No menu items!

2022 – ஓபிஎஸ் TO நயன் – ஜாலி விருதுகள்

2022 – ஓபிஎஸ் TO நயன் – ஜாலி விருதுகள்


மிஸ்டர் கைப்புள்ள 2022:

இந்த ஆண்டில் அரசியலில் அதிகம் அடிவாங்கியர் யாரென்று கேட்டால் சிறு குழந்தைகூட ஓபிஎஸ்ஸின் பெயரைச் சொல்லும். தர்மயுத்தத்தால் ஒரு காலத்தில் பிரபலமான ஓபிஎஸ்ஸுக்கு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே அடிதான். பெயரளவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஸை பொதுக்குழு கூட்டி நைசாக அந்தப் பதவியில் இருந்து கழற்றிவிட்டார் எடப்பாடி. கூடவே போனஸாக பொதுக்குழு கூட்டத்தில் தண்ணீர் பாட்டில்களால் அடியும் வாங்கினார்.

மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பக்கம் நிற்க, கொஞ்சமும் அசராமல் ‘நான்தான் அவர்களை நீக்கினேன்’ என்று அறிவித்தார். எடப்பாடியை மறைமுகமாக தேர்தல் கமிஷன் அங்கீகரித்தபோதிலும், எடப்பாடி, ஜெயக்குமார், டிடிவி தினகரன் என்று மாறி மாறி வார்த்தையால் குத்தியபோதிலும் கொஞ்சம்கூட வலிக்காதவர்போல் ‘அது போன மாசம்’ என்று விறைப்பாக தன் தர்ம யுத்தத்தை தொடரும் ஓபிஎஸ்ஸுக்கு மிஸ்டர் கைப்புள்ள 2022 விருதை பார்ஸல் செய்யலாம்.

மிஸ்டர் ‘No’ 2022:

மாநில அரசு எந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பினாலும், ‘இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்’ என்று குப்பைத் தொட்டியில் போட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிதான் இந்த ஆண்டின் மிஸ்டர் நோ. அவருக்கு ‘மிஸ்டர் மாட்டேன்’ விருதை கொடுக்கலாம். இந்த விருதுடன் சனாதனம் தொடர்பான சில நூல்களும் போனஸ் பரிசு.

மிஸ்டர் ‘எண்டர்டெயின்மெண்ட்’ 2022:

தமிழக அரசியலில் அடிக்கடி ட்விஸ்ட்களைக் கொடுத்து 2022-ல் எல்லோரையும் எண்டர்டெயின் செய்தவர் அண்ணாமலைதான். ‘நான் 20 ஆயிரம் புத்தகங்களை படித்தவன்’ என்ற இவரது ஸ்டேட்மெண்ட், ட்விட்டர்வாசிகளுக்கு பல நாட்களுக்கான கண்டென்டைக் கொடுத்தது. இந்த விஷயம் முடிவதற்குள் பத்திரிகையாளர்களைக் குரங்கு என்று திட்டி அடுத்த மேட்டரை எடுத்துக் கொடுத்தார். அக்கா – தம்பி ஆபாசஆடியோ பேச்சு, கட்சிக்குள்ளேயே மோதல்கள் என கட்சிக்குள்ளேயே கேசவ விநாயகம் கோஷ்டியுடன் மல்லுக்கட்டினார். ஆண்டு முடியும் நேரத்தில்கூட தனது ‘ரஃபேல்’ வாட்ச் மூலம் சூப்பர் பொழுதுபோக்கை கொடுத்த இவருக்கு ‘மிஸ்டர் கண்டெண்ட்’ விருதையும், கூடுதல் பரிசாக சில ஆட்டுக்குட்டிகளையும் வழங்கலாம்.

மிஸ்டர் ஷோ மேன் 2022:

இந்த ஆண்டு மட்டுமல்ல இந்திய அரசியலில் கடந்த 8 வருடங்களாக எல்லா ஆண்டிலுமே இவர்தான் ஷோ மேன். அவர் நமது பிரதமர் மோடி. எந்த இடத்துக்கு எந்த வேஷத்தில் வரவேண்டும், எந்த இடத்தில் நின்றால் போட்டோ நன்றாக வரும் என்று அவரைவிட நன்றாக தெரிந்தவர் யாருமில்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கிவைக்க வேட்டி சட்டையில் வந்தவர், கேதார்நாத்துக்கு போனபோது ஹிமாச்சலப் பிரதேசத்தின் ’சோளா டோரா’ உடையை அணிந்து சென்றார். தீபாவளியன்று ராணுவ வீரர்களின் உடையில் அவர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பஞ்சாப் தேர்தலில் சர்தார்ஜியாக வேஷம் கட்டினார். இந்த ஆண்டிலும் சூப்பர் ஷோ மேன் அவர்தான்.

மிஸ்டர் ஸ்பீட் 2022:

இந்த வருடத்தின் மிஸ்டர் ஸ்பீட் விருது புதிதாய் அமைச்சராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக அரசியலுக்கு வந்தார். திமுகவுக்காக செங்கலைக் காட்டி வாக்கு சேகரித்தார். தேர்தலில் திமுகவுக்கு பெரும் வெற்றி. மே மாதம் பிரச்சாரம் ஜூலை மாதம் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி. 2021 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. அடுத்து 2022ல் அமைச்சர். விரைவில் துணை முதல்வர் என்ற குரல்கள் திமுகவிலேயே கேட்கின்றன. அரசியல் மட்டுமில்லாமல் அவரது ரெட்ஜெயண்ட் திரைப்பட நிறுவனத்துக்கும் அசுர வளர்ச்சி. இத்தனை வேகத்தை காட்டியிருக்கும் உதயநிதி ஸ்டாலின்தான் இந்த ஆண்டின் மிஸ்டர் ஸ்பீட்.

மிஸ்டர் ’கண்டெண்ட்’ 2022:

இந்த ஆண்டில் பலரது வாய்க்கு அவலாக மாறியவர் என்ற பெருமை (!) இளையராஜாவையே சேரும். அம்பேத்கரையும் மோடியையும் இணைத்துப் பேசியதால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பலராலும் வம்புக்கு இழுக்கப்பட்டார் இளையராஜா. ‘என்ன இருந்தாலும் நமக்காக ஆயிரக்கணக்கான நல்ல பாடல்களைக் கொடுத்த இளையராஜாவை இப்படி திட்டலாமா?’ என்று பரிதாபப்படும் வகையில் அடிகளை வாங்கினார்.

அவரது இந்த காயங்களுக்கு ராஜ்யசபா எம்பி விருது மருந்திட்டது. ஆனால் அத்துடன் நிற்காமல் காசி தமிழ் சங்கமத்தில் “முத்துசாமி தீட்சிதர் கங்கை நதியில் மூழ்கி எழும் பொழுது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையைப் பரிசளித்திருக்கிறார். அந்த வீணை தற்போது வரை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது” என்று இளையராஜா சொன்னது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்படி ஒரு வீணையே அருங்காட்சியகத்தில் இல்லை என்று சமூக வலைதளத்தில் பலரும் அவரைக் காய்ச்சி எடுத்தனர்.

மிஸ்டர் அண்ட் மிசஸ் 2022:

கல்யாணமான 4 மாதத்திலேயே நாங்க அம்மா அப்பா ஆகிட்டோம் என்று அறிவித்து பரபரப்பை கிளப்பினார் விக்னேஷ் சிவன். திருமணமாகி 4 மாதத்தில் நயன்தாரா அம்மாவானது எப்படி என்று எல்லோரும் குழம்பிக்கொண்டிருக்க, வாடகைத் தாய் என்று சொல்லி வைரலானார். ஜூன் மாதம் கல்யாணம் செய்து அக்டோபர் மாதம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த நயன் – விக்னேஷ் சிவன் தான் இந்த ஆண்டின் சிறந்த மிஸ்டர் அண்ட் மிசஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...