No menu items!

தமிழ் சினிமாவின் Interesting Sentiments!

தமிழ் சினிமாவின் Interesting Sentiments!

தமிழ் சினிமாவின் க்ரியேட்டிவிட்டிக்கு போட்டியாக மற்றொரு பக்கமும் இருக்கிறது. அது ரூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு இருக்கும் சுவாரஸ்யமான சென்டிமென்ட்ஸ். தமிழ் சினிமா இன்று ஒடிடி உலகத்திற்கு மாறியிருக்கும் வேளையில்.

உதாரணத்திற்கு இதோ சில சென்டிமெண்ட் கலாட்டாக்கள்….

தமிழ் சினிமாவில் ரஜினிக்கென சில சூப்பர் சென்டிமென்ட்ஸ் தனியாக இருக்கிறது. ரஜினியோட ஃபேவரிட் ஸ்பாட் ஏ.வி.எம். பிள்ளையார் கோயில்தான். அவருடைய பெரும்பாலான படங்களுக்கு இந்த பிள்ளையார் கோவிலில்தான் பூஜை போடுவது பழக்கம். பெளணர்மி நாட்களில் ரஜினியின் புதுப்படத்தோட பூஜையோ அல்லது ரிலீஸோ இருக்கும். இவரோட படங்கள்ல நிழல்கள் ரவி, சரத்பாபு மட்டுமில்ல பாம்பு நடிச்சாலும் அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பது அசைக்க முடியாத சென்டிமென்ட். ரஜினி படங்கள்ல வர்ற ஓபனிங் சாங்கை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடினால் அந்தப் படமும் ஹிட்டாகும் என்பார்கள். அதேமாதிரி ரஜினி படத்தோட டைட்டில்கள் ‘ன்’ என்ற எழுத்துல முடிஞ்சா அது மெகா ஹிட்டாகும் என்பது சக்ஸஸ்ஃபுல்லான சென்டிமென்ட்.

தன்னை நாத்திகவாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல், அதற்கேற்றால்போல் சென்டிமென்ட்களுக்கு அதிக இடம்கொடுக்க மாட்டார். ஆனாலும் இவரையும் இந்த ட்ரெண்ட் விட்டுவைக்கவில்லை. மேக்கப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிச்சயம் சக்ஸஸ் தான் என்று ஒரு பட்டியலைக் கொடுக்கிறார்கள்.

மணிரத்னம் சென்டிமென்ட் பார்க்காதவராக தெரிந்தாலும், இவருடைய படங்கள்ல ஒரு காட்சியிலாவது ரயில் வந்து போகும், மழை கொட்டும். இப்படி எடுத்தால் வசூலும் கொட்டும் என்பது ஒரு கூல்லான சென்டிமென்ட்.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் வரும் வில்லனுக்கு தலைமுடி நீளமாக இருந்தால் படம் ஹிட். டைரக்டர் விக்ரமன் தன்னுடைய படங்களுக்கு பூஜையை வளசரவாக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலில் வைத்தால் மெகாஹிட். அதேபோல் விக்ரமன் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் பாலூர் ஸ்டேஷனில்தான் ரயில் சம்பந்தபட்ட காட்சிகளை எடுப்பார். இந்த ரெண்டு ஸ்பாட்களிலும் எடுத்த ‘புதுவசந்தம்’ செம ஹிட் என்பதால் இந்த சென்டிமெண்ட்டை தொடர்கிறார் விக்ரமன்.

நடிகர்களில் சத்யராஜ் கொஞ்சம் வில்லதனமாய் வந்தாலே போதும், படம் ஓடும். அர்ஜூனுக்கு இங்கிலிஷ் எழுத்தான ‘ஆர்’-ல் ஆரம்பிக்கும் எல்லா படமும் ரவுசுதான்.

ராமராஜனுக்கு ஆடு, மாடு, பால் என ஏதாவது டிஸ்கவரி சேனல் மேட்டர் வந்தாலும் படம் தூள்தான். ஷீட்டிங் நடக்கும்போது ஆக்ஸிடெண்ட் ஆனால் டாக்டர் ராஜசேகர் படம் ஜெயிக்கும். மைக்கை பிடிச்சாலே மோகன் படம் ஹிட்தான் என்பது ஒரு மியூஸிக்கலான சென்டிமென்ட். இதனாலேயே மோகனுக்கு அக்ரிமெண்ட் போடும்போதே மோகனுடன் மைக்கும் நடிக்கிறது என்கிற ரேஞ்சில்தான் அந்த அக்ரிமெண்ட் இருக்குமாம். டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் ஒரேயொரு காட்சியில தலையைக் காட்டினால் அது படத்துக்கு ராசி.

பாலுமகேந்திரா படத்துல ஹீரோயின் ஹீரோவோட சட்டையை மட்டும் போட்டுகிட்டு ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி வழவழப்பான காலைக் காட்டினால் ஹிட்தான்.

‘என் இனிய தமிழ் மக்களே..’னு கணீர் குரல்ல கையெடுத்து கும்பிட்டா பாரதிராஜா படம் பட்டையைக் கிளப்பும். கும்பகோணத்துல தெருக்களில் தாவணிப் போட்ட இளம்பெண்கள் தேவதையைப் போல நடந்து போக, ஹீரோ பாட்டு பாடினா லிங்குசாமியின் அந்தப் படம் மெகா ஹிட். இப்படி படங்கள்ல இடம்பெறக்கூடிய காட்சிகளையோ அல்லது பட சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களிலோ இருக்கும் சென்டிமென்ட்கள் பட்டியல் மிகவும் பெரியது.

மற்றொரு பக்கம் நட்சத்திரங்களின் சில தனிப்பட்ட சென்டிமென்ட்கள் சுவாரஸ்யமானவை.

சிம்புவின் சென்டிமென்ட் கொஞ்சம் வித்தியாசமானது. ஷூட்டிங்கில் ஒரு சீன் ஓ.கே ஆகாமல் இழுத்துக் கொண்டே போனால், பார்ட்டி சைலண்ட்டாக வெளியே வந்து கொஞ்சம் சில்லறை காசுகளை எடுத்து, தனது தலையைச் சுத்திப் போடச் சொல்வார். அந்த காசை அப்படியே தெருவில் கடாசிவிட்டால் அந்த டேக் ஓ.கேவாகும் என்பது இவருடைய சென்டிமென்ட்.

கவுண்டமணிக்கு ஏழுமலையானே ஃபேவரிட். புதுப்படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினாலும் சரி, கார் ப்ரியரான அவர் புதுகார் வாங்கினாலும் சரி, புது வீடு வாங்கினாலும் சரி கவுண்டமணி முதல்ல போய் நிற்பது திருப்பதியில்தான்.
வடிவேலுக்கு எல்லாமே அவருடைய குலத்தெய்வம் மதுரவீரன்தான். அதனாலேயே எந்த சமாச்சாரமாக இருந்தாலும் சரி, புதுப் படத்தின் அட்வான்ஸை வாங்கினாலும் சரி அவரோட குலத்தெய்வத்தின் போட்டோவுக்கு முன்னாடி வைத்து எடுத்தால்தான் வொர்க் அவுட்டாகுமென நினைப்பார்.

விவேக்கிற்கு அம்மா சென்டிமென்ட் ஜாஸ்தி. வெளியூருக்கு கிளம்பினால் அவருடைய அம்மாவைப் பார்த்து, காலில் விழுந்து கும்பிட்ட பிறகே வண்டியைக் கிளப்பச் சொல்லுவார்.

இளையராஜா எங்கேயாவது வெளியூருக்குக் கிளம்பினால், செங்கல்பட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் சூரத்தேங்காயை உடைத்தப் பிறகே பயணத்தைத் தொடங்குவார். இவரோட தம்பி கங்கை அமரனுக்கு பாண்டிச்சேரி மதர் பாடலைப் பாடிய பிறகே எதையும் தொடங்குவது சென்டிமென்ட்.

சென்டிமென்ட் சமாச்சாரத்தில் இன்னொரு டைப்பும் இருக்கிறது. அது ஆக்ரோஷமான கடவுள்களோட பெயர்களில் படமெடுத்தால் அந்தப் படம் ஓடாது. அந்தப்படத்தை எடுத்தவங்களுக்கு ஏதாவது பிரச்னை வரும் என்பதே. அதனாலேயே தெலுங்குப் படங்கள்ல ஆஞ்சநேயரை வைத்து க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்தாலும், இங்கே நம்ம படைப்பாளிகள் அதை முருகனுக்கேத்த மாதிரி மாற்றி எடுத்துவிடுவார்கள். பூனைக் குறுக்கே போனால் அந்த ப்ராஜெக்ட் உருப்படாது என்று எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

படங்களுக்கான விளம்பரங்களிலும் கூட இந்த சென்டிமென்ட் ஃபீவர் விட்டுவைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை தினசரிகளில் படத்தின் விளம்பரத்தை நீளவாக்கில் விளம்பர டிஸைன் செய்து கொடுத்தால்தான் படம் ஓடும். அகலவாக்கில் விளம்பரம் கொடுத்தால் படம் ஃப்ளாப்தான் என்ற சென்டிமென்ட் இண்டஸ்ட்ரியை போட்டு உலுக்கி எடுத்தது வரலாறு. நல்லவேளையாக அந்த சென்டிமென்ட்டை ‘காக்கிச்சட்டை’ படத்துக்கான விளம்பரமும், அப்படத்தின் வெற்றியும் மாற்றிவிட்டது. இல்லையெனில் சினிமா விளம்பரங்கள் வரும் பக்கங்களின் சைஸ்ஸை நேஷனல் ஹைவேய்ஸ் மாதிரி நீளமாக மாற்றியிருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...