No menu items!

ஆட்டம் காணும் தெலுங்கு சினிமா

ஆட்டம் காணும் தெலுங்கு சினிமா

இந்திய சினிமாவில் சமீப காலமாக அதிகம் பேசப்படும் ஒன்றாக தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காரணம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கமர்ஷியல் ஹீரோக்களை வைத்து எடுக்கப்படும் பான் – இந்திய படங்கள்.

இதுவரையில் தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமே இருந்த வியாபாரத்தை இப்போது இப்படங்கள் எல்லை கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு பிஸினெஸ்ஸாக மாற்றியிருக்கின்றன.

இதனால் தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வலுவாகி இருக்கிறதா…தெலுங்கு தயாரிப்பாளர்கள் லாபத்தை அள்ளிக்குவிக்கிறார்களா.. என்ற இந்த கேள்விகளுக்கான பதில் ‘ஆம்’ என்று நீங்கள் நினைத்தால், கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து நிதானமாக படியுங்கள்.

இன்றைய ட்ரெண்ட்டின் படி. திரையரங்குகளில் படங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர்த்து, இன்றைக்கு இதர வாய்ப்புகளாக உருவாகி இருக்கும் தொலைக்காட்சி உரிமை, ஒடிடி உரிமை. இதர மொழிகளுக்கான உரிமை உட்பட இதர அம்சங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் இன்று அதிகரித்து இருக்கிறது.

அப்படியென்றால் தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம்தான் என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. வருஷம் முழுக்க கஷ்டப்பட்டு பார்க்கும் வேலைக்கு ஒரு வழியாக இன்க்ரிமெண்ட் போட்டுவிட்டார்கள் என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் போதே, காஸ் விலை, பெட்ரோல் விலை, கரண்ட் கட்டணம் என எல்லாவற்றுக்கும் விலை, கட்டணத்தை அரசு பொசுக்கென்று ஏற்றிவிட்டால் எப்படியிருக்கும். அப்படியொரு ஷாக்கில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
ஏன் இந்த ஷாக்?

‘முதலாளி’ என தயாரிப்பாளர்களை மரியாதையுடன் கொண்டாடிய எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பெரிய ப்ரொடக்‌ஷன் கம்பெனிகளில் ‘கதை இலாகா’ என்று ஒரு தனி டீம் இருந்தது. எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த இயக்குநராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த கதை இலாகா தோள் கொடுக்கும். இது இப்போது வரலாறு. அருமையான கதை. அளவான பட்ஜெட். பக்காவான திட்டமிடல். இதுதான் அப்போதைய சக்ஸஸ் ஃபார்மூலா.

ஆனால் நிலைமை இன்று அப்படியே உல்டாவாகி இருக்கிறது.

ஹிட் கொடுக்கும் ஒரு ஹீரோ. கமர்ஷியல் படமாக எடுக்கத் தெரிந்த ஒரு டைரக்டர். இந்த இருவரின் கூட்டணி ஒகே என்று சொன்னால், கதையும் தேவை இல்லை. பட்ஜெட்டும் தேவை இல்லை. ரன் வட்டிக்கு கடனை வாங்கியாவது பணத்தை செலவழிப்பது. படமெடுத்து அதில் கொஞ்சம் லாபம் பார்ப்பது. இதுதான் இன்றைய ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. இதுதான் தயாரிப்பாளர்களின் ஒரே நோக்கமாகவும் மாறியிருக்கிறது.

இந்த பிஸினெஸ் மாடல் திரைப்படங்களை திரையரங்குகளுக்கு எடுத்து செல்ல உதவும் டிஸ்ட்ரிபியூட்டர்களை வெகுவாக பாதித்து இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இது புலி வாலைப் பிடித்த கதையாக தயாரிப்பாளர்களுக்கும் பின்னாட்களில் பிரச்சினையாக மாற வாய்ப்புகள் இருக்கிறது.

இது போன்ற பஞ்சாயத்துகளால் தெலுங்கு சினிமாவும் இப்பொழுது ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. தெலுங்கு சினிமாவில் படம் எடுக்கப்படும் முறை மாறியிருக்கிறது. தயாரிப்பு செலவு முன்பு இருந்ததை விட திடீரென உயர ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர்கள் தங்களது சம்பளத்தை இப்பொழுது மளமளவென உயர்த்திகொண்டே போவது. இதனால் படம் பிஸினெஸ் ஆனால் கிடைக்கும் அதிகப்பட்ச வருவாயை படத்தை முடிப்பதற்கு செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த மாற்றம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய காரணம் என்ன?

non-theatrical revenues ஆக புதிய வருவாய் வாய்ப்புகள் உருவாகி இருக்கும் அதேவேளையில் கமர்ஷியல் நடிகர்களின் சம்பளம் நான்கு மடங்கு வரை உயர்ந்திருக்கிறது என்கிறார் விஜய்யை வைத்து ‘வாரிசு’ படமெடுத்து இருக்கும் தில் ராஜூ.

மேலும் அவர் கூறுகையில், ‘’குறைந்தது 5 ஸ்டார் ஹீரோக்கள் [தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர்கள்] தங்களது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தி இருக்கிறார்கள்’’ என்று புன்னகைக்கிறார்.

சினிமாவிற்கு வெளியே இருந்து பார்க்கும் சாதாரண மக்களுக்கு தயாரிப்பாளர்கள் பெரும் லாபத்தை சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்க தோன்றும். ஆனால் நிலவரம் உண்மையில் அப்படி இல்லை.

காரணம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைப்பதில்லை. விளம்பரங்களிலும், சோஷியல் மீடியா ப்ரமோஷன்களிலும் சொல்லும், குறிப்பிடும் தொகையை லாபமாக இருப்பதும் இல்லை என்பதே உண்மை.

உண்மையான கலெக்‌ஷன் கணக்கு எது?

கலெக்‌ஷன் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை சுருக்கமாக சொன்னால், ஒரு படம் இருநூறு கோடி கலெக்‌ஷன் செய்கிறது என்று வைத்து கொள்வோம். இது ஒட்டுமொத்த கலெக்‌ஷனான ‘gross’ என்பதை நினைவில் கொள்க. இதில் அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி-யை கழிக்க வேண்டும். பொதுவாக 18% விதிக்கப்படுகிறது. அப்படியென்றால் இருநூறு கோடி கலெக்‌ஷனுக்கு 36 கோடி ஜி.எஸ்.டி போய்விடும்.

படத்தை திரையிட திரையரங்குகளுக்கு கொடுக்கும் வாடகையாக ஒட்டுமொத்த கலெக்‌ஷனில் 25%-ஐ தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். படத்தை விநியோகம் செய்யும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் 110 கோடி ரூபாய் வரை ’share’ ஆக வாங்கி கொள்கிறார்கள். ஆனால் இதே டிஸ்ட்ரிபியூட்டர்கள் திரும்பி கொடுக்க தேவையில்லாத அட்வான்ஸ் ஆக Non-Returnable Advance அடிப்படையில் படத்தை வாங்கி வெளியிட்டால் இன்னும் கூடுதலாக 25% விநியோகஸ்தர்களுக்கு போய்விடும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த கலெக்‌ஷனான 200 கோடியில் வெறும் 85 கோடி மட்டுமே கையில் தங்கும்.

ஒரு படத்தின் மொத்த பிஸினெஸ் மதிப்பு 100 கோடி என்று வைத்து கொண்டால் [இது தயாரிப்பாளருக்கு கிடைக்கும் பணம்], அந்த தயாரிப்பாளர் 95 கோடி வரை அட்வான்ஸாக செலவழிக்க வேண்டிய சூழல் இன்று உருவாகியிருக்கிறது. கஷ்டப்பட்டு படமெடுத்து கிடைக்கும் இந்த 5 கோடி லாபம் கூட சில சமயங்களில் பட வெளியாவது தள்ளிப்போனால் பாதிக்கப்படும். காரணம் படமெடுக்க வாங்கிய ஃபைனான்ஸ், அதன் வட்டி எல்லாம் ஆட்டோ மீட்டரை விட மிக வேகமாக எகிறிக் கொண்டே போகும்.

இதனால் ஒரு படத்தைப் பொறுத்தவரை, முதலில் செலவு செய்ய ஆரம்பிப்பவர் தயாரிப்பாளர். அந்தப் படம் வெளியாகி லாபம் பார்த்தாலும், நஷ்டமடைந்தாலும் படத்தின் ரிசல்டை பொறுத்து கடைசியாக பணத்தைப் பார்ப்பவர் அதே தயாரிப்பாளர்தான். அப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் முதல் டெக்னிஷியன்கள் அனைவருக்கும் அவர்களது சம்பளம் ஏற்கனவே செட்டில் செய்யப்பட்டு இருக்கும். பைனான்ஷியர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகியிருக்கும்.
இன்று படங்களின் உரிமையை கொடுப்பதன் மூலம் ஒடிடி-யில் அதிக பணம் வருகிறதே அப்படி இருக்கும் போது ஏன் இந்த பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள் என்று தோன்றலாம். எந்த ஒரு ஒடிடி தளமும் பணத்தை அட்வான்ஸாக கொடுப்பது இல்லை.

ஒரு படம் தங்களது ஒடிடி தளத்தில் வெளியாகி ஒரு மாதம் கழிந்த பின்னரே அதற்கான பணத்தை கொடுக்கிறது. இதனால் ஒடிடி பணத்தை நம்பி இருக்க முடியாது. படத்தை குறித்த தேதியில் வெளியிட வேண்டுமென்றால் ஃபைனான்ஸ் வாங்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளருக்கு உண்டாகிறது. நட்சத்திரங்களுக்கான ஜி.எஸ்.டி மற்றும் டிடிஎஸ் போன்ற கட்டணங்களையும் தயாரிப்பாளரே கட்ட வேண்டும் என்பது கூடுதல் சுமை.

இது போன்ற மாற்றங்களால் இன்று தயாரிப்பாளர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதில் தெலுங்கு சினிமா மட்டுமில்லை. தமிழ் சினிமாவும் இந்த நெருக்கடி பட்டியலில் எப்பொழுதோ நுழைந்து விட்டது.

ஒரு வசனகர்த்தாவின் புத்திசாலித்தனத்தில் எழுதப்படும் வசனத்தைப் பேசி கைத்தட்டல் வாங்கும், இயக்குநரின் ஆளுமையை தனது ஹீரோயிஸமாக காட்டி ரசிகர் வட்டத்தை உருவாக்கும், ஸ்டண்ட் மாஸ்டரின் ஆக்‌ஷனை அப்படியே செய்து காட்டி கமர்ஷியல் வேல்யூவை ஏற்படுத்தும், டான்ஸ் மாஸ்டரின் வசீகர மூவ்மெண்ட்களை ஆடிக்காட்டி, காஸ்ட்யூம் டிசைனரின் அழகியலை வைத்து தனது அழகை மெருகூட்டும்…இப்படி அனைத்து விதமான இண்டலெக்சுவல் ப்ராபர்டிகளையும் கடன் வாங்கி திரையில் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களுக்குதான் இப்பொழுதும் மவுசு.

ஆக எல்லோருடைய திறமைகளையும் வைத்து கல்லா கட்டும் நட்சத்திரங்கள் தங்களுக்கென உருவாக்கும் ஒரு அடையாளமாக சம்பளத்தை மட்டும் வைத்து கொண்டு போடும் ஆட்டம் இனியாவது மாறவேண்டும் என்று தெலுங்கு சினிமாவில் சலசலப்பு ஆரம்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...