No menu items!

அமைச்சரவை மாற்றம் – உள்ளே யார்? வெளியே யார்?

அமைச்சரவை மாற்றம் – உள்ளே யார்? வெளியே யார்?

இப்போது தமிழ்நாட்டின் ஹாட் நியூஸ் அமைச்சரவை மாற்றம்தான்.

இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அந்த கிசுகிசுக்கள் கோட்டை வட்டாரத்தில் சூடுபிடித்துவிட்டது.  

2022 டிசம்பர் மாத மத்தியில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறார் என்ற செய்திகள் பரவின. அப்போதே அமைச்சரவையிலிருந்து சிலர் கழற்றி விடப்படுவார்கள் என்ற பேச்சு கிளம்பியது.  டிசம்பர் 14ஆம் தேதி அவர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  ஆனால் அமைச்சரவையிலிருந்து யாரும் நீக்கப்படவில்லை. சில இலாகா மாற்றங்கள் மட்டும் நடந்தது.

புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கொடுக்கப்பட்டது. அந்தத் துறையை கவனித்துக் கொண்டிருந்த மெய்யநாதன் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையையும் முன்னாள் ராணுவத்தினருக்கான துறையையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் அமைச்சரவையில் வேறு சில இலாகா மாற்றங்களும் நடந்தன.

கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரானார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பன், கூட்டுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்.

வனத்துறை அமைச்சராக இருந்த கே.ராமச்சந்திரன், சுற்றுலாத்துறைக்கு மாறினார்.

இந்து அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபுவுக்கு, சென்னை மெட்ரோ வளர்ச்சிக் குழுமம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த.மதிவேந்தன், வனத்துறைக்கு மாற்றப்பட்டார்.

இப்படி சில மாற்றங்கள் நடந்தன. இது ஸ்டாலின் முதல்வரான பிறகு நடந்த இரண்டாவது அமைச்சரவை மாற்றம்.

இதற்கு முன்பு நடந்த அமைச்சரவை மாற்றத்தில்  போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், சாதிய ரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியதையடுத்து, அவரிடமிருந்த துறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான சிவசங்கரிடம் தரப்பட்டது. சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ராஜ கண்ணப்பனுக்கு அளிக்கப்பட்டது.

இப்போது மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மே 23ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு முதலீட்டு பயணம் மேற்கொள்கிறார். மே 31 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். அவர் வெளிநாட்டு பயணத்துக்கு போகும் முன் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் மூன்று அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

பால்வளத் துறையை கவனித்துக் கொண்டிருக்கும் ஆவடி நாசர். இவர் மீது பல புகார்கள் கூறப்படுகின்றன. பால் கொள்முதல், விநியோகம் இவற்றில் ஏற்பட்ட சிக்கல்கள் இவரது பதவியைப் பறிக்கலாம்.

இவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் அமைச்சரவையிலிருந்து நீக்குவது சரியாக இருக்காது, அதுவும் 2024 நாடளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இதை செய்ய வேண்டுமா என்றும் முதல்வரிடம் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவர் பதவி தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜின் பதவிக்கும் ஆபத்து காத்திருக்கிறது. வேங்கைவயல் பிரச்சினையில் இவர் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற புகார் இவர் மீது இருக்கிறது. அதனால் இவருடைய பதவிக்கும் ஆபத்து வந்திருக்கிறது. இவருக்குப் பதில் சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா அல்லது மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கயல்விழி சமூகத்தை சார்ந்தவர்கள். கயல்விழிக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்படுமாம்.

சுற்றுச் சூழல் அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் சிக்கல்கள் இருக்கிறதாம். இவர் மீதும் பல புகார்கள் வந்திருக்கின்றன. அத்தனையும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டிருக்கின்றன. அதனால் இவரை மாற்றிவிடவும் முதல்வர் முடிவெடுத்திருக்கிறார் என்று அறிவாலய செய்திகள் சொல்லுகின்றன.

இவர்கள் தவிர வேலூர் காந்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பெயர்களும் கெட் அவுட் பட்டியலில் இருக்கின்றன.

மிக முக்கியமான மாற்றமாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருக்கும் நிதித் துறை தங்கம் தென்னரசுவிடம் செல்லும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. பிடிஆருக்கு தொழில் துறை அல்லது தகவல் தொழில் நுட்பத் துறை வழங்கப்படும்.

நீக்கல்கள் தவிர சேர்த்தல்களும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் இருக்குமாம்.

டி.ஆர்.பாலுவின் மகன் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இது இவரது நீண்டகால கோரிக்கை. அதற்கு இப்போது நேரம் வந்திருக்கிறது என்கிறார்கள். இதுவரை அமைச்சரவையில் டெல்டா பகுதியை சார்ந்தவர்கள் இல்லை. அந்த குறை ராஜா மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

தமிழக அமைச்சரவையில் முதல்வரையும் சேர்த்து 35 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதுதான் உச்சபட்ச அளவு. புதிய அமைச்சர்களை சேர்க்க வேண்டுமென்றால் இருக்கும் அமைச்சர்களை நீக்கினால்தான் சேர்க்க முடியும். அதனால் நிச்சயம் இந்த முறை அமைச்சரவை மாற்றத்தில் நீக்கங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...