No menu items!

செங்கோட்டையன் அதிரடி ஏன்? – மிஸ் ரகசியா!

செங்கோட்டையன் அதிரடி ஏன்? – மிஸ் ரகசியா!

சென்னை மழையில் நனைந்தவாறே உள்ளே நுழைந்த ரகசியாவிடம் சூடான ஃபில்டர் காபியை நீட்டினோம்.

கூடவே, “ செங்கோட்டையன் என்ன அதிரடியா பேசியிருக்கிறார். அதிமுக தனித்தே நிற்க முடியும்னு சொல்லியிருக்கிறாரே… இது என்ன பாஜகவுக்கு மைல்ட் எச்சரிக்கையா?” என்ற கேள்வியையும் நீட்டினோம்.

“நீங்க இதை கேப்பீங்கனு தெரியும். செங்கோட்டையன் எப்பவுமே பாஜகவுக்கு எதிரா பேசக் கூடியவர். இப்ப மட்டுமல்ல நிறைய தடவை திராவிடக் கொள்கைகள் பத்தி பேசியிருக்கிறாரு. போன ஏப்ரல் மாசம்கூட சட்டப்பேரவைல பேசும்போது தமிழ்நாட்டுல திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு யாரும் ஆள முடியாது என்று பேசினார். அதுக்கு முன்னாடி போன வருஷம் சட்டப்பேரவைல பேசும்போதும் இதே கருத்தை சொன்னார். அதுக்கும் முன்னாடி சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்துல இது பெரியார் மண் வேறு யாருக்கும் இடமில்லைனு சொன்னார்”

“எதுக்கு இந்தப் பட்டியல்? அது மாதிரிதான் இதுவும். சும்மா கடந்து போகும்னு சொல்றியா?”

“இல்லை. இப்ப சொன்னதுக்கு பின்னாடி காரணங்கள் இருக்கு”

“என்ன காரணங்கள்?”

”இந்த முறை பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி போனதும் அவரை ஓபிஎஸ் பக்கத்துல நிக்க வச்சதும் எடப்பாடி ஆதரவு அதிமுகவினருக்குப் பிடிக்கல. தலைமைகிட்டேயே சொல்லியிருக்காங்க. நம்மளை வச்சு பாஜக கேம் ஆடுது. பிரதமரை சந்திக்க வரிசைல நின்னதை தொண்டர்கள் விரும்பலனு வருத்தப்பட்டிருக்காங்க.”

“எடப்பாடி என்ன சொன்னாராம்?”

“எடப்பாடிக்கும் விஷயம் புரிஞ்சிருக்கு. பாஜகவுக்கு தங்கள் நிலையை புரிய வைக்கிறதுக்காகதான் செங்கோட்டையனை அப்படி பேசச் சொன்னாராம்”

”இதுக்கெல்லாம் பாஜக பயந்துருமா? செங்கோட்டையன் எப்பவும் பேசுறதுதானே?”

“உண்மைதான். ஆனா செங்கோட்டையன் சொன்ன இன்னொரு விஷயத்தையும் சேர்த்து பார்க்கணும். சில வெட்டுக் கிளிகள் பிரிந்துப் போனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் கூறியிருக்கிறார். அவர் வெட்டுக் கிளினு சொன்னது ஓபிஎஸ் குரூப்பை. அவங்க கூட மீண்டும் இணைய வாய்ப்பில்லைனு சொல்லியிருக்காரு. அதனால் ஓபிஎஸ்ஸை சேர்த்து வைக்கிற முயற்சி வேஸ்ட்னு சொல்லாம சொல்றாரு”

”என்னதான் எடப்பாடியோட வியூகம்?”

“கூட்டணிக்கு பாஜக வந்தா தனியா வரணும். ஓபிஎஸ்ஸைக் கூப்பிட்டுக்கிட்டு வரக் கூடாது. எடப்பாடிக்கு அண்ணாமலை நடவடிக்கைகள் பிடிக்கல. அவர் வளர்வது கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பின்னடைவைத் தரும் என்று நினைக்கிறார். முக்கியமா இப்போ எடப்பாடி அதிமுக கொங்கு மண்டலத்துலதான் பலமா இருக்கு. அண்ணாமலையை எப்படி தடுக்கிறதுங்கிறதுதான் எடப்பாடியோட யோசனையா இருக்கு. இதுக்கு என்ன பண்ணலாம்னு மூத்த தலைவர்கள்கிட்ட கேட்டிருக்கிறார். அண்ணாமலை மட்டுமல்ல நாங்களும் அரசியல் பண்ணுவோம்னுதான் எடப்பாடியும் சென்னையில் தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளுக்கு விசிட் அடித்தார். இத்தனை நாட்கள் பண்ணாதவர் இப்போ போவதற்கு என்ன காரணம் யோசித்துப் பாருங்கள்”

“அமித் ஷா சென்னை வந்துட்டு போயிருக்கிறாரே? ஏதாவது விசேஷ செய்தி உண்டா?”

“அமித் ஷா எப்ப வந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள கட்சி நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்களுடன் கட்சி நிலவரம் பற்றி ஆலோசிப்பது வழக்கம். இந்த முறையும் கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் போட்டிருக்கார். இதற்கு முன்ன நடந்த ஆலோசனைக் கூட்டங்கள்ல, ‘உங்கள் வேகம் பத்தாது. நீங்க இன்னும் கடுமையாக உழைக்கணும்’னு அவர் பேசுவார். ஆனா இந்த முறை அப்படி பேசலை. அதுக்கு மாறா, ‘இப்போதுதான் நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். கூடவே கட்சியை பலப்படுத்துங்கள். கட்சியை வலுப்படுத்த பூத் கமிட்டி முக்கியம். அதை செயல்படுத்துங்கள்’னு பேசியிருக்கார். அப்போது எழுந்த மாநில பொதுச் செயலாளர் கராத்தே தியாகராஜன், ‘நமது பூத் கமிட்டியில் 50 பேர்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதிமுக பூத் கமிட்டி 100 பேர் கொண்டது. திமுக பூத் கமிட்டி 200 பேர் கொண்டது. நாம் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து இன்னும் கடுமையாக உழைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறலாம்’னு சொல்லி இருக்கார். அதை அமித் ஷாவுக்கு ஒருவர் இந்தியில் மொழிபெயர்த்து சொல்ல, உடனே குஷியான அமித் ஷா, ‘நமது பூத் கமிட்டி உறுப்பினர்களையும் நீங்கள் அதிகப்படுத்துங்கள். அதுவும் நமக்கு முக்கியம்’ன்னு அறிவுரை வழங்கி இருக்காரு.”

“வேறு என்ன அறிவுரைகளைச் சொல்லி இருக்காராம்?”

“மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி அதிக அளவு ஆதாயம் பெறும் மாநில அரசாக திமுக அரசு இருக்கிறது. ஆனால் திமுக மத்திய அரசின் நிதி ஆதாரத்தில்தான் இந்த திட்டங்கள் நடக்கிறது என்பதை சொல்வதில்லை. ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் அதைப்பற்றிய விவரங்களை தருமாறு மத்திய அமைச்சர்களைவிட்டு கேட்கச் சொல்கிறேன். அந்த விவரங்களை சேகரித்து உங்களுக்கு அனுப்பச் சொல்கிறேன்.அதை நீங்கள் மக்களிடம் விளம்பரப் படுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறார் அமித்ஷா”

“பொதுவா சென்னைக்கு வர்ற அமித் ஷா விமான நிலையத்துக்கு பக்கத்துல இருக்கற நட்சத்திர ஹோட்டல்லதான தங்குவாரு. இந்த முறை எதுக்காக ஆளுநர் மாளிகையில தங்கினாராம்?”

“ஆளுநர்கிட்ட அவர் கொஞ்சம் மனம்விட்டு பேசவேண்டி இருந்ததாம் அதனாலதான் அவர் ஆளுநர் மாளிகையில தங்கி இருக்காரு. அப்படி ஆளுநரோட பேசும்போது, ‘ தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லின்னு பல மாநிலங்கள்ல முதல்வரோட ஆளுநருக்கு உறவு சரியில்லை. ஆனா அங்க இருக்கிற ஆளும் கட்சிகளைப் போல இல்லாம ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்னு தமிழகத்தை சேர்ந்த ஆளும் கூட்டணி ஜனாதிபதிகிட்ட மனு கொடுத்திருக்கு. அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். நீங்க வேணும்னா வேற மாநிலத்துக்கு போறீங்களா’ன்னு அமித் ஷா கேட்டிருக்கார். அதுக்கு ஆளுநர், ‘வேண்டாம். இனி பிரச்சினை வராம நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லி இருக்காரு.”

“சமாதானமா போனா சரி. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் முதல்வரைச் சந்திக்காதது ஏன்?”

“ஏற்கெனவே பேரறிவாளன் விடுதலையான போது முதல்வர் அவரை கட்டிப்பிடித்து தேநீர் எல்லாம் தந்து உபசரித்தது சர்ச்சையானது. அதனால இப்போது விடுதலையானவர்கள் தன்னை சந்திக்க வருவதைத் தவிர்க்கலாம் என்று முக்கிய பிரமுகர் மூலம் முதலமைச்சர் சொல்லிவிட்டாராம். இதன்மூலம் தேவையில்லாமல் புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்காதீர்கள் என்றும் சொல்லிவிட்டாராம் முதல்வர் ஸ்டாலின். அதனாலதான் அவர்கள் முதல்வரைச் சந்திக்கலையாம்.”

“உங்கள் ஏரியாவில் எங்காவது மழை நீர் தேங்கி இருக்கிறதா?”

“கடந்த வருடம் இருந்த அளவுக்கு பாதிப்பு இல்லை என்பதே உண்மை. அதேநேரத்தில், ‘வெள்ள பாதிப்பு எதுவும் இல்லை. வெள்ள நீர் எங்கும் இல்லை உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்று சொல்வது நமக்கு ஒரு பக்கம் சாதகம் இன்னொரு பக்கம் பாதகமும் இருக்கிறது. மத்திய அரசு நீங்களே வெள்ள பாதிப்பு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு இப்போது நிதி கேட்கிறீர்கள் என்று சொல்லக்கூடும். இன்னும் நிறைய மழை நாட்கள் இருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது இதற்கெல்லாம் நாம் மத்திய அரசிடம் தானே உதவி கேட்க வேண்டும்’ என்று கோட்டை வட்டாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பேசுகிறார்களாம்.”

”மழை நீர் தேங்கினாலும் பிரச்சினை, தேங்காவிட்டாலும் பிரச்சினையா? அரசு என்னதான் செய்யும்?”

சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...