No menu items!

தோனி – ஓய்வுப் பெறுகிறாரா? என்ன சொன்னார்?

தோனி – ஓய்வுப் பெறுகிறாரா? என்ன சொன்னார்?

தோனி ஓய்வு பெறுவாரா மாட்டாரா என்பதுதான் இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்வியாக இருந்துள்ளது.

இந்த தொடருடன் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்பதால், ஒவ்வொரு நகரிலும் சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகளைக் காண ரசிகர்கள் குவிந்தனர். மற்ற எந்த ஜெர்ஸிகளையும்விட தோனியின் 7-ம் எண் கொண்ட மஞ்சள் நிற ஜெர்ஸிகள் மிக அதிகமாக விற்பனை ஆகியுள்ளன.

ஒவ்வொரு முறையும் மைதானத்தில் உள்ள திரைகளில் தோனியைக் காட்டும்போதெல்லாம் ரசிகர்கள் குரல் எழுப்பிக் கொண்டாடினர். தோனி ஆட வரும்போது மொபைல் போனின் ஃபிளாஷை ஆன் செய்து கைகளில் வைத்து அசைத்தபடி வரவேற்றனர். தோனி ஆடுவதைப் பார்க்கவேண்டும் என்பதற்காக, அவருக்கு முன் ஆடவரும் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகவேண்டுமே என்றுகூட கடவுளை வேண்டிக்கொண்டனர்.

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு 5-வது முறையாக தோனி கோப்பையை வென்று கொடுத்ததும், அவர் இத்துடன் ஓய்வுபெறுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் இதே விஷயத்தை தோனியிடம் கேட்டார்.

வார்த்தை ஜாலங்களில் கெட்டிக்காரரான தோனி, இந்த கேள்விக்கு அளித்த பதில்…

“நான் எனது ஓய்வை அறிவிக்க மிகச் சரியான நேரமாக நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி எனது ஓய்வை அறிவிப்பது எனக்கும் எளிதான விஷயம்தான். ஆனால் அடுத்த 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிக்கிறேன். இது பெரிய சவாலான விஷயம்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்கு அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான். ஆனால் அது என் உடல் வழங்கும் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளது. அடுத்த சீசனில் ஆடுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன.

நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காக மக்கள் என்னை நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஐபிஎல் மாதிரியான ஒரு கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ஒவ்வொருவரும் தாங்களே மைதானத்தில் விளையாடுவதை போல் உணர்கிறார்கள். அதனால் ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட தங்களை என்னுள் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள் என்பதே இத்தனை அன்புக்கான காரணம் என்று கருதுகிறேன். நான் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளவில்லை. அனைத்தையும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன்.

ஐபிஎல் தொடராக இருந்தாலும் சரி… இருதரப்பு தொடராக இருந்தாலும் சரி அந்தப் போட்டிக்கேற்ற சவால்கள் இருக்கத்தான் செய்யும். சவால்களை எதிர்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தன்மை இருக்கும். வெவ்வேறு விதமான அழுத்தங்கள் இருக்கும். எங்களி அணியில் ரஹானே போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருந்தார்கள். இளம் வீரர்கள் குழப்பமான மனநிலையில் இருக்கும்போது, மூத்த வீரர்கள் அவர்களுக்கு உரிய அறிவுரைகள் சொல்லி வழிப்படுத்தினோம்.

இங்கே ராயுடுவைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். மைதானத்தில் தனது 100 சதவீத திறனையும் வெளிப்படுத்துவதில் வல்லவர் அவர். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாள்வதில் வல்லவர். மைதானத்தில் எதையாவது ஸ்பெஷலாகச் செய்வதில் வல்லவர். அவரும் என்னைப் போன்றுதான் போனை அதிகம் பயன்படுத்த மாட்டார். ” என்று தோனி கூறியுள்ளார்.

இந்த பதிலின்மூலம் இப்போதைக்கு தான் ஓய்வை அறிவிக்கப் போவதில்லை என்பதை தோனி தெரிவித்துள்ளார். அடுத்த ஐபிஎல்லில் ஆடும் விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...