No menu items!

மிஸ்.ரகசியா – முரசொலி படிக்கும் கவர்னர்

மிஸ்.ரகசியா – முரசொலி படிக்கும் கவர்னர்

”என்ன ரெய்ட் நியூசை இவ்வளவு ஆர்வமா பாத்துக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டவாரே உள்ளே நுழைந்தாள் ரகசியா.

“நீ வந்து நியூஸ் சொல்லுவேன்ற ஆர்வத்துலதான் பாத்துக்கிட்டு இருக்கோம். இப்ப எதுக்கு திடீர்னு அதிமுக அமைச்சர்கள் மீது ரெய்ட்?”

”எடப்பாடி தரப்பு இத எதிர்பார்த்துக்கிட்டுதான் இருந்தாங்க. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூணாவது தடவையா எஸ்.பி.வேலுமணி வீட்டுல சோதனை நடத்துறாங்க. போனவருஷம் ஆகஸ்ட்ல ஒரு தடவை நடத்துனாங்க. 810 கோடி ரூபாய் டெண்டர் ஒதுக்குன புகார் அடிப்படைல இது நடந்தது. இந்த வருஷம் மார்ச் மாசம் இரண்டாவது தடவையா சோதனை நடத்துனாங்க. வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 3294 சதவீதம் சொத்து சேர்த்திருக்கார்னு சொன்னாங்க. அடுத்து இப்போ இந்த ரெய்ட். இது கிராமப்புறங்களுக்கு எல்.இ.டி பல்பு வாங்குனதுல 500 கோடி ரூபாய் ஊழல்ன்ற புகார் அடிப்படைல நடந்துருக்கு”

“எல்லாம் பெரிய அமவுண்டால்ல இருக்கு”

“ஆமாம். அந்த அமவுண்ட்தான் பிரச்சினையே. வேலுமணிகிட்ட இருக்கிற அவ்வளவு பணத்தினாலதான் எடப்பாடி அணி வலுவா இருக்குனு எல்லோருக்கும் தெரியும். அதை உடைக்கிற முயற்சியாதான் இதை பாக்கணும். அது மட்டுமில்லாம நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வேலுமணியை ஒரு ஊழல்வாதியா மக்கள் முன்னாடி காட்டிறணும்னு திமுகவோட கொங்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நினைக்கிறாங்க. போன தேர்தல்ல கொங்கு மண்டலம்தான் திமுகவுக்கு பெரிய அடியைக் கொடுத்தது அது மீண்டும் நடந்துடக் கூடாதுனு திமுக நினைக்குது. அந்தப் பகுதி பாஜகவினருக்கும் எஸ்.பி.வேலுமணிதான் ஃபைனான்சியரா இருக்கிறார்னும் செய்திகள் இருக்கு. இதையெல்லாம் நிறுத்தணும் இல்லையா?”

“விஜயபாஸ்கர் வீட்டுலயும் ரெய்ட் நடந்துருக்கே”

“விஜயபாஸ்கருக்கு இது ரெண்டாவது ரெய்ட். இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது இந்த ரெய்டில் சிக்கியிருப்பது ஐசரிகணேஷின் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி. அந்தக் கல்லூரிக்கு சான்றிதழ் வழங்கியதுதான் பிரச்சினை. இதில் ஐசரி கணேஷும் மாட்டியிருக்கிறார். எஃப்ஐஆரில் அவர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. திடீரென்று இதை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஐசரிகணேஷ் முக்கிய தயாரிப்பாளராகவும் ஃபைனான்சியராகவும் இருக்கிறார். இது யார் கண்ணையோ உறுத்தியிருக்கிறது என்கிறார்கள்”

“சான்றிதழ் அளித்த டாக்டர்களும் மாட்டியிருக்காங்க போல. முடிவு என்னாகுதுனு பார்ப்போம். ராகுல் நடைபயணம் பட்டய கிளப்பிக்கிட்டு இருக்குப் போல?”

“இந்த நடைபயணத்துனால ரொம்ப சந்தோஷப்படுபவர் கே.எஸ்.அழகிரிதான். தமிழ்நாட்டில் ராகுல் காந்தி தொடங்கிய நடைப்பயணத்தை தொடங்குனபோது கோஷ்டி சண்டை இல்லாமல் எல்லோரையும் அரவணைத்துக் கொண்டார் கே.எஸ்.அழகிரி. இது ராகுல் காந்தியை ரொம்ப கவர்ந்ததாக கட்சி வட்டாரத்துல பேசிக்கிறாங்க. தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி 3 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டார். இனி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தமிழக தலைமையிலும் மாற்றம் வர வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க. இந்த சூழலில் நடைப்பயணத்தை தமிழகத்தில் சுமுகமாக நடத்திவைத்த அழகிரிக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும் என்று உற்சாகமாய் சொல்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்”

“ஆனால் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு தான் சென்றபோது போதிய அளவில் கூட்டம் சேர்க்காததால் ராகுல் காந்தி மூட் அவுட் ஆனதாக நான் கேள்விப்பட்டேனே?”

“இந்த விஷயத்தில் செல்வப்பெருந்தகை மீதுதான் அவருக்கு கோபமாம். அதேநேரம் திடீரென ராஜீவ் நினைவகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி சேர்க்கப்பட்டதால்தான் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லைன்னு செல்வப்பெருந்தகை தரப்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சத்தியமூர்த்தி பவனில் கேட்டால், ‘ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடர்பாக சுமார் 1 மாத காலம் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் செல்லப்பெருந்தகையும் கலந்துகொண்டார் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டுதான் ராகுல்காந்திக்கு கன்னியாகுமரி செல்கிறார் என்று ஏற்கெனவே திட்டமிட்டது. அப்படி இருக்கும்போது செல்வப்பெருந்தகை இப்படி காரணம் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது’ என்கிறார்கள்.”

“ராகுலில் நடைப்பயணத்தில் கார்த்தி சிதம்பரம் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது போல் இருக்கிறதே? பீட்டர் அல்ஃபோன்ஸ்கூட போகலனு சொல்றாங்களே”

“கார்த்தி சிதம்பரம் நடைபயணம்னு ஒண்ணு நடக்கறதைப் பத்தி கவலைப்படாம ட்விட்டரில் பதிவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்ஃபோன்ஸ் இருப்பதால் அவரால் கட்சி ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள முடியாது. கார்த்தி சிதம்பரத்தைப் பத்தியெல்லாம் காங்கிரஸ்காரர்கள் கவலைப்படவில்லை. அவரை காங்கிரஸ்காரராகவே பார்ப்பதில்லை” சிரித்தாள் ரகசியா.

“ராகுலின் நடைப்பயணம் வெற்றியா தோல்வியா? உனது கணிப்பு என்ன?”

“ எனது கணிப்பைவிடுங்கள். மத்திய உளவுத் துறையும் பாஜகவின் சோஷியல் மீடியா குழுவும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. பாதிரியாரை பார்த்தாரே பகவதி அம்மனை பார்த்தாரா? அவர் தங்கியது எல்லாமே கிறிஸ்தவ கல்லூரிகளில்தானே? அவர் போட்டிருந்த டீ சர்ட்டின் விலை 42 ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் இந்த நடைப்பயணத்தைப் பற்றி பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் ராகுல்காந்தி இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். எந்தவித செயல்பாடும் இல்லாமல் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது புது உத்வேகத்தை அளிப்பதாகத்தான் மத்திய உளவுத் துறை அறிக்கை அளித்திருக்கிறது. பாஜகவினர் தீவிரமாக விமர்சிப்பதில் இருந்தே, இந்த நடைப்பயணத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது தெரிகிறது. அதேநேரம் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தாமல் தாங்கள் ஆட்சியில் உள்ள கேரளாவில் நடைபயணத்துக்கு ராகுல் அதிக நாட்களை ஒதுக்கியது காம்ரேட்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். சிபிஎம் கட்சி இதை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது”

“அதிமுக உள்கட்சி விவகாரத்தில் ஓபிஎஸ்ஸை நீதிமன்றம் மீண்டும் கைவிட்டுடுச்சே?”

“நீதிமன்றத்தில் ஓபிஎஸ் குட்டு வாங்குவது தொடர்கதையாகிவிட்டது. ‘நீங்கள் கட்சி உறுப்பினரே இல்லை. அப்படி இருக்கும்போது உங்களிடம் எப்படி கட்சி அலுவலகத்தின் சாவியை ஒப்படைப்பார்கள்’ என்று ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதிகள் கேட்டதால் அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இனியும் அவரை நம்பி எடப்பாடியுடன் போராட முடியுமா என்ற யோசனையில் இருக்கிறார்கள். பாஜகவும் இதேபோல்தான் யோசிப்பதாக சொல்கிறார்கள்.”

“அரசு ஊழியர்கள் திமுக அரசு மீது அதிருப்தியாக இருப்பதாக கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். அரசு ஊழியர்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே திமுகவுக்குத்தான் ஆதரவாக இருந்துள்ளனர் எனக்கு அரசு ஊழியர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று எம்ஜிஆரே சொல்லியிருக்கிறார். தான் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரிவிக்கப்படும் என்று முன்பு பகிரங்கமாகவே கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின். இதனால் சமீபத்தில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் அவர் சலுகைகளை அறிவிப்பார் என்று ஊழியர்கள் நம்பியிருந்தனர். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்படும் என்றும் நம்பியிருந்தனர். ஆனால் முதல்வர் அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதற்கு பதில் ‘பத்தாண்டுகளாக நீங்கள் காத்திருந்தீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து 13 மாதம்தான் ஆகிறது’ என்று மழுப்பலாக பேசி சமாளித்து விட்டார். இதனால் வெறுத்துப்போன அரசு ஊழியர்கள் பலர் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டார்களாம். தங்களுக்கு சாதகமான அரிவிப்புகள் வராததால் அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்”

“இதனால போராட்டங்கள் ஏதும் வருமா?”

“இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிச்சிருக்கார். வேறு எந்த தொழிற்சங்கமும் அப்படி சொல்லவில்லை”

“ஆளுநர் மாளிகை தகவல்கள் எதும் இருக்கா?”

“தினமும் காலையில் முரசொலியைத்தான் படிக்கச் சொல்லி கேட்கிறாராம் கவர்னர் ரவி. அதில் முக்கியமான பகுதிகள் குறிக்கப்பட்டு. மொழிபெயர்க்கப்பட்டு அமித் ஷாவின் பார்வைக்குப் போகிறதாம். இன்னொரு முயற்சியிலும் ஆளுநர் இறங்கியிருக்கிறார்”

“என்னது?”

“தமிழ் கற்றுக் கொள்கிறார். ஆளுநருக்கு ஏற்கெனவே தமிழ் கொஞ்சம் தெரியும். மெதுவாகப் பேசினால் புரிந்துகொள்வார். ஆர்எஸ்எஸ்காரர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பேச்சுத் தமிழ் சொல்லித் தந்தார். இப்போது தமிழ் எழுத்துக்களை கம்ப்யூட்டர் மூலம் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறார்”

“கவர்னர் என்றதும் நினைவுக்கு வருகிறது. தெலங்கனா ஆளுநர் தமிழிசை குறித்தும் முரசொலி முழு பக்க கட்டுரை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு தமிழிசை பதிலும் அளித்திருக்கிறாரே?”

“தெலங்கானா அரசு தன்னை பொருட்படுத்துவதில்லை என்ற வகையில் சமீபத்தில் தமிழிசை பேசியிருந்தார். அதன் அடிப்படையில் ஆளுநர் – அரசு மோதல் இருந்தால் இப்படிதால் மதிப்பை இழக்க வேண்டியிருக்கும் என்று முரசொலி விலாவாரியாக கட்டுரை எழுதியிருந்தது. அந்தக் கட்டுரை முழுக்க முழுக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்காக எழுதப்பட்டது. ஆனால் பதில் தமிழிசையிடமிருந்து வந்தது. தமிழிசையிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று திமுக தலைமை எதிர்பார்க்கவில்லை. தமிழிசை தன் பதிலில் தெலங்கானா அரசுக்கும் அவருக்கும் உள்ள மோதல் குறித்து பேசாமல் தமிழ்நாட்டுப் பெண்ணை விமர்சித்து கட்டுரை எழுதுகிறார்கள் என்று முரசொலியை விமர்சித்திருந்தார். இது திமுக எதிர்பார்க்காதது. முதல்வருக்கு இதில் சற்று வருத்தம். முதல்வருக்கும் அவரது குடும்பத்து பெண்களுக்கும் எப்போதும் தமிழிசை மீது அன்பும் பாசமும் உண்டு. தமிழிசை குறித்த கருத்துக்களை கவனமாக தெரிவிக்க வேண்டும் என்று முரசொலி குழுவுக்கு கூறியிருக்கிறார்”

“அண்ணாமலை பற்றி செய்திகள் ஏதும் இல்லையா?”

“தமிழக பாஜக ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ஒரு இதழை நடத்துகிறது. முரசொலியைப் போல அதற்கு வேகம் தர நினைத்திருக்கிறாராம் அண்ணாமலை. அதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒரே நாடு பத்திரிகைக்காக மூத்த பத்திரிகையாளர்களை கமலாலயம் தேடி வருகிறது. இதுவரை யாரும் சிக்கவில்லையாம்”

”வலதுசாரி சித்தாந்தம் எழுததான் நிறைய பேர் இருக்காங்களே. அவங்க யாரும் வரலையா?”

”நிறைய பேர் இருக்காங்க. ஆனா அவங்க அண்ணாமலைகிட்ட வேலை செய்ய சம்மதிக்கணும்ல” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...