No menu items!

40க்கு 40 ஸ்டாலின் கணக்கு – மிஸ் ரகசியா

40க்கு 40 ஸ்டாலின் கணக்கு – மிஸ் ரகசியா

“நாற்பதும் நமதே; நாடும் நமதே” என்று முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“தொலைக்காட்சி மூலமே செய்திகளை திரட்டலாம் என்று திட்டமா?” என்றாள்.

“என்ன இருந்தாலும் ரகசியா தரும் செய்திகள் போல வருமா? 2024 மே மாதம்தான் தேர்தல். இப்பவே முதல்வர் 40 தொகுதிகளில் வெற்றி என பேசத் தொடங்கிவிட்டாரே என்ன காரணம்?” என்று கூறி தொலைக்காட்சியை அணைத்தோம்.

“காரணம் இருக்கு. நாடாளுமன்றத் தேர்தல் முன் கூட்டியே வரலாம் என்று கட்சிகள் எதிர்பார்க்கின்றன. மே மாதத்துக்கு முன் 2023 டிசம்பரில் கூட நாடாளுமன்றத் தேர்தல் வரலாம். ராகுல் காந்தி இப்போது நடைபயணம் செல்வதும் தேர்தல் முன் கூட்டி வரலாம் என்ற யோசனையில்தான்.”

“40 தொகுதியிலும் திமுக வெற்றி என்று குறிப்பிட்டதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா… கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட திட்டம் போடுகிறதா?”

“அப்படி திட்டம் இருப்பதாக தெரியவில்லை. இன்றைய சூழலில் கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதல்ல. இதை ஸ்டாலினும் உணர்ந்திருக்கிறார். அதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆபத்தில்லை.. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு டெல்லியில் அதிகரிக்கலாம் என்று நினைக்கிறார் முதல்வர். இந்த சூழலில் திமுக கணிசமான எம்.பிக்களை வைத்திருந்தால்தான் அதற்கு மரியாதை என்று கணக்குப் போடுகிறார்.”

“தேர்தலுக்கு தயாராவதெல்லாம் சரி. ஆனால், இன்னும் உள்கட்சித் தேர்தல் முழுமையாக முடியவில்லையே?”

”இன்னும் மாவட்டச் செயலாளர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதில் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு 4 அல்லது 5 மாவட்ட செயலாளர் பொறுப்புகளையாவது வழங்கவேண்டும் என்று முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாராம். அதேநேரத்தில் சிறப்பாக செயல்படாத மாவட்ட செயலாளர்களின் லிஸ்ட்டை எடுத்து உளவுத்துறையும் முதல்வரிடம் கொடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாவட்டச் செயலாளர்களை மாற்றினால் ஏதாவது சிக்கல் வருமோ என்று முதல்வர் யோசிக்கிறாராம். எப்படியும் முப்பெரும் விழாவுக்கு பிறகு இந்த விஷயத்தில் சஸ்பென்ஸ் உடையும்.”

“நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு வருகிறார் என்கிறார்களே… அப்படியா?”

“திமுக தரப்பில் அவரிடம் தீவிரமாக பேசி வருவதாகச் சொல்கிறார்கள். அதேநேரத்தில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியையும் திமுகவில் இணைக்க பேசி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட மாநிலங்களில் மற்ற கட்சிகளை பாஜக உடைக்கும்போது, பதிலுக்கு இங்கே நாம் பாஜகவை உடைக்க வேண்டும் என்பதில் திமுகவினர் தீவிரமாக இருக்கிறார்கள்.”

“கம்யூனிஸ்ட்களுடன் திமுகவுக்கு என்ன பிரச்சினை?”

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக அரசை விமர்சித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருவதும், போராட்டங்களில் ஈடுபடுவதும் திமுகவினருக்கு பிடிக்கவில்லை. எனவே, முரசொலியில், ‘எதிர்க்கட்சிகள் வாய்க்கு அவல் ஆகிவிடக்கூடாது’ என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவரைக் கண்டித்து கட்டுரை வெளியிடப்பட்டது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் ஒரு படி மேலே போய், ‘கேரளாவில் தமிழகத்தை விட மின் கட்டணம் அதிகம். தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் இல்லை. ஆனால், கேரளாவில் 100 யூனிட்டுக்கு 385 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறார்கள்’ என்று விமர்சித்துள்ளார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கூட்டணியில் ஏதும் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் காம்ரேடுகள் இருக்கிறார்கள். ஆனால், கட்டண உயர்வை கண்டிக்காமல் கடந்து போனால் கம்யூனிச குணத்துக்கு பொருந்தாமல் இருக்கும். கம்யூனிஸ்டுகளுக்கு சிக்கல்தான்.”

“டி.ராஜேந்தரின் லட்சிய திமுகவை செயல்படாத கட்சி என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதே?”

“அது உண்மைதானே… செயல்படாத கட்சியாகதானே அது இருக்கிறது” என்று சிரித்த ரகசியா… “அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தனது ஆதரவாளர்களுடன் டி.ஆர். ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் திமுகவில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.”

“அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்த தகவல் ஏதும் உண்டா?”

“அதிமுக தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். கட்சி சம்பந்தப்பட்ட சட்ட திட்ட வழக்குகளில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதனால்தான் நமது தரப்பு வாதம் நீதிமன்றத்தில் எடுபடவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். வழக்கு விஷயத்தில் எடப்பாடியைப் போல் ஓபிஎஸ் பணத்தை வாரி இறைக்கவில்லை என்பது அவர்களின் ஆதங்கம். இதனால் அங்கிருந்து இன்னும் சிலர் கழன்றுவர வாய்ப்புகள் உள்ளன.”

“ஓபிஎஸ் என்ன செய்கிறார்?”

“கடைசி முயற்சியாக பன்ருட்டியார் மூலம் சமாதானம் பேச முயன்றுள்ளார். ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. என்ன நடந்தாலும் சரி… ஓபிஎஸ்ஸுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று அவரிடம் கராறாக கூறியிருக்கிறார் எடப்பாடி.”

“அமைச்சர் எ.வ. வேலு மீது தலைமைச் செயலாளரும், நிதி அமைச்சரும் வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் வருகிறதே?”

“நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். அரசாங்கத்தின் நிதி நிலைமை என்ன என்று தெரியாமல் பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார் எ.வ. வேலு. இந்த நடைமுறை இதுவரை இருந்ததில்லை எ.வ. வேலு இப்படிச் சொல்லி இருப்பதால் விமான நிலையத்திற்கு பெரும் தொகையை செலவு செய்யவேண்டி வருமே என்பது அவர்களின் கருத்து. கூடவே இனிமேல் இழப்பீடு தொகையை இதே அளவு வழங்கச் சொல்லி எல்லோரும் வற்புறுத்துவார்கள் என்பது அவர்களின் கருத்து. இதுபற்றி முதல்வரிடம் இருவரும் புகார் சொல்லி இருக்கிறார்கள். ஏற்கெனவே எட்டு வழி சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அப்போது அதற்காக நிலத்தைக் கொடுப்பவர்களும் இதே கோரிக்கையை வைத்தால் என்ன செய்வது என்று முதல்வரிடம் கேட்டிருக்கிறார்கள்.”

“அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்று முதல்வர் சொல்லியிருக்கிறாரே?”

“தங்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை என்று சில அமைச்சர்கள் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளதே இதற்கு காரணம். ஆனால், இந்த விஷயத்தில் அதிகாரிகளின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது. ‘தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடிக்கடி எழுதும் கடிதத்தில் அத்தியாவசிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று அறிவுறுத்துகிறார். ஆனால், அமைச்சர்களின் கோரிக்கை அத்தியாவசிய திட்டத்தில் வருவதில்லை. இதை நாம் எப்படி போய் முதல்வரிடம் சொல்வது’ என்பது அவர்களின் புலம்பலாக உள்ளது.”

“மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தியின் வீட்டு திருமணம் ஏக தடபுடலாக நடந்ததாக ஒரு சர்ச்சை வந்துள்ளதே?”

“ஆமாம். கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் இந்தத் திருமணத்துக்கு செலவழிக்கப்பட்டிருக்கும் என்று எதிர்க் கட்சிகள் கணக்கு சொல்கின்றன. திருமணத்தில் நடந்த தடபுடல் விருந்து வீடியோக்களை எதிர் கோஷ்டியில் இருக்கும் திமுகவினரே பரப்பினார்களாம். இந்த வீடியோக்கள் பாஜகவுக்கு வசதியாக இருக்கிறது. இந்த திருமணத்துக்கு எவ்வளவு செலவானது, இதற்கான பணம் எப்படி வந்தது என்றெல்லாம் தீர விசாரித்து அதுபற்றிய ஒரு அறிக்கையை டெல்லிக்கு அனுப்பியுள்ளாராம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.”

”இப்படிலாம் அரசியல் பண்ணியாவது தமிழ் நாட்டுல தாமரையை மலரச் செய்துவிடுவாரா அண்ணாமலை?”

“பிடிச்ச ஆளையே விட்டுட்டு இருக்காங்க. எங்கருந்து தாமரையை மலரச் செய்வது?”

“என்ன சொல்ற, புரியலையே?”

“சமீபத்தில அம்பேத்கரையும் மோடியை ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரை சர்ச்சையாகிச்சுல… அந்த புத்தக வெளியீட்டு விழா டெல்லில இன்னைக்கு நடந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இவர்களுடன் இளையராஜாவும் வெளியீட்டு விழாவில் கலந்துப்பார்னு அழைப்பிதழ்ல்ல குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இளையராஜா டெல்லிக்கு போகவில்லை. விழாவில் கலந்துக்கல. பாஜக பக்கம் வரார்னு சொன்ன இளையராஜாவே அடுத்தப் பக்கம் ஓடிப் போய்ட்டார்.” சிரித்தாள் ரகசியா.

“கஷ்டம்தான்.”

“டெல்லி பாஜகவினர் தங்கள் தலைவர்களை நிக் நேம் வச்சுதான் கூப்பிடுறாங்க. யாரைப் பத்தி பேசுறோம்கிறது வெளில தெரிஞ்சிறக் கூடாதுனு இந்த முறையை பயன்படுத்துறாங்களாம். இப்ப தமிழ்நாட்டிலயும் பாஜகவினர் அந்த முறையை பயன்படுத்துறாங்க. அவங்ககூட பேசறது செம்ம காமெடியா இருக்கு. ‘அலை ஓசை’, ‘மாலை’, ‘ஸ்’, ’ஒ’… . இப்படி போகுது சங்கேதப் பெயர்கள்…”

“என்ன கர்மமோ…ஒண்ணும் புரியல.”

“அவங்க எப்பவுமே பார்ட்டி வித் தி டிஃபரன்ஸ்” என்று சிரித்துக்கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...