No menu items!

குளோபல் சிப்ஸ்: குழந்தை பெற்றால் போனஸ்

குளோபல் சிப்ஸ்: குழந்தை பெற்றால் போனஸ்

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் இப்போது பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 1,000 பேருக்கு 7.52 என்ற வகையில் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால் சீன அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு பெண்ணும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் பிறக்கும்போது மருத்துவமனையில் ஆகும் செலவு மற்றும் கல்விச் செலவுகளையும் குறைத்துள்ளது. அங்குள்ள பன்சிஹுவா மாகாணத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இத்தனை சலுகைகளை அறிவித்தும், விலைவாசி அதிகமாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள சீனர்கள் யோசிக்கிறார்களாம்.

அமைச்சர் கொடுத்த வினோத தண்டனை

தனது துறை சார்ந்த விஷயங்களில் ஆய்வு செய்யச் செல்லும் அமைச்சர்கள், பொதுவாக அங்குள்ள மக்களிடம் குறை கேட்டு இது தொடர்பான விளக்கங்களை அளிக்குமாறு கேட்பார்கள். அதிகபட்சமாக சரியாக பணி செய்யாத அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். பத்திரிகைகளும், ‘அமைச்சர் ஆய்வு செய்தார்’ என்று செய்தி வெளியிடுவதோடு இந்த ஆய்வை மறந்துவிடும்.

ஆனால் பஞ்சாப் மாநில சுகாதரத் துறை அமைச்சரான சேதன் சிங் ஜவுரமாஜ்ரா சமீபத்தில் அரசு மருத்துவமனையில் நடத்திய ஆய்வு தேசிய அளவில் மிகப்பெரிய செய்தியாகி உள்ளது. பஞ்சாப்பின் ஃபரீத்கோட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யச் சென்றுள்ளார் அமைச்சர் சேதன் சிங். அப்போது அங்குள்ள மக்கள், மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் மிகவும் அழுக்காகவும் தரம் குறைந்ததாகவும் உள்ளதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அங்கிருந்த மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார் அமைச்சர் சேதன் சிங். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன’ என்று கூற அமைச்சருக்கு கோபம் வந்துள்ளது. உடனே அந்த மருத்துவமனையில் உள்ள படுக்கையில் படுக்குமாறு துணை வேந்தர் ராஜ் பகதூருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அவரும் வேறு வழியில்லாமல் அமைச்சர் முன் அந்த படுக்கையில் படுத்துக் காண்பித்துள்ளார். இதன்பிறகு அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர், ‘இந்த மருத்துவமனையை தூய்மையாக வைப்பது உங்களிடம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

அமைச்சரால் படுக்கையில் படுக்க வைப்பட்டதைத் தொடர்ந்து, தனது துணை வேந்தர் பதவியை ராஜ் பகதூர் ராஜினாமா செய்துள்ளார். பிளஸ் 2 வகுப்பு வரை மட்டுமே படித்த அமைச்சர், மருத்துவத்தில் பெரிய படிப்புகளைப் படித்த துணைவேந்தரிடம் இப்படி நடந்துகொள்ளலாமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப, சாதாரண மக்களுக்காக ஒரு அமைச்சர் செய்த யுத்தம் இது என்று ஆம் ஆத்மி கட்சியினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

பாகிஸ்தானில் சாதித்த பெண்

பாகிஸ்தானில் பெண்கள் ஏதாவது ஒரு துறையில் சாதிப்பது பெரிய விஷயம். அதிலும் அந்நாட்டின் சிறுபான்மை இனமான இந்து மதத்தில் பிறந்த பெண்கள் சாதிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். இந்த சூழலில் அந்நாட்டு காவல்துறை டிஎஸ்பியாக பொறுப்பேற்ற முதல் இந்துப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் மணிஷா ரொபேட்டா.

பாகிஸ்தானில் உள்ள லயாரி என்ற நகரத்துக்கு அவர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்து பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று அவர் இந்த பதவிக்கு வந்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோகாபாத்தில் பிறந்த மணிஷாவுக்கு முதலில் தனது 3 சகோதரிகளைப்போல் மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்தலில் தோல்வியடைந்ததால் போலீஸ் ரூட்டைப் பிடித்துள்ளார் மணிஷா. சிந்து சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற்ற 468 பேரில் இவர் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

“சமுதாயத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, பெண் காவல் அதிகாரிகளால்தான் முடியும் என்பது என் நம்பிக்கை. அதனால் நான் இந்தப் பணிக்கு வந்துள்ளேன்” என்கிறார் மணிஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...