுவாங்க. ஆனால் இப்ப ஓபிஎஸ்ஸின் மகன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திச்சு பேசியிருக்கார். திமுக ஆட்சியைப் பாராட்டி பேசியிருக்கார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்கன்னு ஜெயக்குமார் தரப்பினர் கேள்வி எழுப்புறாங்க.”

“எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட இறங்கி வர்ர மாதிரி தெரியலையே”

“ஆமாம். ஏன்னா அவர்கிட்ட கோட நாடு அஸ்திரம் இருக்குனு சொல்றாங்க”

“கோட நாடு சிக்கல்ல எடப்பாடி பேருல்ல அடிப்பட்டுச்சு?”

“ஆமா, அது கொலை, கொள்ளை வழக்குல. ஆனா, கோட நாடு எஸ்டேட்லருந்து
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்ல பல டாக்குமெண்ட்ஸும் இருக்கு. அவையெல்லாம் ஜெயலலிதா, சசிகலா பத்திரமா வச்சிருந்தவை. அதிமுகவின் முன்னணித் தலைவர் பத்தின பல ஆவணங்கள் எஸ்டேட்லருந்து காணாமப் போயிருக்கு. அதெல்லாம் எங்கருக்குனு இன்னைக்கு வரைக்கும் தெரியல. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிட்ட இருக்கலாம்னு சொல்றாங்க. அதுல ஓபிஎஸ் பத்தின ரகசியங்களும் இருக்காம். ரொம்ப பிரச்சினை வந்ததுனா அந்த அஸ்திரத்தை எடப்பாடி பயன்படுத்துவார்னு சொல்றாங்க”

“தான் கட்சிக்காக செய்த தியாகங்களைப் பற்றி விலாவரியாக பத்திரிகைகளில் 2 பக்க விளம்பரத்தை ஓபிஎஸ் கொடுத்திருக்கிறாரே?”

”அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே இந்த விளம்பரம் பேக்ஃபயர் ஆகிடுச்சு. இந்த விளம்பரத்துக்காக பல கோடி ரூபாய்களை செலவழித்தவர், அதே பணத்தை கட்சிக்காரர்களுக்காக செலவழித்து இருந்தால் அவருக்கு ஆதரவு பெருகியிருக்கும்னு ஓபிஎஸ் விசுவாசிகள் பேசிக்கிறாங்க.”

“அப்போ அதிமுக சிக்கலுக்கு என்னதான் தீர்வு?”

“ஒரே தீர்வுதான். எடப்பாடி அதிகாரமிக்கவராக உருவாவது தவிர்க்க முடியாது. அதுதான் நடக்கப் போகிறது. ஓபிஎஸ்க்கு பொருளாளர் பதவி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். வழக்கம் கட்சிக்காக விட்டுக் கொடுத்து தியாகம் செய்து ஓபிஎஸ் ஏற்றுக் கொள்வார்னி எதிர்பார்க்கப்படுகிறது”

“சசிகலாவுக்கு மீண்டும் கதவுகள் மூடப்படுகிறதா?”

“ஆமாம். ஆனால் சசிகலா தனக்கு அதிகாரமிக்க பதவி வேண்டாம், அதிமுகவுக்குள் ஏதாவது அலங்கார பதவி கொடுத்தால் போதும்னு கேட்டிருக்கார். அதுக்கு எடப்பாடி ஒப்புக் கொள்ளவில்லையாம்”

“ஒரே அதிமுக புராணமா இருக்கு. முதல்வருக்கு உடம்பு சரியில்லையே ஏன்னாச்சு?”

“லேசான காய்ச்சல். இப்ப திரும்பியும் கொரோனா பரவிக்கிட்டு இருக்கிறதுனால வெளில வர வேண்டாம்னு ஓய்வுல இருக்கிறார்”

“லண்டன் போறார்னு சொன்னாங்களே”

“அது அடுத்த மாசம். முதலீடுகள் வாங்குறதுக்கு போறார். கூடவே மருத்துவ பரிசோதனையும் செஞ்சுப்பார்னு சொல்றாங்க”

“வேறு என்ன திமுக செய்திகள்?”

“ராஜகண்ணப்பன் அதிகாரியை ஜாதியை சொல்லி மிரட்டினார் என்ற புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன என்று 15 தினங்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்பி இருவருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு 2 அதிகாரிகளும் கோட்டை வட்டாரத்தில் கேட்டிருக்காங்க. இப்போது திட்டு வாங்கிய அதிகாரியிடம் கட்சியிடம் மாவட்ட தலைமை பேசிக்கொண்டு இருக்கிறதாம். விரைவில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அதிகாரி அறிக்கை தர வாய்ப்புள்ளது.”

“கோட்டை வட்டார செய்திகள் ஏதும் இருக்கா?

“மற்ற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களை முன்கூட்டியே கணித்து சொல்வதில்லைன்னு உளவுத்துறை மீது கோபத்தில் இருக்கிறாராம் முதல்வர். இனி எதிர்க்கட்சி மட்டுமில்லாம கூட்டணி கட்சி விவகாரங்களையும் துல்லியமாக சேகரித்துத் தரணும்னு உத்தரவு போட்டிருக்கிறாராம்.”

“பாஜக பற்றி ஏதும் பேசக் காணோமே?”

“கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலையை போட்டியிட வைக்க அக்கட்சி முடிவெடுத்து இருக்கிறதா சொல்றாங்க. அத்தொகுதியின் இப்போதைய காங்கிரஸ் எம்பியான ஜோதிமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் முட்டல் உள்ள நிலையில் தாங்கள் முயற்சி செய்தால் அங்கு வெற்றிபெற்று விடலாம் என்று பாஜக நினைக்குது. மேலும் வெற்றி வாய்ப்பை உறுதியாக்க செந்தில்பாலாஜி பற்றிய வில்லங்க விவரங்களை சேகரிக்கும் வேலையில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் இன்னொரு பரபரப்புச் செய்திக்கு வாய்ப்பு இருக்கிறது.”

“அண்ணாமலை இந்த முறை கொடுக்கிற செய்தியாவது புஸ்வாணமா மாறாம இருக்கணும்” என்று கூற சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...