தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, ஒரு பட த்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குவதால் வருடத்திற்கு 200 கோடி சம்பாதிக்கும் போதே, சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்திருக்கிறார் விஜய்.
விஜய்க்கு அரசியல் மீதான ஆர்வம் பல வருடங்களாக இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைக்களுக்கு இடையே நுழைந்து அரசியல் செய்ய முடியாது என காத்திருந்தவர், தற்போது தனது வயதுடைய இளைய தலைமுறையினர் அதிகாரத்தில் இருக்கும் தருணத்தில் களமிறங்க இருக்கிறார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற முழக்கத்தோடு ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கியிருக்கும் விஜயின் கட்சிக் கொள்கை என்னென்ன, கொடுக்கும் வாக்குறுதிகள் என்னென்ன என்பது குறித்து இன்னும் அவர் தனது தரப்பில் இருந்து கூறவில்லை. இதற்காகதான் இதர அரசியல் கட்சிகள் காத்திர்க்கின்றன.
ரஜினியின் அரசியல், ஆன்மிக அரசியல் எல்லாம் பொய்த்துவிட, விஜயின் அரசியல் உறுதியாகி விட்டது. விஜயின் அரசியல் பார்வை இன்னும் முழுமையாக தெரியாத நிலையில், அவருக்கு சினிமாவில் கடும் போட்டியாக இருக்கும் அஜித்தின் அரசியல் பார்வை தெளிவாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினாலும் அரசியல் மீதான அவரது கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.
முன்பொரு தருணத்தில், ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசியல் பற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் அஜித்.
’நான் எதுக்காக வரவேண்டும். அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு உதவ முடியுமென்றால், 1986-ல் நான் சுயமாக சம்பாதித்து என் சொந்த காலில் நிற்க ஆரம்பித்ததிலிருந்தே என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்துகொண்டுதான் இருக்கிறேன். வெறும் இரண்டாயிரத்து ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கிய போதும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை சாரிட்டிக்குதான் வழங்குவேன். இன்றும் என் சம்பாத்தியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சாரிட்டிக்கு வழங்குவதை தொடர்கிறேன்.
நான் செய்கிற உதவிகளை விளம்பரப்படுத்தினால் அதற்கான மரியாதை இல்லையென்பதால் நான் யாரிடமும் அதை சொல்லிக் கொள்வது இல்லை.
இந்த அரசியல் சிஸ்டம் எனக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது. அதைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.
ஒருபக்கம் நம்மைப் பாதுக்காக்க இந்திய எல்லையில், கடுமையான குளிரில் ராணுவத்தினர் பாடுபடுகிறார்கள். இவர்கள் யாரும் நீ என்ன சாதி, எந்த மாநிலம், எந்த இனம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. நம்மை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்கிறார்கள். ஆனால் மறுபக்கம் இங்கே நாம் சாதிகள் இல்லையென்று சொல்லிக் கொண்டே அதன் மூலம் அரசியல் செய்கிறோம்.
ஒவ்வொரு தேர்தலின் போதுமட்டும் சாதி, இன உணர்வு மக்களிடையே தூண்டப் படுவது ஏன் என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா? இது எப்படி என்று புரியவில்லை. நம் இந்திய எல்லைக்குள் பணம், சாதி, இனவேற்றுமையை தூண்டுகிற எல்லோருமே ஒரு வகையில் தீவிரவாதிகள்தானே. நாட்டுக்குள்ளே இருக்கிற இப்படிபட்ட சில தீவிரவாதிகளை எப்படி சமாளிப்பது?
இதையெல்லாம் மாற்றவேண்டுமென்று ஒருத்தர் வந்தால் அவனை வாழவிட மாட்டார்கள். ஒரு நாள் கூட அதிகம். வெறும் பன்னிரெண்டு மணி நேரத்திற்குள்ளாகவே இல்லாமல்பண்ணிவிடுவார்கள்.
இதுமட்டுமில்லாம கோட்டா, இடஒதுக்கீடு என்று மக்களுக்குள்ளே ஒரு பிரிவினையை வேறு உருவாக்கி வைத்திருக்கிறோம். அப்புறம் ஏன் ராணுவ வீரர்கள் தங்களுடைய உயிரைக்கொடுத்து நம்மைக் காக்கவேண்டும்?
அப்படியென்றால் கோட்டா, இட ஒதுக்கீடு எல்லாம் தவறு என்று நீங்கள் கேட்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் அதே நேரம் மக்கள் உண்மையை உணரும் காலம் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. கோட்டா, இடஒதுக்கீடு என்று ஒற்றுமையாக இருக்கிற மக்களுக்கிடையே நாம் பிரிவினையை உண்டாக்க வேண்டும்?
ஒரே பிரச்னை தரமான கல்வி. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லொருக்கும் ஒரே தரமான சமச்சீர் கல்வி கிடைத்தாலே போதுமானது. திறமை யாரிடமிருந்தாலும் அதற்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். அப்புறம் ஏன் தேவையில்லாமல் நாம் அடித்துக்கொள்ள போகிறோம்.
இன்றைக்கு கடவுளே ஒரு அவதார புருஷராக வந்தாலும் கூட சமுதாயத்திலும், அரசியலிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அந்த அவதார புருஷரால் தனியாக ஒன்றும் சாதிக்க முடியாது. இந்த மெச்சூரிட்டி ஒரு அலையாக மக்களிடம் பரவும். மிஸ்டர் எக்ஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு நன்றாக இருக்கும் அல்லது மிஸ்டர் ஒய் ஆட்சியைப் பிடித்தால் நம்நாடு வல்லரசாகும் என்று நினைப்பது தவறு. ஏனென்றால் அரசியல்வாதிகள் நினைத்ததை கொடுக்கும் மந்திரவாதிகள் இல்லை.
இதுவும் மாறும். மக்களிடம் இந்த விழிப்புணர்ச்சி மிகசீக்கிரமே எழும். மக்களும் ஒழுக்கத்துடன், பொறுப்புகளுக்கு மரியாதைக் கொடுக்கும் விதமாக மாறுவார்கள். மக்கள் என்று சொல்லும் போது, நான் நடிகனாக இருந்தாலும் நானும் மக்களில் ஒருவன்தான்.
இனி அரசியல்வாதிகள் மீதும், ஒழுங்காக விளையாடாத விளையாட்டு வீரர்கள் மீதும், சினிமா நட்சத்திரங்களைப் பற்றியும், சரியாக செய்யாத பணியாளர் மீதும் குறைச் சொல்வதை விட்டுவிடுவார்கள் மக்கள்.
நள்ளிரவு ஆனாலும் கூட, போலீஸ் இல்லாத, ஆளில்லாத டிராஃபிக் சிக்னலில் ரெட் விழுந்தால், க்ரீன் சிக்னல் விழும் வரை காத்திருந்து செல்லக்கூடிய மெச்சூர்டான பழக்கம் மக்களிடம் வரும். நாட்டின் இருக்கும் விலைவாசி, வேலைவாய்ப்பு, இடப்பற்றாக்குறை, டிராஃபிக் என அனைத்துக்கும் காரணம் பெருகி வரும் மக்கள் தொகை. நம்முடைய தகுதிக்கு மீறி மக்கள் தொகை பெருகினால் நாடு தாங்காது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.
எல்லா விஷயங்களுக்கும் அதற்கென ஒரு முறை இருக்கிறது. உதாரணத்திற்கு நான் சினிமாவிற்குள் வருவேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. என்னை சினிமா வாய்ப்பு தேடி வந்தது. தேடி வந்த வாய்ப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டேன். அதற்குபிறகு நான் முறைப்படி அதிகம் கற்றுக் கொண்டே வருகிறேன். அன்று நான் சினிமாவுக்கு வந்த போது மக்கள் யாரும் இவன் ஏன் நடிக்க வந்தான் என்று கேள்விக் கேட்க வில்லை. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.
முக்கியமான விஷயம் எனக்கு அரசியல் ஆசையே இல்லை. அப்படியே நீங்கள் சொல்வது போல அரசியலில் இறங்கும் வாய்ப்பு என்னைத்தேடி வந்தால் அதையும் முறைப்படியே செய்வேன்.
நீங்கள் சொல்வது போல் இன்று எனக்கு ஆசையில்லாவிட்டாலும், நாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் கட்டாயமாக்கினால், முதல்வேலையாக என்னுடைய உயிரான ரசிகர்கள் இருக்கும் நற்பணி மன்றங்களை அரசியலில் கலக்க மாட்டேன்.
அரசியலையும், சினிமாவையும் தனித்தனியான கலையாகப் பாருங்கள். அவற்றை அப்படியே தனியாக இருக்கவிடுங்கள். ஒன்றோடு ஒன்றுக் கலக்காதீர்கள் என்று சொல்பவன் நான். அதை நானே உடைக்க மாட்டேன்.
ரசிகர்களை என்னுடைய பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டால் அது என் சுய நலத்திற்காக மட்டுமே இருக்க முடியும். அதைச் செய்யவே மாட்டேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியைச் சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒரு போதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன்.
அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டுமென்றால், சினிமாவில் நடிக்கவே மாட்டேன். காரணம் சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்துக் கொண்டதால் என்னால் இரண்டும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம்.
நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால் முறைப்படியாக எனக்கு பிடித்த கட்சியில் சேருவேன். எனக்காக எந்த பதவியையும் முன்வந்து கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்கு முன்பே அந்தக்கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்ப்டுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை.
எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுக்கப்பட்டால் அதை நான் செய்து முடிக்கும் விதத்தைப் பொறுத்தே பதவி கொடுக்கவேண்டுமென விரும்புகிறேன். எல்லோரையும் அரவணைத்து போகிற நண்பனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.
ஒரு நல்ல உறவு என்பது கணவன் _ மனைவி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கவே கூடாது. இவரை இழந்துவிட்டால் நம்மால் வாழ முடியாது என்ற பயம் கணவன் மனைவி இருவருக்குமே இருக்கவேண்டும். இருவருக்குமே பாதிப்புதான் என்ற பயம் வேண்டும். இதே போன்ற ஒரு நல்ல உறவுதான் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே இருக்கவேண்டும்.
இந்த நிலை இந்திய அரசியலில் இருக்கிறது. இன்றைக்கு ஊழல் நடக்கிறது. அது ஏன்? மக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு பயமில்லை. அதே போல் மக்களுக்கும் அரசியல்வாதிகள் மீது பயமில்லை. இந்தநிலை இனியும் நீடிக்காது. மக்கள் புரிந்துக் கொள்ளும் காலம் வரும். இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் காலம் அருகிலேயே இருக்கிறது.’