விளையாட்டு உலகில் அவ்வப்போது சில நாயகர்கள் இந்தியாவுக்கு கிடைப்பது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவுக்கு கிடைத்த ஹீரோ ஜெர்மி லால்ரின்னுங்கா. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த 67 கிலோகிராம் எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ எடையையும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடையையும் (மொத்தம் 300 கிலோ) தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார் ஜெர்மி லால்ரின்னுங்கா.
நீரஜ் சோப்ராவைப் போல் இளம் வயதில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறார் இந்த புதிய நாயகன்.
ஜெர்மி லால்ரின்னுங்காவின் அப்பா லால்நெய்துலங்கா ஒரு குத்துச்சண்டை வீரர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள லால்நெய்துலங்கா, போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் ஐஸ்வாலில் உள்ள இளைஞர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து வந்துள்ளார்.
சிறுவயதில் அப்பாவின் பதக்கங்களை வைத்து விளையாடுவது ஜெர்மியின் வழக்கம். அந்த பதக்கங்கள் மீதுள்ள ஆர்வத்தால் அவரும் விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பினார்.
லால்நெய்துலங்காவின் 5 மகன்களில் ஒருவர்தான் ஜெர்மி லால்ரின்னுங்கா. ஆரம்ப காலத்தில் லால்ரின்னுங்காவுக்கும் குத்துச்சண்டையில்தான் ஆர்வம் இருந்துள்ளது. 7 வயதிலேயே குத்துச்சண்டை பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த காலகட்டத்தில் குத்துச்சண்டை வீரருக்கான உடற்பயிற்சிகளில் ஒன்றாக அவர் பளு தூக்கியுள்ளார். பின்னர் இதிலேயே அவரது ஆர்வம் அதிகரிக்க, பளு தூக்கும் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
ஜெர்மியின் அப்பாவுக்கு 5 குழந்தைகள் இருந்ததால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். பயிற்சி மற்றும் அதற்கு தேவையான உணவை எடுத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டுள்ளார் ஜெர்மி.
8 வயதில் மல்சாமா என்ற உள்ளூர் பயிற்சியாளரிடம் ஜெர்மி லால்ரின்னுங்கா பயிற்சி பெற்றார். முதலில் 5 மீட்டர் நீளமும் 20 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட மூங்கில் கம்புகளை தூக்கி ஜெர்மி லால்ரின்னுங்கா பயிற்சிகளை மேற்கொண்டார். அதன்பிறகு இரும்பு கம்பிகளைத் தூக்கிப் பயிற்சி பெற்ற லால்ரின்னுங்கா, பின்னர் முறையாக எடைதூக்கி பயிற்சிகளை செய்யத் தொடங்கினார்.
ஜெர்மிக்கு 9 வயதாக இருக்கும்போது ராணுவத்தில் பளுதூக்கும் பயிற்சியாளராக இருந்த சர்சோகிமா (Zarzokima) என்பவரின் பார்வையில் பட்டுள்ளார். உடனடியாக ஜெர்மி லால்ரின்னுங்காவின் பெற்றோரை சந்தித்து, புனேயில் உள்ள தனது பயிற்சி மையத்தில் அவரைச் சேர்ப்பதற்கு அனுமதி வாங்கினார். இதைத்தொடர்ந்து 9 வயதில் பெற்றோரைப் பிரிந்து ஐஸ்வாலில் இருந்து புனேவுக்கு பயணமானார் ஜெர்மி லால்ரின்னுங்கா.
2016-ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த இளையோருக்கான உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிதான் ஜெர்மியை உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் சர்வதேச போட்டி. இப்போட்டியில் 14 வயது சிறுவனாக பங்கேற்ற ஜெர்மி, வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
புவனஸ் ஏர்ஸ் நகரில் 2018-ம் ஆண்டில் நடந்த உலக இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது அவரது கிராஃபை இன்னும் மேலே கொண்டுபோனது.
போட்டிகள் மற்றும் பயிற்சிகள் இல்லாத நேரத்தில் கால்பந்து மற்றும் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடுவது ஜெர்மியின் வழக்கம்.