அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி பார்த்து வந்த இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் பெயர், புழல் சிறையில், சிறைக் கைதியாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
புழல்சிறை கைதியானார் செந்தில் பாலாஜி
அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக சிலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர், புழல் சிறையில், சிறைக் கைதியாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு கைதி எண் 1440 ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் சோதனை
கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பில் இருந்து வந்த நிலையில் தமிழக காவல்துறை பாதுகாப்பு தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் மத்திய பாதுகாப்பு படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முழுவதுமாக வெளியேறியுள்ளனர். அதேநேரம், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான விசாரணை வரவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், ‘அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பாஜகவின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட பழைய புகாரை வைத்து அவரை 18 மணிநேரம் அடைத்து வைத்து இதய நோய் வரும் அளவிற்கு அமலாக்கத்துறை சித்தரவதை செய்துள்ளது.
பாஜக தலைமை அமலாக்கத்துறை மூலமாக தனது அரசியலை திணிக்க முயல்கிறது. கருத்தியல் ரீதியாக அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமான வரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவின் பாணி. இந்த ஜனநாயக விரோத செயலைத்தான் இந்தியா முழுக்க பின்பற்றுகிறார்கள். சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ஆம் ஆத்மியின் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் டிகேசி வக்குமார் உள்ளிட்ட பலரது இடத்திலும் சோதனை நடந்துள்ளது. குஜராத்திலோ மத்திய பிரதேசத்திலோ உத்திரப்பிரதேசத்திலோ இதுபோன்ற சோதனைகள் நடைபெறாது. ஏனென்றால், அங்கு ஆட்சியில் இருப்பது உத்தம புத்திரன் பாஜகவினர்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 10 ஆண்டுகளில் 112 அமலாக்கத்துறை சோதனைகள் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் 3000 சோதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் குற்றம் நிருபிக்கப்பட்டது வெறும் 0.05 சதவிகிதம்தான். மற்றபடி, அனைத்தும் சோதனை என்ற பெயரிலான மிரட்டல்கள் தான்.
இப்படி மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள், பாஜகவில் இணைந்ததும் புனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். இங்குள்ள அதிமுக அதற்கு ஒரு உதாரணம். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை அதிமுகவினர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் தர தயாராக இருக்கிறது. அவர்கள் மீது சோதனை நடத்த அமலாக்கத்துறை தயாரா? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவை தனது கொத்தடிமையாக மாற்றுவதற்கு இதுபோன்ற சோதனைகளை பாஜக 2016, 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் பயன்படுத்தியது.
அதிமுகவை போல அடிமை கட்சியல்ல திமுக. சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிப்பதை போல ஒவ்வொரு திமுக காரரும் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். “என்னை யாரும் அடிக்க முடியாது. நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்” என்ற கலைஞர் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் திமுகவினர். எங்களுக்கு என தனித்த கொள்கை உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா காலம் என நாங்கள் பார்க்காத அடக்குமுறை இல்லை. சீண்டிப் பார்க்காதீர்கள். திமுகவினரை சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.
இலாகாக்கள் இல்லாத அமைச்சரானார் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற, ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மின்சாரத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலாகாக்கள் பிறருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐய்யோ ஐய்யோ
பதற்றமும் உளறலும் ம் பளிச் பளிச் பளிச் பளிச்.