No menu items!

நன்றி நெஞ்சு வலி! – செந்தில் பாலாஜியின் முன்னோடிகள்!

நன்றி நெஞ்சு வலி! – செந்தில் பாலாஜியின் முன்னோடிகள்!

மோகன ரூபன்

ஒரு நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் தொடங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இறை வணக்கத்துக்கு அடுத்தது என்ன? வரவேற்புரைதான் இல்லையா? அதே மாதிரிதான். அரசியல்வாதிகள் சிலர் அரெஸ்ட் ஆகும்போது அவர்களது அடுத்த நிகழ்ச்சியாக இருக்கிறது நெஞ்சு வலி. ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்ற பழமொழியை கொஞ்சம் மாற்றி, ‘கைது வரும் முன்னே, நெஞ்சு வலி வரும் பின்னே’ என்றுகூட மாற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது.

இடி, மின்னலைத் தொடர்ந்து வரும் மழையைப் போல, கைது நடவடிக்கையைத் தொடர்ந்து வரும் இந்த நெஞ்சுவலி இப்போது லேட்டஸ்ட்டாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வந்திருக்கிறது.

சரி. இந்த கைது, நெஞ்சுவலி படலம் எப்போதிருந்து ஆரம்பித்தது? இதைக் கண்டுபிடிக்க நாம் பெரிய அளவில் வரலாற்று ஏடுகளை எல்லாம் புரட்டத் தேவையில்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்த நெஞ்சுவலி டிரெண்ட் ஆரம்பித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், உடன்பிறவா சகோதரியுமான வி.கே. சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன். ஜெ.ஜெ.டி.வி., சூப்பர் டூப்பர் கேபிள் நெட்வொர்க் நிறுவனங்களில் பாஸ்கரன் தலைவராக இருந்தவர்.

அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதன் ஆக்டோபஸ் கரங்களால் பாஸ்கரனை ஒருமுறை அரவணைக்க வந்தது. மழை வருவது மயிலுக்குத் தெரியும் என்பது போல பாஸ்கரன் கைது செய்யப்படுவார் என்ற தகவல் நெஞ்சு வலிக்கு எப்படி தெரிந்தது என்பது தெரியவில்லை?

நெஞ்சுவலி என்று கூறி சென்னை பொது மருத்துவமனையில் உடனே அட்மிட் ஆனார் பாஸ்கரன். அங்கே அவசர அவசரமாக அவருக்காக ஒரு ஏ.சி.அறை தயாரானது. அங்கே செல்லுலர் போனுடன் தனது வழக்கமான பணிகளை படுத்திருந்தபடியே அவர் பார்த்து வந்தார். அந்த அறையில் அவருக்காக ஒரு டி.வி. நிறுவப்பட்டது. ஜெ.ஜெ.டி.வி.யின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாவதற்கு முன் பாஸ்கரன் பார்வையிட்டு ஓ.கே. செய்வார்.

இதற்கிடையில் கடமையைக் கண் எனக் கருதிய அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஸ்கரனை விசாரிக்க முயன்றபோது, ‘அவர் மிகமோசமான உடல்நலக்குறைவுடன் இருக்கிறார்’ என்று பதில் வந்தது. சென்னை பொது மருத்துவமனை கார்டியலாஜிஸ்ட் ஒருவர், ‘என் வாழ்க்கையில் நான் பார்த்ததிலே மிகமிகச் சரியான கார்டியாக் நோயாளி பாஸ்கரன்தான்(!)’ என்று ஒரு சான்றிதழை வேறு வாயால் வழங்கினார்.

சென்னை பொது மருத்துவமனையில் பாஸ்கரனுக்கு என்னவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் ஒரு கட்டத்தில் பாஸ்கரன் மீதான விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு கைது நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்பட, உற்சாகமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் பாஸ்கரன்.

சிறைப் பதிவேட்டில் பாஸ்கரனின் பெயர் பதிவு செய்யப்பட்டதே தவிர, ஒரு நிமிடம் கூட அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி அந்த நெஞ்சு வலிக்கு.
வி.கே.சசிகலா விஷயத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. பொருளாதார குற்றவியல் நீதிமன்றம், முறைகேடுகள் தொடர்பாக சசிகலாவை நெருக்கியபோது, திடீர் உடல் நலக்கோளாறு என்றுகூறி சசிகலா நீதிமன்றத்தில் நேர்நிற்பதைத் தவிர்த்து வந்தார்.

ஒருகட்டத்தில், பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தின் நெருக்குதல் அதிகரித்தபோது, வேறு வழியின்றி சசிகலா ஆஜராக வந்தார். அதுவும் எப்படி? அனைத்து விதமான உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்சில்!

நீதிமன்ற வளாகத்தில் அந்த ஆம்புலன்ஸ் நிற்கும். அதன் முன்னும்பின்னும் தமிழக அதிரடிப்படை போலீசார் இருப்பார்கள். கூடவே மருத்துவர்கள், செவிலியர்கள் நிற்பார்கள். சசிகலா எழுந்து நீதிமன்றத்துக்குள் வர மாட்டார்.

நீதிபதிகள் யாரும் அந்த ஆம்புலன்சை நெருங்கி சசிகலாவைப் பார்க்க முயன்றால், ‘அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நீதிமன்றம்தான் பொறுப்பு’ என்று ஆம்பு லன்சைச் சுற்றியிருப்பவர்கள் கத்துவார்கள். பயமுறுத்துவார்கள்.

அதையும் மீறி நீதிபதி ஒருவர் ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளின் உதவியுடன் அரை மயக்கநிலையில் இருந்தார் சசிகலா.

இந்த நிகழ்ச்சி பல மாதங்களாக நீடித்துவந்தது. முடிவில் ஒருவழியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார் சசிகலா. உண்மையில் அவருக்கு என்னதான் உடல்நோவு ஏற்பட்டது என்பது இதுவரை யாருக்குமே புரியாத புதிர்.

கைது நடவடிக்கை, அதைத் தொடர்ந்து வரும் நெஞ்சுவலிக்கு, ஏதோ தமிழ்நாடுதான் ஏகபோக உரிமையுள்ள மாநிலம் என்று நினைத்து விடக்கூடாது. வெளி மாநிலங்களிலும் இதேப்போல நடந்துள்ளது.

பாலிவுட் நடிகரும், பிரபல திரை விமர்சகருமான கமால் ஆர்.கான் ஒருமுறை நடிகர் ரிஷிகபூர், இர்ஃபான் கான் பற்றி தரக்குறைவாக எழுதினார். அவதூறு, இரு பிரிவினர் இடையே சண்டையை மூட்டுதல் என்ற இரு பிரிவுகளில் கமால் ஆர்.கான் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. மும்பை விமானநிலையத்தில் வைத்து கமால் ஆர்.கான் கைது செய்யப்பட்டதுதான் தாமதம், அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. மும்பை சதாப்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தானே சிறையில் 14 நாள் நீதிமன்ற காவலை அனுபவிக்கும் பாக்கியம் அதற்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது.

மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகன் நிதேஷ் ராணே. இவர் மகாராஷ்டிர மாநிலம் கான்காவில் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.

கடந்த ஆண்டு, மகாராஷ்டிர சட்டமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்த நேரம், சட்டமன்ற வளாகத்தில் சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவை, நிதேஷ் ராணே ‘மியாவ் மியாவ்’ என கத்தி கேலி செய்தார்.

சிந்துதுர்க் மாவட்ட கூட்டுறவு வங்கித் தேர்தலில் சிவசேனை தொண்டர் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக நிதேஷ் ராணே மீது வழக்குத் தொடரப்பட்டது. கைது நடவடிக்கையின் போது சொல்லிவைத்ததுபோல இவருக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.

சரி. இப்போது இன்னொரு சம்பவத்துக்கு வருவோம்.

நீதிபதி சி.எஸ்.கர்ணனை நினைவிருக்கிறதா? கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபர் இவர். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கர்ணன் மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகார் தலைமையில்லான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 6 மாத சிறைத் தண்டனையை விதித்தது.

நடப்பு நீதிபதி ஒருவருக்கு உச்சநீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துது இந்திய வரலாற்றில் அதுவே முதன்முறை. கோவை அருகே ஒரு கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் நீதிபதி கர்ணன். ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் கர்ணன் கொல்கத்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கொல்கத்தா விமானநிலையத்தில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி வந்தது. 62 வயதான கர்ணன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோல இன்னும் பல கைது, நெஞ்சுவலி சம்பவங்களும் இருக்கலாம்.

நல்லவேளை. மகாகவி பாரதி நம் காலத்தில் வாழவில்லை. அப்படி அவர் வாழ்ந்து, இந்த நெஞ்சு வலி சமாச்சாரங்களை நேருக்கு நேர் பார்த்திருந்தால், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’ என்ற பாடலை சற்று மாற்றிப் பாடியிருப்பார்.

அவர் எப்படி மாற்றிப் பாடியிருப்பார் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...