No menu items!

கவர்னர் ரவி – ஏன் சர்ச்சைகளை கிளப்புகிறார்?

கவர்னர் ரவி – ஏன் சர்ச்சைகளை கிளப்புகிறார்?

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நேற்று மற்றுமொரு மோதல்.

குரூப்‌-1 தேர்வுகளுக்குத் தயாராகும்‌ மாணவ-மாணவியருடன்‌ ஆளுநர்‌ ஆர்.என்.ரவி நேற்று சென்னை ராஜ்‌ பவனிலுள்ள தர்பார்‌ அரங்கில்‌ பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் தமிழ்நாட்டு அரசியலில் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன. கவர்னர் ரவி பேசியதிலிருந்து சில அம்சங்கள் இதோ:

”அரசியலமைப்பின்‌ 200-ன்படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள்‌ இருக்கின்றன.  ஒன்று மாநில சட்டமன்றம்‌ ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால்‌ அது சரியாக இருந்தால்‌, அதற்கு ஆளுநர்‌ ஓப்புதல்‌ தர வேண்டும்‌. இரண்டாவது, சரியான மசோதா இல்லையென்றால்‌ அந்த மசோதாவை நிறுத்திவைப்பது. நிறுத்தி வைப்பது என்றால்‌ கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத்‌தான்‌ அர்த்தம்‌. இதை உச்ச நீதிமன்றம்‌ பல்வேறு தீர்ப்புகளில்‌ உறுதிப்படுத்தியிருக்கிறது. நேரடியாக நிராகரிப்பதாக இல்லாமல்‌ நிறுத்திவைப்பது என்று நாகரீகமாக அது அழைக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பாக, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கும்‌ முடிவை ஆளுநர்‌ எடுக்கலாம்‌. அதற்குக் காரணம்‌ மத்திய அரசு இயற்றியிருக்கும் சட்டத்துக்கு இணையாக ஒரு மசோதா தாக்கல்‌ செய்யும்‌ பட்சத்தில்‌ அது குறித்த தமது முடிவை எடுக்காமல்‌ அதை இறுதிசெய்வது குடியரசுத் தலைவர்‌ என்பதால்‌ மசோதாவை அவரது பார்வைக்கு ஆளுநர்‌ அனுப்பிவைக்கிறார்‌.

குடியரசுத் தலைவர்‌ அத்தகைய மசோதாமீது முடிவெடுக்க இரண்டு வித வாய்ப்புகளைப் பயன்படுத்துவார்‌. ஒன்று மசோதாவுக்கு ஒப்புதல்‌ தருவார்‌ அல்லது அதை நிறுத்திவைப்பார்‌. ஓர் ஆளுநரால்‌ இரண்டுவித சந்தர்ப்பங்களில்‌ மசோதாவை நிறுத்திவைக்க முடியாது. ஒன்று பண மசோதாவை அவரால்‌ நிறுத்திவைக்க முடியாது. இரண்டாவது ஒரு மசோதாவின்‌மீது ஆளுநருக்கு சந்தேகம்‌ வந்து அதன்‌மீது விளக்கம்‌ கேட்டு மசோதாவைத் திருப்பி அனுப்பினால்‌, அதை சட்டமன்றம்‌ மீண்டும்‌ நிறைவேற்றி அனுப்பினால்‌ அதை ஆளுநரால்‌ மறுக்க முடியாது.

அரசியல்‌ரீதியாக மத்தியில்‌ ஒரு கட்சி, மாநிலத்தில்‌ ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது மத்திய அரசால்‌ நியமிக்கப்படும்‌ ஆளுநர்‌ அரசியல்‌ரீதியாக செயல்படுதிறார்‌ என்கிற பார்வை இருக்கும்‌. ஆனால்‌, அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசுத் தலைவர்தான்‌. ஆளுநர்‌ தனக்குக் கொடுத்திருக்கும் கடமையை ஆற்றும்போது எந்தக் குழப்பமும்‌ வராது” இப்படி பேசியிருக்கும் கவர்னர் ரவி, ஸ்டெர்லைட் குறித்து பேசியதும் சர்ச்சையாகியிருக்கிறது.

” தூத்துக்குடியில்‌ நடந்த ஸ்டெர்லைட்‌ போராட்டத்தில்‌ அந்நிய நிதி பெருமளவில்‌ பயன்படுத்தப்பட்டது. போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள்‌ வெளிநாட்டு நன்கொடை பெற்றது தெரியவந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில்‌ போலீஸ்‌ துப்பாக்கிச்‌சூட்டில்‌ அப்பாவி மக்களின்‌ உயிர்கள்‌ பலியானது கவலைக்குரிய விஷயம்‌. ஏன்‌ ஸ்டெர்லைட்‌ ஆலைக்கு எதிராகப் போராட்டம்‌ நடந்தது… இந்திய தேவையில்‌ 40% தாமிரத்தை ஸ்டெர்லைட்‌ ஆலை உற்பத்தி செய்தது. அதை மூடிவிட்டார்கள்.‌

இதனால்‌ இந்தியாவின்‌ 40% தாமிர தேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. தாமிரம்‌ இந்தியாவின்‌ மின்னணு உற்பத்திக்கு முக்தியத் தேவை. இதை முடக்கும்‌வேலையில்‌ பின்னணியில்‌ இருந்தவர்கள்‌ அந்நிய நிதியைப் பெற்றுவந்தது தெரியவந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அந்நிய நிதி மூலம்‌ செயல்படும்‌ இத்தகைய நிதி உதவிகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.”

ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சுக்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

ஆளுநரின் பேச்சுக்கு கடுமையான எதிர்வினையாற்றியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது அறிக்கையிலிருந்து சில வரிகள்:

”கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். உதாரணமாக, எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும்.

இன்றைய தினம் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பேசி இருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.

“Shamsher Singh v. State of Punjab” (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government.” என்று சொன்னது. அதாவது, மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு, ‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர், ‘இந்தச் சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை’ என்றார். ‘மாநில அரசுக்கே உரிமை உண்டு’ என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்னபிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. ஏனெனில், ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.”

முதல்வரின் அறிக்கை கடுமையாக இருக்கிறது.

ஏப்ரல் 12ல் ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

இது போன்று சர்ச்சையாக பேசுவது ஆளுநர் ரவிக்கு புதிதல்ல. ஏற்கனவே இது போன்று பல பேச்சுக்கள் பேசி கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.

2021 செப்டம்பரில் தமிழ்நாட்டு ஆளுநராக ரவி பொறுப்பேற்றபோதே சர்ச்சைகள் வந்தன. ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரியை தமிழ்நாட்டு ஆளுநராக நியமிப்பது மாநில அரசுடன் மோதலில் ஈடுபடதான் என்ற கருத்துக்கள் எழுந்தன. அவை என்பது ஆளுநரின் தொடர் செயல்பாடுகளில் தெரிகிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் துறை சார்ந்த திட்ட அமலாக்கத்தின் செயல்பாடுகளை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்ற தலைமைச் செயலரின் கடித்தத்தில் முதல் சர்ச்சை தொடங்கியது.

அதன்பிறகு நீட் மசோதா தாமதம், மற்ற மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் இருப்பது என்று நீண்டது. அது மட்டுமில்லாமல் மேடைகளில் ஆளுநர் ரவி பேசும் சர்ச்சைக் கருத்துக்கள் தமிழ்நாட்டு அரசியலில் அனல் பறக்க வைத்தன.

‘பாரதம் என்பது சனாதனக் கொள்கைகளின் அடிப்படையில் உருவானது’ என்று பேசினார்.

ஆதிபகவன் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதை ‘ப்ரைமல் டெய்டி – Primal Deity என்று ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு செய்திருப்பது தவறு என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி, ஆதிபகவன் என்பதை உலகை உருவாக்கியவர் என்று குறிப்பிட வேண்டும் ஆனால் ஜி.யு.போப் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் ஜி.யு.போப் இந்தியாவுக்கு கிறிஸ்துவத்தை பரப்ப வந்தவர் திருக்குறள் ஆன்மிகப் புத்தகம் என்றும் கூறினார். அது மட்டுமில்லாமல், ‘அரசியலுக்காக திருக்குறளை பயன்படுத்துகிறார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

சென்னையில் நடந்த  ஹரிஜன் சேவா சங்க விழாவில் பேசும்போது முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது என்று மற்றொரு சர்ச்சையைக் கிளப்பினார்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து பேசும் போது இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பின்னர்தான் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஏன் இந்த தாமதம்? என்ற கேள்வியை எழுப்பினார்.

சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ துளசியின் நூற்றாண்டு விழாவில் பேசிய போது, ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்துதான் இருக்க முடியும், இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்று குறிப்பிட்டார் ரவி.

தமிழ்நாட்டு ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசுக்கு வைத்தது மாநில அரசு.

இந்தக் கோரிக்கையை வைத்தப் பிறகும் விழாக்களில் ஆளுநரும் முதல்வரும் ஒன்றாக கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் இந்த வருட துவக்கத்தில் மற்றொரு சர்ச்சை. தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று பேசினார் கவர்னர்.

அதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் ஒரு சர்ச்சை.

புத்தாண்டில் சட்டப் பேரவை கூடுவதும் ஆளுநர் உரையுடன் தொடங்குவதும் மரபு. ஆளுநர் உரை அரசு தரப்பிலிருந்து தயாரித்துக் கொடுப்பதும் அதை அவர் வாசிப்பதும் மரபு.

ஆனால் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. சில பகுதிகளை தவிர்த்துவிட்டார். சில பகுதிகளை அவராகவே சேர்த்திருக்கிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து அவர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசிக்க, தேசிய கீதம் இசைத்து நிகழ்வு முடியுவரை காத்திராமல் ஆளுநர் ரவி சட்டென்று கிளம்பிவிட்டார்.

ஆளுநர் – தமிழ்நாட்டு அரசு மோதலில்  உச்சக் கட்டம் இந்த நிகழ்வு.

அரசு தந்த உரையில் ஆளுநர் ரவி தவிர்த்த வார்த்தைகள் தவறானவைகளோ வன்முறையை தூண்டுபவையோ அல்லது அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளோ அல்ல.

திராவிட மாடல் என்ற பத்தியை தவிர்த்திருக்கிறார். சமூகநீதி, உள்ளடக்கிய வளர்ச்சி, சுய மரியாதை என்று குறிப்பிருந்த பகுதிகளை படிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது அமைதிப் பூங்காவாக உள்ளது என்று அரசு சொன்னதையும் சொல்ல மறுத்திருக்கிறார். கோயில் நிலங்கள் மீட்பு குறித்தும் பேசவில்லை.  முக்கியமாய் பெரியார், அம்பேத்கர்,  காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களை முற்றிலுமாக தவிர்த்தார்.

இப்படி படிக்காமல் தவிர்த்தது மட்டுமில்லாமல் சில வரிகளை உரையில் சேர்த்தார்.  

மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டது என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.  நீட் மாணவர்களுக்கு சிரமத்தை தருகிறது என்று தமிழ்நாடு அரசு எழுதியிருந்ததை நீட் தேர்வு மாணவர்களுக்கு சிரமத்தை தரும் என்று அரசு கருதுகிறது என்று மாற்றிப் படித்தார்.

சட்டப் பேரவை சம்பவங்களுடன் பிரச்சினை நிற்கவில்லை. ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னம் நீக்கப்பட்டு இந்திய அரசின் சின்னம் மட்டும் வைக்கப்பட்டது.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆளுநர் சர்ச்சைகள் இல்லாமலிருந்தது. இப்போது ஏப்ரலில் மீண்டும் சர்ச்சை வந்துவிட்டது.

இந்த சர்ச்சைகளில் யாருக்கு பலன்? ஏன் ஆளுநர் ரவி இப்படி பேசுகிறார்?

தமிழ்நாடு போன்ற முழுமையான மாநிலங்களில் ஆளுநர் அத்தனை சக்தி மிக்கவர் அல்ல. புதுவை போன்ற ஒன்றிய அரசு சார்ந்த மாநிலங்களில் ஆளுநரின் அதிகாரம் அதிகம். தமிழ்நாட்டில் அப்படியல்ல.

ஆனாலும் ஆளுநர் ரவி ஏன் இப்படி பேசுகிறார்?

எளிய காரணம்தான்.

அரசை சீண்டிக் கொண்டே இருப்பது.

சீண்டல்களை கண்டுக் கொள்ளாமல் போனால் அரசு பயந்துவிட்டது என்று கூறலாம். அடங்கிப் போகிறது என்று அரசியல் செய்யலாம்.

சீண்டல்களுக்குப் பதிலளித்தால் சர்ச்சைகளை விவாதப் பொருளாக மாற்றலாம். மக்களின் கவனத்தை ஈர்க்கலாம்.

ஆளுநர் ரவி சீரிய முறையில் செவ்வனே தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...