தமிழ் சினிமாவில் ’லியோ’ திரைப்படம் இதுவரை பார்த்திராத புதுப்பிரச்சினைகளுக்கு காரணமாகி இருக்கிறது.
ட்ரெய்லரில், பெருவாரியான ரசிகர்கள் ஆதரவுப் பெற்ற ஒரு ஹீரோ, தகாத வார்த்தை கூறுவது போல் நடித்திருந்தது, சர்ச்சையானது. அடுத்து காலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி தந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்தது. இப்படி தொடர்ந்து பிரச்சினைகளோடு கைக்கோர்த்துகொண்ட லியோ, அதன் வெளியீட்டின் போது திரையரங்கு உரிமையாளர்களுடனான வியாபாரத்திலும் பிரச்சினையை சந்தித்தது. ஒரே காரணம், பட வியாபாரத்தில் எல்லா லாபமும் தங்களுக்கே வேண்டுமென முரண்டு செய்தது. மற்றப் படங்களை விட அதிக வசூல் பார்த்துவிட வேண்டுமென்ற பேராசைதான்.
தமிழ் சினிமாவில் பொதுவாக பின்பற்றப்பட்ட மினிமம் கியாரண்டி வியாபார முறையை ஓரங்கட்டிவிட்டது லியோ தயாரிப்பு தரப்பு. அதாவது படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் வெளியிட ஆசைப்பட்ட தயாரிப்பு நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்களிடம் 80 சதவீதம் எங்களுக்கு வேண்டுமென கடைசி வரை அடம்பிடித்தது.
இதற்கு முன்பு ரெட் ஜெயண்ட் வெளியிட்ட படங்களுக்கு 70 சதவீதம் தயாரிப்பாளர்களுக்கும், 30 சதவீதம் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதனால் திரையரங்கு உரிமையாளர்கள், லியோ படக்குழு நடத்திய வியாபார பேச்சுவார்த்தையில் கடைசிவரை 80 சதவீதம் கொடுக்க ஒப்புக்கொள்ளவே இல்லை. இதனால்தான் சென்னையில் ரோகிணி மற்றும் வெற்றி திரையரங்குகளில் நேற்று மாலை வரை படம் வெளியீடு இல்லை என்று சொல்லி வந்தார்கள்.
இதேபிரச்சினையதான் ஏஜிஎஸ் மல்ட்டிஃப்ளெக்ஸூம் சந்தித்தது. ஆனால் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது. இருந்தாலும் அவர்களுக்கும் லியோ படக்குழு கறாரான வியாபாரத்தில்தான் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டது.
வேறு படங்களும் இப்போதைக்கு இல்லை. அதனால் கொஞ்சமாவது வருமானம் பார்க்கலாம் என்று வேறு வழியே இல்லாமல்தான் எல்லா திரையரங்குகளும் இந்த 80/20 டிஸ்ட்ரிபியூஷன் வியாபாரத்திற்கு கடைசி நிமிடத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
ரோகிணி திரையரங்கில் முதல் காட்சி காலை 11.30 மணிக்குதான் ஆரம்பமாகிறது. மற்ற இடங்களில் காலை 9 மணிக்கு முதல் காட்சி ஆரம்பமானது. இந்த தாமதத்திற்கு காரணம் நீண்டுகொண்டே போன பேச்சுவார்த்தை.
இவ்வளவு பிரச்சினைக்கு காரணம் தயாரிப்பாளரின் பேராசைதான் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், ‘லியோ’ படத்தோட தயாரிப்பாளர் விஜய்தான். விஜய் வியாபார ரீதியாக நேரடியாக பேசாவிட்டாலும், லலித் விஜய்யுடன் கலந்து பேசிதான் வியாபாரம் பேசினார். எனக்கு கிடைத்த ரகசிய தகவலே இப்பட த்டோட தயாரிப்பாளர் தம்பி விஜய்தான்’ என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
இன்று வேறு வழியில்லாமல் 80/20 சதவீத வியாபாரத்திற்கு ஒப்புக்கொண்டாலும், இனி இதுபோல் செய்யமாட்டோம் என திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார். அடுத்து 85 சதவீதம் கேட்பார்கள். இது அப்படியே தொடர ஆரம்பித்துவிடும். இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இறுக்கமான சூழ்நிலை உருவாகிவிடும். சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் இல்லாமலே போய்விடும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் வெகு சீக்கிரமே இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாக தெரிகிறது.
விஜய் தயாரிப்பாளராக இல்லாவிட்டாலும், லலித் விஜய்யின் கண்ணசைவில்லாமல் எதையும் செய்யமுடியாத நிலை. அதனால், இந்த வியாபாரம் இவ்வளவு தூரம் இழுத்ததற்கும் விஜய் தரப்பில் எந்தவித ரியாக்ஷனும் இல்லை. அதேபோல் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வேண்டும். காலை 4 மணி காட்சிக்கு அனுமதி வேண்டுமென நீதிமன்றத்தை நாடியதற்கும் விஜய் ஒன்று சொல்லாமல் மெளனம் காத்திருக்கிறார். கேட்டால் பணம் போட்டவர் தயாரிப்பாளர், அதனால் அவருடைய வியாபாரத்தில் நான் தலையிட முடியாது என ஒரு காரணத்தைக் கூறிவிட முடியும்.